தடையென்ன தகர்ப்போமா

இளைஞர்களே நீங்கள்
இரு கை தூக்கி வாருங்களேன்
இன்னுமென்ன சோர்வு
இளமையெல்லாம் சில காலங்கள்

அடிவரை நீண்டு தூர்வார - உனை
அழைக்குது உந்தன் நாடு
துளியல்ல நீ – ஒரு
புலியெனவே பாய்ந்து வா வா
இரு கைகளை கூராக்கி
களைகளை நீக்கி
சிலையல்ல நீ என்று காட்டவா

தடையென்ன தகர்ப்போமா
ஒரு கைதான் பார்ப்போமா
குடை கொண்டு மூடினால்
கதிரவனும் மறையுமா

தேங்கும் அரசியலில் கொசுக்கள் அழிய
நீங்கள் வரவேண்டும்
மடை கதவை திறவேண்டும்
நம் தேசம் முழுதும் ஓர் கோசம் கேட்கவேண்டும்

வரலாறு மாறத்தான்
விரைவாக வரவேண்டும்
தூங்கி விழும் நாட்டைதான்
தாங்கிடவே சடுதியாய் வரவேண்டும்

பசியாலே இங்கு பலர் வாட
வேலைக்காக வெளியில் விலைபோக
கோடி கோடியாய் சூரியன் இருந்தும்
இருளில் மூழ்கிறதே நம் தேசம் தேசம்

உறக்கத்தை தனியாக
உறங்கிடவே நீ சொல்லு
இடரெல்லாம் தீரும்வரை
இரவு பகல் உனக்கேது

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (27-Dec-15, 3:09 am)
பார்வை : 135

மேலே