தேவதைகள் தூங்குகிறார்கள் -10

"ஹலோ..ஹலோ..... கட்டுப்பாட்டு அறை........?

"எஸ்......சொல்லுங்க...."

"ரகசிய விசாரணைல வச்சி இருந்த தீவிரவாதிய காப்பாத்த அவனோட ஆளுங்க வந்து இன்ஸ்பெக்டர சுட்டுட்டு அவன கூட்டிட்டு போய்ட்டாங்க....கொஞ்சம் உடனே வாங்க" -இடத்தின் தகவலை தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்தார் வெங்கட்.

"தூரத்தில், போலிஸ் வண்டிகளின் சத்தம் கேட்டது. ஓடிக்கொண்டிருந்த எங்களின் வேகம் இன்னும் இரட்டிப்பானது. ஆனால் உடலில் வலுவோ மெல்ல மெல்ல குறைந்து கொண்டே போனது....போலீசின் அடிகளிலேயே சக்திமுழுவதும் போய்விட்டது....இப்போது ஓடுவது என் கால்களுக்கே ஆச்சர்யம்தான். மனக் குதிரை வேகத்தை முன்னிறுத்த உடல் ஒத்துழைத்துதானே ஆக வேண்டும். அந்த குதிரையின் மேல் அமர்ந்து அதை தட்டி தட்டி பறக்க செய்பவள் என் விஷாந்தினியே .......அவள் ஒரு மாயக்காரி ...இல்லை எனில் புரட்சி, சித்தாந்தம் என போர்க்களத்தில் வாளோடு நிற்பவன் இப்படி யாரென்றே தெரியாதவர்கள் பின்னே ஓடுவேனா?....."

இந்த எண்ணம் தோன்றியதும் என் இடுப்பின் பின்னே மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, இருக்கிறதா என ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டேன். ஆம்! இவர்களை நான் காவல் நிலையத்தில் சந்தித்து சந்தேகித்தபோதே சுருண்டுகிடந்த இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டேன்.

"இது எந்த இடம்? என்னை எங்கே வைத்து விசாரித்தார்கள் ? என்னை இப்போது இந்த நான்கு பேரும் எங்கு கொண்டு செல்கிறார்கள்? ஒன்றும் புரியவில்லை...காலம் யோசிக்க யோசிக்க.. மனம்... விஷாந்தினியை சுற்றியது...இந்தப் பௌர்ணமி வானமும் முழு நிலவும்...என் விஷாவையே நினைவூட்டுகிறது? அதிலும்....அவளை பார்த்த அந்த முதல் நாள் இரவில்.... மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், ஒரு சித்திரக்காரன் சித்திரம் வரையும் நேர்த்தியோடு, நெற்றியில் விழுந்த முடியை சரி செய்த அழகிருக்கிறதே...இதோ என்னோடு ஓடி வந்த இந்த முழு மதியை முகிலினங்கள் மறைத்து விலகுதல் போல் என் பிறவி சாபம் நீக்கும் காட்சி அது....இப்போது எங்கே இருக்கிறாளோ, என்ன துன்பம் அடைகிறாளோ ...என் வரவை நிச்சயம் எதிர்பார்த்தவளாக தவித்திருப்பாள் ...இதோ வந்து கொண்டிருக்கிறேன் என் உயிரே .."-மனம் பர பரவென யோசித்துக் கொண்டும்... பாவித்துக் கொண்டும் இருந்தது...

"தொடர்ந்து இவர்களோடு ஓடுவதால் விஷாந்தினியை கண்டுபிடிக்க முடியுமா? இல்லை இவர்களை பிரிந்து வேறு திசையில் ஓடுவதா? யார் இவர்கள்? என்னை ஏன் காப்பாற்றினார்கள்? நான் ஏன் இன்னும் இவர்கள் பின்னே ஓடுகிறேன்? என கேள்விகள் எழும்பி அடங்குவதற்குள் ஓடிக்கொண்டிருந்தவர்கள் திடீரென நின்றனர்....ஒன்றும் புரியாமல் நானும் நின்றேன்...நால்வரும் மூச்சிறைக்க ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், பின்பு ஒட்டுமொத்த கண்களும் என் மீது விழுந்தது....அடுத்த நொடியே அவர்களின் கைகள் பின்புறம் சென்றது....

துப்பாக்கிகள்!!...!

நான்குபேரின் கைகளிலும்...துப்பாக்கிகள்....

என்னை குறிபார்த்தது. ஓரளவு எனக்கு புரிந்துவிட்டது.

"அசையாத, அசைஞ்ச..... நீ... செத்த..." என்று கூறிய கூட்டத்தில் ஒருவன்...ஒரு கையில் துப்பாக்கியை பிடித்தபடியே மற்றொரு கையில் அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தான்.

"சார்! அவனை போலீஸ்கிட்ட இருந்து தூக்கிட்டோம், எந்த பிரச்சனையும் இல்ல , ஆமா சார் ...இதோ இன்னும் 20 நிமிஷத்துல அங்க இருப்போம். ..... சரிங்..சார் ...நான் பாத்துக்கறேன், ஓகே சார்...."- என்று அலைபேசியில் பதில் அளித்துக் கொண்டே..."டேய் அவன வண்டில ஏத்துங்கடா"-என்றான், கட்டளையிடும் தொனியில்...

அங்கே நிறுத்தப்பட்டிருந்த மாருதி வேனில் நான் நெம்பித் தள்ளப்பட்டேன்.

"என்னைக் கடத்துமளவுக்கு யார் இருக்கிறார்கள்? இவன் இப்போது யாருடன் போனில் பேசினான்? எப்படியோ இவர்களிடமிருந்து தப்பித்தாக வேண்டும். இவர்களைக் கண்டு எனக்கு பயம் இல்லை; ஆனால் நானே கடத்தப்பட்டுவிட்டால் விஷாவை யார் மீட்பார்கள்? அவளின் தந்தையும் இப்போது உயிரோடு இல்லை. விபத்து என்றுதானே ஆதி சொன்னான் ,கொலை என்று இன்ஸ்பெக்டர் சொன்னாரே....எது உண்மையாக இருக்கும்? யார் விஷாவை கடத்தினார்கள்? என்னை யார் இப்போது கடத்துகிறார்கள்? ஒருவேளை இந்த மூன்று சம்பவங்களுக்குப் பின்னும் ஒருவன்தான் இருக்கக்கூடுமா? இல்லை வேறுவேறு நபர்களா? ஐயோ ! யோசிக்க யோசிக்க தலை சுற்றுகிறதே........எனக்கு இன்னும் 20 நிமிடங்கள்தான் இருக்கிறது...அதற்குள் ஏதாவது செய்யவேண்டும்..... "

கார் சாலையில் வழுக்கிக்கொண்டு பறந்தது. இருபுறமும் நெடுந்துயர்ந்த மரங்கள் கரும் பூதங்கள்போல் பார்த்தன. ஏதோ காட்டுக்குள் போகும் சாலையாக இருக்கக்கூடும். இரண்டு அடியாட்கள் என்னை நெருக்கியபடி துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்கள். ஒருவன் காரை செலுத்த மற்றவன் அவன் அருகில் உட்கார்ந்திருந்தான்.

"சீக்கிரம் யோசி விஜி....சீக்கிரம்...."

ஓடி வந்த போது இருந்த பௌர்ணமி வெளிச்சம் இப்போது இல்லை. சட்டென்று கண்ணாடியின்மீது கற்களை வீசுவது போல் மழைத் தூரல்கள் விழத் தொடங்கின .... சிறுது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத்தது. கண்ணாடியில் வழியும் மழைநீரை துடைப்பான் ஒதுக்கி, சாலையை காட்டியது. சட்டென கார் நின்றது.

"ஏன்டா வண்டிய நிறுத்திட்ட ?" என்றான் ஒருவன்

"அங்க பாருண்ணே...எவ்ளோ பெரிய மரக்கிளை.. மழைக்கு உடஞ்சிருக்கும்னு நெனைக்குறேன்..."-என்றான் இன்னொருவன்

"சரி வண்டிய குறுக்கு வழியில விடு..."

"இந்த எடத்துல குறுக்கு வழி இல்லண்ணே, ஒன்னு இத தாண்டி முன்னாடி போகணும், இல்ல வந்த வழியே கொஞ்சம் பின்னாடி போகணும்...."

" சரி இரு... நாங்க போய் கிளைய எடுக்குறோம், நீ வண்டிய முன்னாடி ஓட்டிட்டு வா..."-என்று வண்டிய விட்டு இறங்கியவன், "" டேய்.... நீ என்கூட வா "-என்று ஒருவனைக் கூப்பிட்டுக் கொண்டே இன்னொருவனைப் பார்த்து....."நீ அவன பத்ரமா பாத்துக்க...அசஞ்சானா போட்ரு....."- என்று கடுமையாக சொல்லிவிட்டு, என்னை முறைத்தபடி இறங்கினான். என் வலது பக்கத்தில் இருந்தவனும் அவனோடு இறங்கிபோனான்.கார் வைப்பருக்கு இடைப்பட்ட காட்சியில் அவர்கள் மழையில் நனைந்தபடியே மரக்கிளையை நகர்த்திக்கொண்டிருந்தது தெரிந்தது.

"விஜி இதைவிட ஒரு சந்தர்ப்பம் உனக்கு வாய்க்கவே முடியாது... கமான் விஜி...."-மூளை வேலையைக் காட்டியது

"டுமீல்....டுமீல்..."

"அண்ணே...அண்ணே" என்று தூரத்தில் இருப்பவர்களை நோக்கி கதறினான்....உள்ளிருந்தவன். கார் கதவை திறந்து ரத்தம் தோய்ந்தபடி இறந்துகிடக்கும் அவனது கூட்டாளியை பார்த்தபடியே.

ஆம்... என் சந்தர்ப்பத்தையும், துப்பாக்கியையும் எனக்கு காவல் இருந்த இருவர் மீதும் பயன்படுத்திவிட்டேன். ஒருவன் காலி.... இன்னொருவன்... கத்த மட்டும் முடிகிற அளவு...

கண நேர சல சலப்பு...

அவர்கள் ஆளுக்கொரு பக்கம் ஓடும் சத்தம் எனக்கு கேட்டது. இவர்களிடமிருந்து தப்பிக்கத்தான் அவர்களை சுட்டேன்; ஆனால் இவர்களை பின்தொடர்ந்தால்தான் எனது பல கேள்விகளுக்கு விடை காண முடியும். எனவே, இவர்களுக்கு தெரியாமல் இவர்களை தொடரும்பொருட்டு, காரின் டிக்கியில் பதுங்கிக் கொண்டேன். புலி தன் வேட்டையை காட்டுக்குள் தான் தேடும், தன் குகைக்குள் இல்லை. இவர்கள் நிச்சயம் நான் இங்கிருப்பதை கண்டுபிடிக்க மாட்டார்கள்.

"அண்ணே எங்கயும் காணல..."-முதாலாமவன்...
"ஆமாண்ணே நானும் தேடிட்டேன்..."-வலது கையில் குண்டு பட்டவனும்... அவன் வேலையை செய்தான்
"போங்கடா ..புண்ணாக்கு பசங்களா...இப்போ சாருக்கு என்ன பதில் சொல்றது...சரி சீக்கிரம் வண்டிய எடு...."-இந்தக் கூட்டத் தலைவன் கத்தினான்

சில நிமிட பயணத்துக்குப் பிறகு காரை நிறுத்தி, ஒலிப்பானை அழுத்தினார்கள். வாயிற் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. வர வேண்டிய இடத்திற்கு வந்தாயிற்று என நினைக்கிறேன். எந்த இடமாக இருக்கக்கூடும்...விஷாவை இங்கே வைத்திருப்பார்களா? என் இதயத்துடிப்பு வெளியில் கேட்கும் அளவுக்கு சத்தமானது.

காரை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கினார்கள், இறந்தவனைத் தூக்கிக்கொண்டு கதவை மூடினார்கள். அவர்கள் போய் இருக்ககூடும் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு டிக்கி கதவை மெல்ல தூக்கிப் பார்த்தேன். வாயிற்கதவுக்கு அருகில் இரண்டுபேர் காவலுக்கு நடந்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனியாத நேரமாய் பார்த்து லாவகமாய் வெளியில் வந்து அந்த வீட்டின் தூணுக்குப்பின் ஒளிந்துக்கொண்டேன். சுற்றிலும் அடர்ந்த காடு, இருட்டில் இன்னும் அடர்ந்திருந்தது. காட்டுக்குள் இப்படி ஒரு வீடா... இருட்டில் ஆங்காங்கே கோடுகள் கிழிக்கும் மின்மினி பூச்சிகளாய் வீட்டுக்குள்ளே அங்கும் இங்குமாய் வெளிச்சம் தெரிந்தது.

"டேய் முட்டாப்பசங்களா... முட்டாப்பசங்களா....ஒன்னுத்துக்கும் ஒதவாத தடிமாடுங்கடா நீங்க...உங்கள போய் அனுப்பன பாரு ..."

இது புது குரலாக இருக்கிறதே...இவன்தான் அந்த 'சாராக' இருக்க வேண்டும். பேச்சுக்குரல் தெளிவாகக் கேட்டது...

இல்ல சார்...நாங்க எல்லாம் சரியா முடுச்சிட்டோம்....பாழாப்போன அந்த மரத்தாலதான்...

"வாய தொறக்காத...எனக்கு வர ஆத்ரத்துக்கு உங்கள போட்டுட்டு போயிட்டே இருப்பேன்....

"டேய் சிவா..."

"சார்...."

"தப்பிச்சவன் கண்டிப்பா அவள தேடித்தான் வருவான் ...அவள பத்ரமா பாத்துக்க...தப்பிச்ரவே கூடாது ..."

ஓகே சார் ...

டக்...டக்...டக்...டக்..டக்...

யாரோ மாடிப்படி ஏறும் சத்தம் கேட்டது.......

தொடரும்...


*கதையை தொடர விரும்புவோர்... தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும்...

எழுதியவர் : மேரி டயனா (27-Nov-15, 9:24 pm)
பார்வை : 263

மேலே