இனிய எயிட்ஸ் தினவாழ்த்து

சுந்தரத்தில் சொக்கிச் சுயமிழந்து சொர்க்கமென்றே
அந்தரங்க இன்பம் அனுபவிக்க – தந்திரமாய்
வந்துடலில் சேருமெயிட்ஸ் வாழ்வினையே சீரழிக்க
மந்திரித்தும் போகா தது.

விந்தணுவால் தொற்றி விளைவிக்கு மாபத்தைச்
சந்தனத்தைப் பூசி மறைத்தாலும் – வந்தடைந்த
துன்பத்தை மாற்றுவது தொல்லை. எனவேநீ
உன்னுணர்வைக் கீழடக்கி வை

மானம் விலைபேசி மாதுடல் கொள்கின்ற
ஈனச் செயல்வழி இல்லற – வானின்
நிலவுக்கும் ஏற்படுத்தும் பொல்லாக் களங்கம்
இலவசமாய் நீட்டும் இழிபு

மருந்தில்லா நோயை மறைத்துவைத்து காமன்
விருந்துவைக்கும் பேயின் விசத்தை – அருந்துவதை
விட்டுவிட்டு வாழ்வில் விசுவசித்து வந்தவளை
மட்டுமென்றும் தொட்டுவிடு நன்று.

இனிய எயிட்ஸு தினவாழ்த்து என்றே
கனிவாய் திறந்து எவர்க்கும் – புனிதமுடன்
சொல்ல முடியா களங்கம் முறியடித்து
வெல்ல வரணும் விழிப்பு.

*மெய்யன் நடராஜ்

உலக எயிட்ஸ் தினம் இன்று .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Dec-15, 2:44 am)
பார்வை : 127

மேலே