காலைச் சாரல் 21 - மழைக்குப் பின்

27-11-2015

காலைச் சாரல் 21 - மழைக்குப் பின்

வெய்யில் இருக்க மாடத்தில் இதமான சூடு... வேப்ப மரமும், கருவேப்பிலை மரமும், தொடர் குளியலில் பளிச் பச்சை.... அடுத்த குளியலுக்கு ஏங்குவதுபோல் இருந்தது... குயில்கள், காகங்கள், புறாக்கள், மைனாக்கள், சற்று பெரிய குருவி, அந்த சின்னப் பறவை, பட்டாம் பூச்சிகள், அணில்கள் எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன....

பத்தொன்பது நாட்களுக்குப் பின் மீண்டும் இன்று (வியாழன், 26-11-15) பள்ளிக்கூடம்....

இன்றும் லீவு வேண்டும் என்ற ஆரம்பப் போராட்டத்திற்குப் பின் (என்றும் நடப்பது தான்) குளித்து, சீருடை அணிந்து கிளம்பியாகி விட்டது ஸ்கூட்டியில். பேத்தியின் விடாத "பாத்து ஓட்டு, பாத்து ஓட்டு" அறிவுரை கேட்டு, பள்ளங்கள், குண்டு குழிகள், சிறு நீர்த்தேக்கங்கள் இடையே தட தடக்கும் வீதியைக் கண்டு பிடித்து செல்லும்போதே கேட்கிறாள் "இன்னிக்கு லேட்டா சீக்கிரமா...?"

ஸ்கூட்டி சாகசத்தில் கவனமாக இருக்க, எதிரே வரும் பெரிய வண்டிகள் என்னைத் துச்சமாகவே மதித்து வழி விட மறுத்தன.... (நாலு சக்கர மிதப்பு). வழி நெடுக இயற்கை ஆர்வலர்கள் வீதியின் நடுவில் மரங்கள் நட்டு வைத்து இருந்தார்கள்.. சில கழிவு நீர் பள்ளத்திலும், மழை நீர் வடிகால் கால்வாய்கள் உடைப்புகளிலும் மரங்கள் நடப்பட்டிருந்தன...

பல வருட ஆராய்ச்சியின் பயனாக, தண்ணீர் தெருவின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்ல தெருவை வெட்டுவதே சிறந்த வழி என்ற கண்டுபிடிப்பை பத்தடிக்கு ஒரு முறை நிறுவியிருந்தார்கள்... ஒரு குறிப்பிட்ட இடத்தில் தெருவின் ஒரு பக்கத்தில், இரண்டு அடி கால்வாய் வெகு தூரத்துக்கு வெட்டி, தண்ணீரை வெளியேற்றி இருந்தார்கள்... அப்படியும் வெளியேற மறுத்த தண்ணீரை மோட்டார் வைத்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்... ஆதிவாசி அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் (வெகு நாட்களுக்கு முன் அமைந்த) சற்றே தாழ்வான பகுதியில் இருந்ததால் இன்னும் தண்ணீர் வடியவில்லை..... சுவர்களை உடைத்தும், உயர் அழுத்த மோட்டார் பம்புகள் கொண்டும், தெருவின் குறுக்கே கால்வாய் வெட்டியும் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது... அனேகமாக இவை சில நாட்கள் தொடர, மழை நீர் அனைத்தும் கூவம் வழி கடலடையும்.... அப்படி சேராமல் தேங்கி நிற்பவை கொசுக்கள் உற்பத்தித் தலமாக அறிவிக்கப்படும். இதற்கிடையே சிலர் தங்கள் வீட்டு கழிவு நீரையும் தெருவில் கலந்தளித்துக் கொண்டிருந்தார்கள்.... அடுத்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை வெகுவாக அதிகரிக்கும் நல்லெண்ணமாகவும் இருக்கலாம்....

பேத்தியைப் பள்ளியில் விட்டு, திரும்பி வருங்கால் ஒரு ஸ்கூட்டி சாகசக்காரர் குழந்தையுடன் பள்ளத்தில் விழ, சுற்றியிருந்தவர் உதவியில் எழுந்தார்....
****

மாலை பேத்தியைப் பள்ளியிலிருந்து கூட்டி வரச் செல்ல, சிறிது முன்னதாகவே அனுப்பி வைத்திருக்கிறார்கள்.... பெரிய பெண் மகனும் அதே பள்ளியில் படிப்பதால், தங்கையைக் கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டதாகத் தகவல் வந்தது....

கூடுதலாக, வரும் திங்கட்கிழமைவரை பள்ளி விடுமுறை தொடரும்....
****

கொசுக்கள் வட்டாரத்தில் அதிகமாக இனவிருத்தி ஏற்பட்டுள்ள தகவல்கள் பரவலாக வந்துகொண்டிருக்கின்றன... கொசு ஒழிப்புப் (அழிப்புப்?) பொருட்களின் விற்பனையும் கூடி உள்ளன....
****

(ஏதாவது முத்தாய்ப்பாய் முடிப்பது வழக்கம்.... மழையில் நொந்ததால் இன்று அந்த மன நிலை இல்லை)

--- முரளி

எழுதியவர் : முரளி (28-Nov-15, 9:39 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 108

மேலே