கவிதைத் தரிசனம் -சந்தோஷ்

நான்.. நல்லதொரு
மாபெரும் ரசிகனென்பதில்
எனக்கேதும் மாற்றுக் கருத்தில்லை.

எனது நேசப் பிரபஞ்சத்தில்
மனிதர்கள் யாவரும் மரித்துப்போன
இந்நூற்றாண்டின்
இறுதி அந்தியிலும்
ஒரு கவிதையை
இரசிக்கவே இன்னுமென்
சுவாசக் காற்றை நுரையீரலில்
அடைக்காத்து வைத்திருப்பதாகவே
தற்சமயம் உணர்கிறேன்

அடிவானம் வரையிலும்
விழி வலை வீசித் தேடியாயிற்று
இன்னுமெனக்கு கவிஞன் எவனும்
கிடைக்கப் பெறவில்லை.

இரசனையின் ஏக்கத்தினூடே
நூற்றியிருபது நிமிடங்கள் மரித்து
இரண்டு மணித்துளிகள் பூத்த
இலக்கிய முகூர்த்த நேரத்தில்
தென்றல் தொட்டுத்தடவிய
கடலலையில் மிதந்ததுப்போல
சில கூடைகளில் சொற்களோடு
ஒரு தமிழ்ப்படகில் வந்தான்
ஒரு கவிஞன்.

ஒரிரு கவிதைக் கேட்டேன்.
’காத்திரு ‘ என்றவன்.
ஒரு குடுவையிலிருந்த
சாராயத்தை அவனுள்
இடம் மாற்றிக் கொண்டான்.


இப்போது அவன்
போதையேற்றிக்கொண்டிருக்கிறான்.
காத்திருங்கள்....
போதையோடு
அவன் கவியெழுதும்போது
அவனென்பவன்
அவளாகவும்
அவனென்பவன்
ஒரு மழலையாகவும்
ஒரு துளி மழையாகவும்
மரங்கள் உதிர்த்த சருகாகவும்
மனங்கள் வெறுத்த ஓர் உயிராகவும்...
மாறக்கூடும்.

ம்ம்ம்
போதை தெளிந்தவுடன்
இக்கவிதையின் களமென்பது
மது விடுதியாகவோ –விலை
மாது விடுதியாகவோ
இருக்க கூடும்.
அவனென்பது
நானாகவும் இருக்க கூடும்.

பயப்படாதீர்கள்
நான் கவிஞனென
சொல்லிக் கொள்(ல்)பவனல்ல.!

**


இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (13-Dec-15, 10:28 pm)
பார்வை : 109

மேலே