எவனோ ஒருவனுக்காக - உதயா

அவனின்
ஜனனத்திற்க்கான ஆதாரத்தை
அவன் தாய் தொலைத்ததாலோ
இல்லை அவனின் ஜனனம்
அவன் தாயை தொலைத்ததாலோ
அவன் இச்சமூகத்தில்
வீசப்பட்டிருக்கலாம்

இதோ நீங்களும் நானும்
நடந்துச் செல்லும்
எதோ ஒரு சாலை ஓரத்தில்
அவனுக்கான இரவிடம்
காத்திருக்க கூடும்

அவன் நடை பழகிய
நாட்களுக்கு முன் இருந்த
காலங்களை
எவளோ(னோ)வின் நிழல்கள்
நிச்சயம் அடைக்காத்து
இருக்கவேண்டும்

அவனின் இம்மாதிரியான
ஒவ்வொரு நாட்களின் பயணம்
விதியாலோ,நன்றி உணர்ச்சியாலோ
தொடக்கி இருக்கவேண்டும்

நானும் நீங்களும் என்றோ
எங்கோ வீசி எறிந்த ஆடை
அவன் நிர்வாணத்தில் பாதியை
குத்தகை எடுத்திருப்பதாக
இருக்கலாம்

அவன் ஒவ்வொரு முறையும்
துணிக்கடைகளையும்,
பள்ளிக் கூடங்கலையும்
சக வயதுயுடையோர்களையும்
காணும்போது பிறக்கும்
அவனின் கண்ணீர் ஆற்றில்
விடை தெரியா புதிர்களும்
பொறுக்க இயலா வலிகளும்
மிதந்து வரலாம்

அவனுக்கு நீங்கள்
யாரும் உதவி செய்ய தேவையில்லை
அவனுக்கு உதவி செய்யும் தகுதி
உங்களின் சிலருக்கு வாழ்விலும் மனதிலும்
இல்லாமல் இருக்கலாம்

நீங்கள் செல்வமுடையவர் என்றால்
அவனுக்கு நிச்சயம் உதவி செய்யாதீர்கள்
உங்கள் செல்வத்தை கரைக்காதீர்கள்
ஏனெனில் அவைகள் விரைவில்
உங்களுக்கு சவப்பெட்டி செய்ய தேவைப்படும்

உங்கள் வாழ்விடத்திற்கு அருகில்
அவனைப் போன்றோர்கள் வசித்தால்
பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்
மனிதமற்ற பட்டியலுக்கு
தலைவன் ஆகும் தகுதி
உங்களுக்கு உடையது என்று

ஓநாய் பிறவிகளே
கருணையற்ற ஜென்மங்களே
நரககுண வாசிகளே

அவனைப்போன்றோர்
உம்மை கடந்துச் சென்றால்
அவன் பார்வை ஓட்டத்தில்
அறுவெறுப்பையும்
அனுதாபத்தையும்
முட்களாக எறியாமல்

தப்பி தவறி
புன்னகையை
வீசிவிட போகிறீர்கள்

ஏனெனில்
உங்களின் சாதாரண
புன்னகைக் கூட அவனுள்
நாளை நம் தேச தலைவனாகும்
அளவுக்கு
ஒரு உந்துதல் அளிக்க கூடும்

எழுதியவர் : உதயா (24-Dec-15, 2:54 pm)
பார்வை : 114

மேலே