நீ என் வேரானவள்

நீ வேறு
நான் வேறு

நீ செயல்களாலானவள்
நான் எண்ணங்களாலானவன்

நன்றியை உணர்த்த
நீ வாழ்த்து அட்டைகளை வழங்குகிறாய்
நான் பார்வையிலேயே பகிர்ந்துகொள்கிறேன்

பயணத்தை பகிர
நீ நான்கு பக்க கட்டுரை எழுதுகிறாய்
நான் நான்கு வரி கவிதை எழுதுகிறேன்

செயல்களை உணர
நீ விளைவுகளை தேடுகிறாய்
நான் வேர்களை தேடுகிறேன்

புத்தனை புரிந்துகொள்ள
நீ புத்தகங்களை நாடுகிறாய்
நான் போதி மரத்தை தேடுகிறேன்

உண்மையைத் தேட
நீ அரசன் எழுப்பிய புறக்கோயிலை சுற்றுகிறாய்
நான் பூசலார் எழுப்பிய அககோயிலில் அமர்கிறேன்

வாழ்வின் பக்கங்களை
நீ ஸ்தூலமாக்குகிறாய்
நான் சூட்சுமாக்குகிறேன்

வாழ்வின் அர்த்தத்தை
நீ பருபொருளில் தேடுகிறாய்
நான் பரம்பொருளில் தேடுகிறேன்

இன்னொரு முறை சொல்கிறேன்
நீ வேறு
நான் வேறு
இருப்பினும்
நீ என் வேரானவள்

எழுதியவர் : sunflower (24-Nov-15, 5:14 am)
பார்வை : 84

மேலே