தாத்தா போல யாருமில்லை - சந்தோஷ்

நான் படித்த
பள்ளிக்கூடத்தை படம்பிடித்து
அலம்பிக் கொண்டிருக்கிறது
கோயில் கிராமத்துக்குளம்.

--

தென்னை மரக்கீற்றுகளையும்
அந்தி நேர மங்கல நிலவையும்
ஒருசேர பறித்து
எந்தன்
நினைவோடத்தில் தெளித்துச்
செல்கிறது கொள்ளிட ஆறு

--

ஒடியாடிய மைதானத்தில்
வந்து வழிமறித்த
அன்றைய நாகரிக
நாய்களில்லை இன்று.
ஆனால் எங்கெங்கும்
மனிதக் கழிவுகள்.

--

என் நண்பன்
ஜோசப்பின் கிறிஸ்துமஸ்
கேக்கும்
என் நண்பன்
முகமதுவின் இஸ்லாமிய
நோன்புக் கஞ்சியும்
உண்டு பகிர்ந்து மகிழ்ந்த
முருகன் கோவிலுக்கு
பக்தர்கள் வருகிறார்கள்
மனிதர்களைக் காணவில்லை.

--

எட்டாம் வகுப்பு
மாதவி, எனக்கு
கண்ணகி கதையை
விளக்கி சிலாகித்த
பால்காரம்மா திண்ணையில்
இப்போது
மாட்டுக்கறி விற்பனை.

--
ஊருக்கு செல்லும்
திசைக்காட்டிக்கருகே
இரண்டு கட்சிகளின்
கொடிக்கம்பமிருந்தது
அன்று..!
இன்று கூடுதலாய்
பல ஜாதிக் கொடிகளும்.!

---


கணேசன் மவளோடு பையன்
தையல் நாயகி பேரன்
டீக்கடை பாலு அக்கா மவன்
அட..இது யாரு..
பேராண்டி வாடா. வாடா என
ஊருக்குள் செல்வதற்குள்
ஒராயிரம் விசாரிப்புகளெல்லாம்
சன் டிவி ,விஜய் டிவிகளுக்கு
அடிமையாக போய்விட்டது

---
காகம் கரைத்து
நான் வரும் செய்தியறிந்து
ரோட்டு மாமாவின் கடையில்
காத்திருந்து வரவேற்று
வெள்ளை முறுக்கு
மீசையோடு பேரனெனை முத்தமிடும்
என் சாக்காங்குடி
தாத்தாவும் இல்லை
எந்த காக்காவும்
என் வருகையை
அறிவிப்பதுமில்லை.

--

சித்தி, மாமன், அத்தைகளின்
பாசக்கரங்களில்
என்னை பாதுகாக்கப்பட்ட
இந்தக் கிராமத்தில்
நான் மீண்டும்
ஒரு சந்தோஷமழையில் நனையாமல்
வருத்த மழையில் நனைந்து
திரும்பி வருகிறேன்.

டாட்டா சொல்லவும்
யாருமில்லை.
என் தாத்தா போலவும்
யாருமில்லை.


--

இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-Dec-15, 3:39 pm)
பார்வை : 123

மேலே