கானல் தனிமை - உதயா

மென்மையாய் மேன்மையுடைய
பரிசுத்த அறைதனில் எழுதப்படுகிறது
உயிர்மெய் எழுத்துகளின் உருவங்கள்..!

தனக்காக திறக்கப்பட்ட கதவுதனை
பிளந்துக்கொண்டு மெதுவாய் மலர்கையில்
விழிநீரில் தொய்வின்றி இதழ்கள் விரிகிறது..!

சில நாட்களுக்கு முன்பு கோர்க்கப்பட்ட
கணவன் மனைவி என்ற புது உறவுகள்
தாய் தந்தையாகி பாசத்தில் மணக்கிறது..!

காலத்தின் கரைதலில் நீள்கிறது
அவள் மடியிலும் அவன் தோளிலும்
சேயின் வளர்ச்சியும் வசந்தமும்..!

சேயின் ஒவ்வொரு புன்னகையிலும்
அகிலத்தை மறந்து ஆனந்தம் கொள்கிறது
ஈன்றெடுத்த இரு நெஞ்சங்கள்..!

முட்களின் முனைதனில்
வாழ்க்கை பயணங்கள் அடைப்பட்டும்
சேய்தனை முத்தமிடுகையில்
மனம் வலிதனை மறந்து மகிழ்கிறது..!

உதிர்ந்து போன சருகினையே
உரமாக்கிக் கொண்டு வளர்கையில்
உடையும் நிலையில் இருந்த கிளைகள்
உறுதுணையாய் உருமாறிக்கொண்டது..!

காலத்தின் நீட்சியின்றி
உணர்ச்சிகள் உணரப்பட்டால்
முதுமையில் தனிமை என்பது
கானலில் மட்டும் தென்பட்டிருக்கும் ..!

எழுதியவர் : உதயா (8-Dec-15, 2:16 pm)
பார்வை : 297

மேலே