என் துடிப்பின் இறுதி எழுத்து - உதயா

உயிர் அணுக்களோடு
முட்டி மோதி மாளா போர் புரிந்து
ஓர் மாதுவின் கருவறையில்
அடைக்கலம் தேடினேன்

பத்து திங்கள் பொறுத்து
என்னை பாரினில் வெளியேற்றி
ஒரு முறை பால் கொடுத்து - என்னை பாதிஉயிரோடு
தெருவில் விட்டெரிந்து சென்றாள் புண்ணியவதி

நாய்களோடும் கொசுக்கலோடும்
யுத்தம் புரிந்து குருதி சிந்தி
குப்பை தொட்டியிடம் பிச்சையெடுத்து
எனது பசியிச்சையில் ஒரு துளியை தொலைத்தேன்

ஆடையின்றி அடைக்கலமின்றி
இந்த நிர்வாண புவிக்கு துணையாக
நானும் சிலகாலம் இணைகொடுத்து
வெட்கத்தை அறியாமையில் தொலைத்திருந்தேன்

என் வயது உடையவனுக்கு
தேவையற்ற ஆடையொன்று
எனக்கு புத்தாடையானது
அதுவே முதல் ஆடையானது

என்னுள் மலர்ந்த பள்ளி ஆசைக்கு
ஒவ்வொரு பள்ளிக்கூடம் ஏறி
அதன் நுழைவு வாயிலிலே
சமாதிக் கட்டினேன்

உழைக்க வாய்ப்பு தேடி ஓடியதில்
பலர் காலிலும் கடுஞ்சொல்லிலும் நசுங்கி
எங்கோ மூலையில் கிடந்த மனிதத்தில் விழுந்து
அதிவேகமாய் விரைந்து விருட்சம் ஆனேன்

ஆங்காங்கே புதைந்திருந்த
வைரங்களை திரட்டி பட்டைதீட்டி வைத்தேன்
சிதறிக்கிடந்த முத்துகளை சேர்த்து
பளிங்கு மண்டபம் செதுக்கினேன்

வாழ்க்கையில் ஓடியே கலைத்தவன்
ஓநாயின் சதியில் என் முதுகுதுண்டு
உடைந்து சிதைந்து போனாலும்
அஞ்சி பயத்தில் அகப்படமாட்டேன்

ஓடுங்கள் ஓடுங்கள்
அனைவரும் என் முதுகுமேல்
ஏறி நன்றாக மிதித்து
நான் மடியும்வரை ஓடுங்கள்

உங்கள் மிதித்தளுக்கு பயந்து
நான் ஒதுங்கி நின்றால்
படையாக திரண்டு வாருங்கள்
என் முகத்தில் எச்சிலை உமிழுங்கள்

மாறாக உங்கள் பயணத்தை
நான் நிறைவேற்றி இருந்தால்
எனக்கு நன்றிக் கடனாக உங்கள்
முதுகிலும் ஒருவனை ஏற்றி கொள்ளுங்கள்

எழுதியவர் : உதயா (17-Dec-15, 8:14 pm)
பார்வை : 120

மேலே