என்னங்க மீன் கடையிலுமா…

மீன் போன்ற கண் கொண்ட தேனே
உன் மீன் கண்ணின் ரகசியம் அறிந்தேனே
இதழ் கதவு நீ திறந்து உண்ணும் - நேரம்
உமிழ்நீரும் இளநீராய் மாறும் - கெட்ட
கயல் வாடை மலர் வாடையாகும்

மத்தி மீன் காணும்போதெல்லாம் - ஒரு
மத்தாப்பு புன்னகை உன் முகமெல்லாம்
அத்தானே பத்து வீசை வேணும் - என்றாலும்
பித்தாகி வாங்கத்தானே தூண்டும்

கறாராக விலைப்பேசித்தானே - நானும்
சுறாமீனை வாங்கத்தான் போனேன்
கூர்மையான அதன் பற்கள் கண்டேன் - உடன்
காரமான உன் கோபம் நினைவிலே கொண்டேன்

கொடுவை மீனும் குடுவையிலே குதிக்க - பின்
கொடுத்து வைத்த மீனாகி உன் உமிழ்நீரில் குளிக்க
அடுத்து ஒரு பிறவியையும் எடுக்க - அது
ஆண்டவனிடம் சென்றது மனு ஒன்றை கொடுக்க
ஆண்டவரும் கேட்டாரே என்ன பிறவி கொடுக்க
அப்போதும் கேட்டது மீனாகி உன் வாயில் தன் தேகம் கரைக்க

கோலமிடும் உன் கையால் சமைக்க - இறந்த
கோலா மீனும் தன கண்ணை இமைக்க
நாளான மீனென்று நான் அதையும் ஒதுக்க - உடன்
ஏளனமாய் என் கூடை மீன்களும் அதை நகைக்க

ஊசி கண்களாலே என்னை குத்துகின்ற பெண்ணே - நீ
ஊசிகனவா மீன்தானோ ஜென்மம் பல முன்னே
காசிகூட போகவேணாம் முக்தி வேண்டி மீனே - என்
கயல் விழியாள் வாய்தனிலே கரைந்து விட்டால்தானே

வஞ்சரம் மட்டும் என்ன பாவம் செஞ்சதடி கண்ணே - ஓர
வஞ்சம் ஏனோ அதையுந்தான் வாங்கிவிடு முன்னே
வாஞ்சையாக நீ அதனை சமைக்கும் போதுதானே - வீட்டில்
வக்கனையா சாப்பிடாமே வேறு வேலை என்னே

பத்தினியே உன் வயிற்றில் பக்குவமாய் செறிய - சின்ன
நெத்திலியும் கொதிக்குதடி குழம்புதனில் நிறைய
பட்டினியாய் நீ இருந்தால் பாவம் வந்து சேரும் - மற்ற
நெத்திலியும் நீரினிலே நீந்தாமலே சாகும்

கயல் விழியை காணாப் பொழுதெல்லாம் - இந்த
பயல் நெஞ்சம் புனல் இல்லா கயல் போலே துள்ளும்
முயல் போலே நீ துள்ளிக்கொண்டு - கண்ணே
வயலோரம் வருவாயோ மீன் சோறு உண்டு

இதையெல்லாம் கேட்டுத்தான் தலையெல்லாம் சுற்றி - அவள்
இதமாக தன கையால் என் வாயைப்பொத்தி
சொன்னாலே சிரிப்போடு ஒரு வார்த்தை என் ராசாத்தி
"என்னங்க மீன் கடையிலுமா" என்றாளே என் சீமாட்டி.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (18-Dec-15, 12:34 am)
பார்வை : 138

மேலே