மருதநாயகம் - சிசுசெல்லப்பா

பிரசிடெண்டய்யா, என்ன பண்ணிக்கிட்டு இருக்குது’ என்று நடைபாதையில் கனத்துக் கேட்ட குரலையும் அதையடுத்து விசிறி விடப்பட்ட செருப்புகள் கிளப்பிய ‘சரார்’ சப்தத்தையும் எந்த சமயத்திலும் எவ்வளவு களேபரத்திடையேயும் நான் புரிந்துகொண்டு விடமுடியும். ‘அட 624? வாங்க. வாங்க. என்று இருதய அடியிலிருந்து அழுத்திக் கிளப்பிய தொனியுடன், கையில் பிடித்திருந்த பைல் கத்தையை அப்படியே தொப்பெனப் போட்டுவிட்டு அறையிலிருந்து நடைபாதைக்குப் பாய்ந்தேன்.

கதவுக்கு முன் வந்து நின்ற மருதநாயகம் ‘அட என்னய்யா, வருஷம் பன்னிரண்டு ஓடிப் போயிருச்சு, இன்னும் இந்த கேடி நம்பரை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, நாலு பேர் காதிலே பட்டால் என்ன நினைப்பாங்க நம்மைப் பற்றி’ என்று கலகலக்க கேலிக் குரலில் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

‘நன்றாகக் கேட்டீர்கள்? அதெப்படி மறக்கும். தொட்டிலில் நமக்கு வைத்த முதல் பெயரை மறக்க முடியுமா? பிறகு காலேஜிலே படிக்கிறபோது நம்பர்படிதானே நமது பரீட்சை ரிசல்ட்டை பேப்பரில் பார்த்தோம். அது மாதிரிதானே இந்த 1489…’

அவர் என்னைப் பாவனையாக முறைத்துப் பார்த்தார்.

‘இதெல்லாம் முத்துராஜனுக்கு எப்படி இவ்வளவு துல்லியமாக ஞாபகம் இருக்கிறதென்று யோசிக்கிறீர்களா? ஒரு நிமிஷம்’ என்று எழுந்து பீரோவைத் திறந்து மேல் தட்டில் மடித்து வைத்திருந்த ஜமுக்காளத்தை எடுத்துக்கொண்டு வந்தேன். அதைப் பார்த்ததும் அவர், ‘இது எதற்கு முத்துராஜன்’ என்று கேட்டார். ஜமுக்காளத்தைப் பிரித்து உதறி அவருக்கு முன்பு விரித்தேன். அவர் பிரமித்துப்போய் மூக்கில் விரலை வைத்தார். ‘இன்னுமா இதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள், பன்னிரண்டு வருஷத்துக்குப் பிறகும்?’ என்று அதிசயித்து கேட்டார். அவரது அதிசயிப்புக்குக் காரணம் அந்த ஜமுக்காளத்தில் இரண்டு இடங்களில் 622, 1488 ஆகிய இரண்டு நம்பர்கள் மையினால் பெரிதாக எழுதப்பட்டிருந்ததுதான். என்னோடு வந்து ஒரு வருஷ காலம் வேலூர், அலிப்புரம் ஆகிய இரு சிறைகளின் ஸ்டோர்களில் பத்திரமாக சிறை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டு என் விடுதலையின்போது திருப்பித் தரப்பட்ட ஜமுக்காளம் அது.

‘நீங்கள் இவ்வளவு பத்திரமாக ஒரு ஞாபகச் சின்னத்தை வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே, என்னிடம் எதுவும் கிடையாது’ என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டார் மருதநாயகம்.



நான் ஜமுக்காளத்தை மடித்துக்கொண்டே, ‘நம் நினைவு அழிகிறவரைக்கும் இந்த ஒன்றாவது அந்த பழைய நாட்களை நினைவூட்டிக்கொண்டிருக்கும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறேன்’ என்றேன். அவர் உடனே எதுவும் பதில் சொல்லவில்லை. நான் ஜமுக்காளத்தை பீரோ தட்டில் வைத்து பீரோவை மூடிவிட்டு என் நாற்காலியில் உட்காரத் திரும்பினேன். அவர் முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த குறி காட்டியது.

‘என்ன யோசிக்கறீங்க? நாற்பத்தியொன்றுக்குப் போய்விட்டீர்களா?’ என்று கேலியாகக் கேட்டேன்.

ஆமாம் என்று அதற்கடையாளமாக தலையை அசைத்த மருதநாயகம், ‘அந்த நாள் இனிமே எங்கே வரப்போவுது’ என்று நிகழ்காலம், எதிர்காலம் இரண்டிலும் ஒரு அவநம்பிக்கை வைத்த தொனியையும் சேர்த்தார்.

மருதநாயகத்தின் மனப்போக்கினை இந்த பன்னிரண்டு வருஷ காலமாக, நானும் அவரும் சிறைக் கதவுக்கு உட்புறமாகச் சேர்ந்து முதல் எட்டுக்களை வைத்த நாள் முதல் அறியும் சந்தர்ப்பங்களை நிறையப் பெற்றிருந்த எனக்கு இது புதுசாகப்படவில்லை. அந்த நாள் என்று அவர் ஏங்கிக் குறிப்பிட்டது மீண்டும் சிறைவாசத்தை அல்ல. அவர்தான், ‘போதும் இந்த ஒரு தடவை சிறைவாசம். இனி என் அரசியல் வாழ்வில் கம்பிக்கு உட்புறம் இருக்கும் ஒருநாள்கூட இருக்காது’ என்று முறித்துப் பேசியவராச்சே. அவர் கருத்து இதுதான். ‘சிறை ஒரு கோவில் மாதிரி, கடவுள் கோவிலில் இருப்பதாகக் கருதிக் கும்பிடு போடப்போகிற பக்தனுக்குத்தான் கோவில். தனக்குள்ளே தெய்வத்தை வைத்துக்கொண்டு இருப்பவனுக்குத் தூணிலும் துரும்பிலும் தெய்வத்தைக் காண்பவனுக்கு கோவில் ஒரு அர்த்தமற்ற சின்னம். அதே மாதிரிதான் சிறையும், தேச, சமூக, பணிப் பாதையில் சிறைவாசம்தான் மகத்தான சாதனையாகும் என்று நினைக்கும் சேவகனுக்குத்தான் ஜெயில். கண்களைச் சுழற்சி அகல விழித்து மனித ஜாதியை ஊன்றிப் பார்த்து, தன் முதுகை கொடுத்து அதன் கால்களை உயர்த்த முயற்சிப்பவனுக்கு சிறைவாசம் அர்த்தமற்றது. சிறைக்கு வெளியே அவன் கொள்ளும் சாதனை நூற்றாண்டுகளுக்கு நிற்கும். இதை நான் இந்த ஒரு வருஷ காலத்தில் கண்டறிந்துவிட்டேன்’ என்று சொல்லி, சிறையை விட்டு வெளியேறினவர். அவர் வாதத்தில் ஒருவித மாசு இருக்கலாம். ஆனாலும் அதில் வலுவான ஒரு மனப்பூர்வம் இருந்தது.

மீண்டும் அவர் சிறைக்குப் போகத் தயங்கி வெளியே நின்றுவிட்டார் என்று ஊர்வாய் அவர் முதுக்குக்குப் பின் உலைக்கொதித்ததையும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஏளனம் செய்தோருக்கு அவரது பதில், ‘சிறைக்குப் போய் தியாக சிகரத்தை எட்டிப் பிடித்து திரும்புபவர்களுக்கு என் வணக்கம்’ என்று சொல்லிவிட்டார்.

இந்த மனப்பக்குவம் அவருக்கு ஏற்பட்டதற்கான சந்தர்ப்பங்கள் அத்தனையும் இன்று அவர் என் முன் இப்போது உட்கார்ந்து இருக்கும்போது ஞாபகம் வந்தது. மொத்தத்தில் சொல்லிவிட முடியும். வசதியும், சுகமும் கலந்த சூழ்நிலையில், வளர்ந்தவனும் சரி, வளராதவனும் சரி, சிறையில் உடல் அணு அணுவாக வதைப்பட்டு அவதியுறும் சூழ்நிலையில் நிதானம் இழந்துவிடுகிறான். கீழே போய்விடுகிறான்.

வெளியில் கண்களுக்கு ஏற்பட்ட மயக்கத்துக்கு ஒரு தெளிவு அவருக்கு ஏற்பட்டது. அங்கு கோயிலுக்குள் நுழைவதற்கு முன் கடவுள் தத்துவத்தைப் புரிந்துகொண்டு நுழைய வேண்டும். மனிதன், கோவில் விக்ரகத்தைப் பார்த்துவிட்டுக் கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது என்று அவர் சொல்லுவார். அதே மாதிரி, சிறைக்குள் தவம் செய்யும் தூய்மைப் பக்குவத்துடன் நுழைய வேண்டும் என்று மகாத்மா சொன்னதைக் கேட்டு உள் நுழைய வேண்டியதற்குப் பதில், அங்கு சென்று தவத்தைப் பற்றி யோசிக்கப் பார்த்தார்கள். தவம் வரவில்லை. புழுங்கும் கர்ப்பக்கிரகத்தில் நின்று தீபாராதனைகளைப் பார்த்துவிட்டு. விபூதி குங்குமத்துடன் வீடு திரும்பும் ஆஸ்திகனைப்போல, சிறை இருந்து கஷ்டங்கள் பட்டு தியாகத் திருப்தியுடன் தேச சேவகராக ஊர் திரும்பிவிடுகிறார்கள்.

இதுதான் மருதநாயகத்தின் கண்களை அன்று குத்தியது. மனத்தை அறுத்தது. அந்த உறுத்தலின் சாயல் இன்றும் அவர் மனத்தில் ஆடிக்கொண்டிருப்பது இப்போதும் தெரிந்தது. இத்தனைக்கும் அவர் சிறையை விட்டு ஊர் திரும்பிய அன்று அவர் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்தான். இன்றுவரை அவர் ஒரு பொது மேடையில் ஏறிப் பேசியவரல்ல. ஏன், அவர் சிறையிலிருந்து ஊர் திரும்பியதே ஒரு ரசமான சம்பவம். என் காதில் விழுந்தது இது. ஒரு வருஷத்துக்கு முன் அவர் மீது மாலைக்கு மேல் மாலையாக சுமத்தி ‘ஜே’ போட்டு மாலைச் சுமையேற்றத் தயாராகிக்கொண்டிருந்தது. ஆனால் ஒருநாள் காலை ஊர் எழுந்து பார்த்தபோது அவர் வீட்டுத் திண்ணையிலே உட்கார்ந்து அமைதியாக ராட்டையை நூற்றுக்கொண்டிருக்கும் ஒரு எளிய சத்யாக்ரகியைத்தான் கண்டது; எதிர்காலப் பிரபல கட்சி அரசியல்வாதி ஒருவரை அல்ல. ஊரே திடுக்கிட்டது. பிரமித்தது. வியந்தது. பாராட்டுக் கூட்ட அழைப்பு எதற்கும் அசையவில்லை மருதநாயகம். ராட்டையை நூற்றுக்கொண்டே, ‘நான் தியாகி இல்லீங்க… மாலை எல்லாம் இந்த ராட்டைக்குப் போடுங்க’ என்று சொல்லிவிட்டார்.

‘இதென்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது’ என்று ஆர்ப்பாட்டக் கூட்டம் மனதுக்குள் பரிகசித்துக்கொண்டது. வாய்விட்டுச் சொல்ல அப்போது தெம்பு கிடையாது. இப்போதாக இருந்தால், கடைவாய்க்கப்பால் தெரிய நையாண்டி செய்துவிடும். மனுஷன் கொடுத்து வைக்கவில்லையென்று பேசிக்கொண்டு போய்விட்டது அவரது ஊர்.

என் ஊரில் கூட்டம் நடந்தது. ஊரின் கெளரவத்தைத் தூக்கிப்பிடித்த தியாகிகளுக்கு நடந்த பாராட்டு அது. அப்போது போடப்பட்ட கனத்த ரோஜாப்பூ மாலையும் கையுமாக பெருமை கனக்க, கூட்டம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மருதநாயகம் தன்னைப் பெருமைப்படுத்த விரும்பிய கூட்டத்துக்குப் பிடிவாதமாக வர மறுத்துவிட்ட சம்பவத்தின் ஞாபகம் சட்டென முன்னுக்கு வந்தது.

நானும் அவரும் சிறைக் கதவுக்குப்பின் தள்ளப்பட்டபோது இருவரும் புதுசு. அறியாத ஊருக்குப் போகும் வழியில் துணையாக ஒருத்தருக்கு ஒருத்தராக உள் நுழைந்து சுக துக்கத்தை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு நாட்களைக் கழிக்கத் தயாரானோம். இருவருக்கும் அடுத்தடுத்த நம்பர், நெருங்கிய உறவுக்கு வழி செய்தது. சிறைச் சடங்குகளின்போது ஏற்பட்ட, நூதன உணர்ச்சியை இருவரும் எடுத்துச் சொல்லிக்கொண்டோம். சிறை உடையை நான் அணிந்துகொள்ளும்போது, அவர் ‘என்ன முத்துராஜன் கலியாணத்துக்கு மாப்பிள்ளை அலங்காரம் பண்ணிக்கொண்டது ஞாபகத்துக்கு வருகிறதா?’ என்று கேட்டார். அவருக்கு வெறுங்காவல், ஆதலால் சொந்த உடை அனுமதிக்கப்பட்டிருந்தது.

‘ஆமாம். இந்த தட்டையும் குவளையையும் முன்னாடி வைத்துக்கொண்டு அச்சடித்த சுட்டிக்கும் அவுன்ஸ் குழம்புக்கும் காத்துக்கொண்டு இருக்கிறீர்களே. அண்ணி கொண்டாந்து வெள்ளித் தட்டிலே சோறு போட்டது ஞாபகம் வருகுதா?’ என்று அவரைக் கேட்டேன் நான்.



‘இப்படியே நாம் பேசிக்கொண்டிருந்தால் ஒரு வருஷப்பொழுது நிமிஷமாகப் போய்விடும் போலிருக்கிறது முத்துராஜன்’ என்பார் மருதநாயகம்.

அந்தப் பழைய கோணிப் படுக்கையும் நாற்றக் கந்தல் கம்பளிப் போர்வையும், புழுவும் மணலும் கை கையாக இருக்கும் துர்நாற்றக் கட்டிச் சோறும், வேகாத முள்ளங்கியும், நன்கு கொதிக்காத பச்சை புளி வேகம் வீசும் உப்பில்லாத கருநிறக் குழம்பும், மருதநாயகத்தின் வாழ்க்கை மட்டும் என்ன – உலகில் வெளியே நடமாடும் எந்த மனிதப் பிறவிக்கும் எட்டாதவைதான். அனுபவிக்க முடியாத வாழ்க்கைதான். செல்வ மிராசுதார் இளைஞன்; பி.ஏ. பட்டம் பெற்றும் வயலோடு ஒன்றிவிட்ட ஒரு படிப்பாளி. ஒரு முனகல் இல்லாமல் இந்த அனுஷ்டானத்தில் முழு மனத்துடன் ஈடுபட்டுவிட்டான். காந்தீயம் கொண்ட வெற்றி அது.

முதல் காலைக் கஞ்சியை நாங்கள் வாங்கி வந்து எங்கள் அறைகளில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், அவர் பிடித்திருந்த தட்டின் மீதுதான் ஞாபகம் சென்றது. ‘காலை காப்பி எப்படி இருக்கு’ என்று கேட்டேன். பேசாமல் தட்டை நீட்டினார் அவர். அதைப் பார்த்ததும் மனது துணுக்குற்றது. வெந்த பாச்சை ஒன்று மிதந்துகொண்டிருந்தது. ‘அப்படியானால் கஞ்சி சாப்பிடவில்லையா’ என்று கிளறிக் கேட்டேன். ‘நன்றாக கேட்டீர்கள்! மனுஷன் இதற்காக வயிற்றைக் காயப் போட்டுடுவானா என்ன? நாள் முந்நூற்றி அறுபத்தைந்தை எண்ணிப் போக்கிவிட்டுப் போகவேண்டாம்? இங்கே என்ன சாகவா வந்தோம்’ என்றார்.

அவரது கலகத்த சிரிப்பு என்னையும் அதில் சேரச் செய்துவிட்டது. தினமும் ஒருகணம் அந்தக் கஞ்சியை முகர்ந்து பார்த்துவிட்டுக் குடிக்கும் வழக்கம் கொண்டிருந்த என்னை, அவரது கண்டிப்பு வார்த்தையைத் தவிர வேறு எதுவும் அந்த வழக்கத்தை விடச் செய்திருக்காது. வீட்டிலே ‘பிள்ளைகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு விளக்கெண்ணெய் குடித்திருப்பார்களே, ஞாபகம் இல்லே! அவுங்ககிட்ட பாடம் கத்துக்கொள்ளாமல் வந்துவிட்டீர்களே’ என்பார்.

இப்படியே நாளும் நாளும் போகும் என்று நினைப்புக் கூட்டி இருந்தவர்களுக்கு – எண்ணி நூறு நாட்கள்கூட இருக்காது – திடுக்கென்று வந்து விழுந்தது அந்த வெட்டு.

ஒருநாள் காலை ‘யாரையா 624’ என்று பிளாக்கு எதிரொலிக்கும்படியாக ஒரு குரல் கத்தியது. பிளாக் காப்டன் குரல். அவன் கையில் ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. பக்கத்தில் ஒரு வார்டர் நின்றுகொண்டிருந்தான். இரண்டாம் தடவை நம்பர் உச்சரிக்க கேட்டதும், மருதநாயகம் ‘என்னங்க நமக்கு ஏதோ ஓலை வந்திருக்குது போலிருக்கே’ என்று கிளம்பினார்.

எனக்குத் திடுக்கிட்டது. இந்த மாதிரி அழைப்பு வந்தால், ஒன்று வேறு சிறைக்கு மாற்றுவதாக இருக்கும். இல்லாவிட்டால், விசாரணையின்றி வைக்கப்படும் பாதுகாப்புக் கைதியாக ஆக்குவதாக இருக்கும். அப்படி ஏதாவது மருதநாயகத்துக்கு நேரப்போகிறதா? நானும் கூடவே போனேன்.

வார்டரிடம் சென்றதும், ‘நீங்கள்தானா 624, மருதநாயகம்? ஜெயிலர் ஐயா கூட்டிவர சொன்னார். வாங்க போகலாம்’ என்றான்.

‘கம்பளி, சாக்கு, தட்டு குவளை எல்லாம் எடுத்துக்கொண்டு வரலாமா, இல்லை…’ என்று இழுத்தேன் நான்.

‘இல்லை ஆளை மட்டும்தான் கூட்டிவரச் சொன்னாரு’ என்றான் வார்டர்.

‘சரி, போய் என்ன என்று கேட்டு வாருங்கள். ஊர்த் தகவல் ஏதாவது வந்திருக்கும். சொல்லக் கூப்பிட்டிருப்பார்கள்’ என்றான் காப்டன்.

‘போய்விட்டு வந்து விடுகிறேன் முத்துராஜன்’ என்று மருதநாயகம், வார்டர் கூடவே பிளாக்கை விட்டு வெளியேறி ஜெயிலர் ஆபிஸை நோக்கிச் சென்றார். பரவிய சிறைக் காம்பவுண்டின் மற்றொரு மூலையில் அதோ தெரியும் ஆபீஸை நோக்கிப் போனார். அவரைப் பார்த்துக்கொண்டு நானிருந்தேன். அவர் உருவம், வார்டருடன் ஆபிஸ் கட்டிடத்துக்குள் நுழைந்து மறைந்துவிட்டது. அவர் என்ன தகவல் கொண்டுவரப்போகிறார் என்பதை அறியும் ஆவல் மனத்துடன் அவர் கால்கள் மீண்டும் எங்கள் திசைப்பக்கமாக வருவதை எதிர்ப்பார்த்துக்கொண்டே இருந்தேன். எங்கள் சகாக்கள் சிலரும் என் மாதிரியே இருந்தார்கள்.

மருதநாயகத்தின் தலை மீண்டும் வெளியே தெரிய கொஞ்சம் நேரம்தான் ஆகியது. மருதநாயகம் திரும்பி வந்துகொண்டிருந்தார். என்ன செய்தி கொண்டுவரப்போகிறாரோ என்ற துடிப்பு எனக்கு அதிகரித்தது. நெருங்கி வரும்போது அவர் நடையைக் கவனித்தேன். தளர்ந்து தயங்கி வந்தார். பிளாக்கைவிட்டு இறங்கி அவரிடம் பரபரப்புடன் சென்றேன்.

‘என்னங்க ஊர்ச் சமாச்சாரம் ஏதாவது…?’

அவர் அதை முடிக்கவில்லை. ‘அதெல்லாம் எதுவும் இல்லை. பாவிகள். காரியத்தை கெடுத்துவிட்டார்கள் முத்துராஜன்’ என்றார். அவர் கை என் தோள் மீது அழுத்தியது.

‘விஷயத்தை சொல்லுங்கள்’ என்றேன்.

‘எனக்கு ஏ கிளாஸ் வந்திருக்கிறது’ என்றார் மருதநாயகம். நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தார். ஒரு தகவலைச் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடரும் பாவனையிலோ அல்லது நான் அதை எப்படி வரவேற்கப்போகிறேன் என்று அறியும் பாவனையாகவோ!

ஏ கிளாஸ் என்ற முதல் சப்தம் என் காதில் கேட்டதும், ‘நல்லதாப் போச்சு, மருதநாயகம். இன்றைக்கோடு இந்த அச்சடித்த சாப்பாடு தொலைந்தது. பழைய மருதநாயகம் ஆகிவிடலாம்’ என்று அவர் தோளைத் தொட்டு இழுத்து அணைத்து மகிழ்ச்சியை கொட்டிச் சொன்னேன்.

மருதநாயகத்துக்கு ஏ கிளாஸ் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஆரம்பமாகி, வாய்க்கு வாய் மாறி ப்ளாக் முழுவதும் குளறின. அந்த ஆர்ப்பாட்டத்தில் மருதநாயகம் என்ன மனநிலையில் இருந்தார், நான் சொன்னதற்கு என்ன சொல்ல இருந்தார் என்றெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. பிளாக் முழுவதும் ஒரே பாராட்டுதல் மயம். ‘சி’ வகுப்புக் கைதிகளுக்கென விசேஷ முகாமாக அமைக்கப்பட்ட அந்த முகாமிலிருந்து முதல் முதல் வகுப்பு மாற்றம் ஏற்பட்ட சம்பவம் இதுதான். அத்தனை பேர்களும் ஏதோ தங்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்யம்போல அதைக் கருதி மகிழ்ச்சிக் குரல் காட்டினார்கள்.

ஆனால், அத்தனை உற்சாகக் குரல்களிலிடையேயும் ஈயாடாத மருதநாயகத்தின் முகத்தை நான் கவனிக்க நேர்ந்தபோது என் உற்சாகம் தணிந்தது. அவரைப் பார்த்துக்கொண்டே அவரோடு நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். தன் இடத்தில் வந்து உட்கார்ந்தார் மருதநாயகம்.

அவர் என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார். அதிலே ஒரு அமைதிக் குறைவின்மை ரேகை ஓடியது. ‘முத்துராஜன்! கெடுத்துவிட்டார்கள். இவ்வளவுக்கும் சொல்லிவிட்டு வந்திருந்தேன். விரலை அசைக்கக்கூடாதென்று’ என்றார்.

அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. சத்தியாக்ரகிக்கு காந்தி ஆணையாக வந்த அந்த வாக்கியம் இதுதான். சிறை சுக வாழ்வாக இருக்கும் என்ற நினைப்புடன் எந்தச் சத்யாகிரகியும் செல்வானானால் அதில் களங்கம் இருக்கும். யார் யாருக்கு எந்த வகுப்பு விதிக்கிறார்களோ, அதை முகம் நோக்கித் தாங்கும் தெம்பு கொண்டிருக்க வேண்டும் என்று வந்திருந்ததை நாங்கள் மனத்தில் பதித்துக்கொண்டவர்கள். பிரபல மிராசுதார் இளைஞருக்கு ‘சி’ வகுப்பு தரப்பட்டது கண்டு கிராமத்துக்கே மனது ஆடிவிட்டது. கோர்ட்டாரை கேட்டுக்கொள்ளுங்களேன் என்று ரத்தபாசக் குரல்கள் பலமாகச் சொன்னதற்கு, அவர் அவர்களைப் பார்த்தது ஒரு பார்வைதான். அவர்களுக்கு இரண்டாம் தடவை சொல்லத் தெம்பு எப்படி வரும்? ‘அரிசிப் படியாவது போட்டார்களே களிப்படி போடாமல்’ என்று அவர்கள் திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டி இருந்தது.

அப்போது வாய் மூடியவர்கள், அவர் முதுகு மறையவும் கையெழுத்துப் போட்டு விண்ணப்பித்து அவருக்கு இப்போது வகுப்பு உயர்வு வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். குன்றிப்போய் உட்கார்ந்துவிட்டார் மருதநாயகம்.

தன் ஜீவித லட்சியத்திலேயே ஒரு நிரந்தரக் கறை படிந்துவிட்டதாக அவர் உள்ளம் நொந்ததை அவர் முக அவஸ்தையிலிருந்து சுளுவாக அறிய முடிந்தது. விருட்டென தலை நிமிர்ந்து அவர் படபடப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார். ‘முத்துராஜன், சூப்பிரண்டுகிட்ட சொல்லிவிடப்போறேன். நான் இதிலேயே இருக்கிறேன்’ என்றார்.



நான் திகைத்து அவர் கையைப் பற்றி ‘ஏன் மருதநாயகம்! உங்க உடம்பு உடைந்து ஒன்றுக்கும் இல்லாமல் போய்விட்டது என்று தொடர்வதற்குள், அவரே ‘உங்க உடம்பு மட்டும்?’ என்று வெட்டி இழுத்தார். ‘ஒரு ஷணம் எனக்குப் பேசத் தோன்றவில்லை. அந்த வாதத்தைத் தொடர்ந்து அவரை மனத் திருப்திபடுத்திவிட முடியாது எனப் பட்டது. நான் சொன்னேன், ‘மருதநாயகம்! சூப்பரிண்டுக்கு இதை மாற்ற அதிகாரம் கிடையாதாம். சர்க்கார் உத்தரவுப்படி செய்தாகணும். நீங்கள் இப்போது அந்த உத்தரவுக்குக் கீழ் படிவதைத்தவிர வேறு வழியில்லை. நீங்களாக விரும்பிக் கேட்டதல்ல இந்த வரம். சத்தியாக்ரகி எதையும் ஒரே நினைப்பு முகத்துடன் வரவேற்க வேண்டும் என்ற காந்தி ஆணை நினைவிருக்கட்டும். முத்துராஜனைப் பற்றி நீங்கள் நினைப்பதற்கு எதுவும் இல்லை. உங்களை அப்படி வேறெங்கேயும் கொண்டுபோய்விடப் போவதில்லை. அதோ நாலாம் பிளாக்குதானே மாற்றப்போகிறார்கள். இந்தக் கம்பி முள்வேலிதானே குறுக்கே நிற்கப்போகிறது. எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். நாலு வார்த்தைக்கூடப் பேசிக்கொள்ளலாம்” என்று ஒரே முச்சில் பேசி நிறுத்தினேன்.

சத்தியாகிரகி எதையும் ஒரே நினைப்பு முகத்துடன் வரவேற்க வேண்டும் என்ற அந்த காந்த ஆணை வார்த்தை அவர் முகத்தில் ஒரு மாறுதல் விளைவித்ததாக என் பேச்சின் நடுவே எனக்குப் பட்டுவிட்டது. அவர் சிரத்தையுடன் நான் பேசுவதைக் கேட்டார். ‘என் நினைப்பைக்கொண்டே என்னை மடக்கிவிட்டீர்கள் முத்துராஜன்! சமர்த்துப் பேச்சுக்காரர் ஐயா’ என்று என் முதுகைத் தட்டிக்கொடுத்தபோதும், சற்று முன்பு இருந்த மன வேதனையை மாற்றிக்காட்டிய பாவம் இல்லை. வேறு வழியில்லை என்பதற்காக வாதத்துக்காக ஒப்புக்கொண்டு என் பேச்சில் திருப்தி கொண்ட மாதிரிதான் இருந்தது.

‘இப்போதே வரச் சொல்லுறாங்களா’ என்றேன். ‘ஆமாம், போய் தட்டு, சாக்கு, குவளை எல்லாம் கொண்டுவந்து கொடுக்கத் தயார் பண்ணிக்கொள்ளுங்கள். நான் பின்னாடி வருகிறேன்’ என்று வார்டர் சொன்னான். அவனும் இதோ வந்துவிடுவானே என்று சொல்லிக்கொண்டே, ஜெயில் ஆபிஸ் பக்கம் பார்த்தார். எங்கள் பிளாக்கை நோக்கி வரும் வார்டர் அசைவு எனக்கும் தெரிந்தது. மருந்தநாயகத்துக்கு ஒத்தாசை செய்தேன். ‘முத்துராஜன், மருதநாயகத்தை மறந்துவிடாதீர்கள். ஒரு வருஷம் கழித்து வெளியே பார்க்கிறபோது புது மனுஷனா நினைத்துப் போடாதீர்கள்’ என்றார் மருதநாயகம். லேசாகச் சிரித்துக்கொண்டே எனக்கும் கேலியாகப் பேசத் தோன்றியது. பளிச்சென்று யோசிக்காமல் ‘அப்படிச் சொல்லிவிட்டீர்களே, ஏ கிளாஸுக்குப் போனவர்தான் சி கிளாஸ்காரனை ஞாபகம் வைத்துக்கொள்கிறாரா என்பது போகப் போக…’ என்று ஆரம்பித்தவன், அடுத்த வார்த்தை பேசுவதற்குள் ‘முத்துராஜன்!’ என்ற அதட்டு வார்த்தை அவர் அடித்தொண்டியிலிருந்து கிளம்பியது. சூட்சுமமான ஒரு பொறி நிலையைத் தொட்டுவிட்டேன் தவறாக என் உற்சாகத்தில் என்று எனக்குப் பட்டது. அசட்டுச் சிரிப்புடன் அவரைச் சாந்தப்படுத்த ‘விளையாட்டுக்குச் சொன்னேன். வித்தியாசமாக இல்லை, வாங்கள் போகலாம். முள்வேலி வரை கொண்டுவிடுகிறேன். அப்புறம்தான் வார்டர்கள் கால்வைக்க விடமாட்டார்களே!’ என்று திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவரது சிறை ஆஸ்தியைக்கூட எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

இதற்குள் எங்களை நெருங்கி வந்துவிட்ட வார்டர், ‘என்னங்க இன்னுமா இந்தக் கஞ்சி ஆசை விடவில்லை உங்களை? பேசிக்கிட்டே இருக்கிறீர்களே! நேரமாச்சு, வாங்க போகலாம். லாரி தயாராக நின்றுகொண்டு இருக்குது’ என்று கத்தினான்.

‘லாரியா?’ ஏக காலத்தில் திடுக்கிட்டு வார்டரைக் கேட்டோம்.

‘ஆமாம்’ ஜங்ஷனுக்கு போகணும் இல்லை?’

‘ஜங்ஷனுக்கா?’ பதறிக் கேட்டேன் நான்.

வார்டர் வறண்ட சிரிப்பு சிரித்தான். ‘நாலாம் பிளாக்குதான் நிரம்பிக்கிடக்கிறதே. இனிமேல் இடம் கிடைக்காது. ஐயாவை கமான் எடுத்துக்கொண்டு போகப்போகிறார்களாம். ஜெயிலரும் கிளார்க்கும் பேசிக்கொண்டு இருந்தார்கள். புறப்படுங்கள் போகலாம். போனால், எந்த ஜெயிலுக்கு என்பதுதானே தெரியும்.’ என்று அவரசரமாக வார்டர் முன்னால் சென்றான்.

என்னதான் பிறகு சமாளித்துக்கொள்ள முடிந்தபோதிலும், அந்தச் சமயத்துக்கு சமாளிக்க முடியாத அதிர்ச்சியாக இருந்தது அது. மருதநாயகம் தன் கையில் இருந்த தகரக் குவளையையும் கீழே வைத்துவிட்டு, என் கைகளைப் பிடித்துக்கொண்டார். கஷ்டத்தின் முன்னிலையில் பங்காளிகளாக இருந்த எங்கள் விரல்கள் பிடி இறுகாமல் நடுங்கின.

இன்னும் அது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இப்போது அவர் என்னைப் பார்க்க வந்ததும், நான் அவர் கரத்தைப் பிடித்து நெருங்கியபோதும் ஞாபகம் வந்தது.

அப்போது அவர் சொன்னார். ‘முத்துராஜன், நாம் சத்தியாகிரகிகள். ஆத்ம சக்தியில் நம்பிக்கை கொண்டு காந்தி ஆணைப்படி இங்கு நுழைந்தவர்கள். ஞாபகம் இருக்கட்டும். வெளியே சந்திப்போம்’ என்று கைகளை ஒருதரம் நெருக்கிக் கொடுத்தார்.

எட்டி நின்று, முள்வேலி வாசல் கதவு அருகில் வார்டரின் குரல் அவசரப்படுத்தியது. அடுத்த விநாடி, மருதநாயகம் அந்த தட்டு படுக்கை சகிதம் அந்தக் கதவு வழியாக சிறை ஆபீஸ் கட்டிடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.

சிறை ஆபிஸுக்குள் நுழையும் மருதநாயகத்தின் உருவம் மறையும்வரை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு என் இடத்துக்கு வந்து விரித்துக்கிடந்த கோணிப் படுக்கையில் உட்கார்ந்தேன். பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். மருதநாயகம் இருந்த இடம் வெறிச்சிட்டது.

சற்று கண்ணை மூடிவிட்டு, பிறகு தொப்பென்ற சப்தம் கேட்டு விழித்தபோது ஒரு சாக்கையும் கம்பளியும் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருந்தார் ஒருவர். மருதநாயகம் வெளியே சென்ற கதவு வழியாக அன்றே உள்நுழைந்த புது உருவம் அது. ‘வாருங்கள்’ எனச் சிரித்து வரவேற்றேன். ‘இப்போதுதான் இங்கிருந்து ஒருவர் வெளியே போனார். அவருக்கு ஏ கிளாஸ் கிடைத்திருக்கு. ராசியுள்ள இடம் இது. உங்களுக்கும் கிடைக்கலாம்’ என்றேன்.

அவர் சிறிதும் தயங்கவில்லை. ஆச்சரியப்படவும் இல்லை. ‘அதெல்லாம் நான் முன்கூட்டியே ஏற்பாடு செய்துவிட்டுத்தானே வந்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அநேகமாக எனக்கு உத்தரவு வந்துவிடும். நிச்சயமாக இதற்காக எவ்வளவு பெரிய ஆளை எல்லாம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்’ என்று குரலில் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் கூறினார்.

அதற்கு மேல் அவரிடம் பேசத் தோன்றவில்லை எனக்கு. விளையாட்டுக்குத்தான் சொன்னேன். அந்த வாக்கியங்கள் உண்மையைக் கக்க வைத்துவிடுமென்று எதிர்பார்த்தா சொன்னேன்? என் கண்கள் அந்தப் புதுக் கண்களை சந்திக்கக் கூசின. ‘மருதநாயகம் இருந்த இடம் அது. அது களங்கப்பட்டுவிட்டது’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். வாய் விட்டு முணுமுணுத்துவிட்டேன் போலிருக்கிறது. ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டார் அவர். ‘ஒன்றும் இல்லை’ என்று மழுப்பிவிட்டேன்.

இன்று மருதநாயகம் என் முன் உட்கார்ந்து இருக்கும்போதுகூட அந்த நபரின் ஞாபகம் வருகிறது. சிறையைப் பற்றியும் கோவிலைப் பற்றியும் மருதநாயகத்தின் முடிவுகளை அவ்வளவாக ஏற்காத எனக்குக்கூட அதில் ஓரளவு உண்மை இருப்பதாக படச் செய்தது அந்தச் சம்பவம். வேடிக்கைகள் பார்க்க வந்த குழந்தை உள்ளம் அவரது. இச்சையை வென்ற ஒரு ஞானியின் உள்ளம் மருதநாயகத்தினுடையது. இதுதான் வித்தியாசம்.

சிறையை விட்டு வெளியேறிய மருதநாயகம், இந்த ஞானி உள்ளத்துடன் வாழ்க்கையில் ஈடுபட்டது கண்டு பரிகசித்த ஊர் வாய்கள்கூட அவரைப் பற்றி முடிவு கட்டிய வார்த்தைகள் இதுதான்: ‘அவர் ஒரு காந்தி பைத்தியம்!’

அந்தப் பைத்தியம்தான் இப்போது என் முன் உட்கார்ந்துகொண்டிருந்தது. ‘அந்த நாள், இனிமேல் எங்கே வரப்போகுது?’ என்று ஒரு ஏக்கக் குரலில் எழுப்பியது. அந்த வாக்கியத்துக்குப் பதில் சொல்ல வாய் தயங்கும் ஒரு ஷணத்திலேயேதான், முன்னோக்கிப் பாய்ந்த மனம் இத்தனை தலையையும் கணக்கெடுத்துவிட்டது. பிறகு பதில் ஒருவாறு வந்தது. சொன்னேன். ‘அந்த நாள் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது மருதநாயகம்’ என்றேன்.

‘எங்கே’ என்று இடக்காகக் கேட்டார் அவர். அவரை முகத்துதி செய்வதில் அர்த்தம் இல்லை. ‘நீங்கள் தினம் நூற்கும் இராட்டையிலேயே’ என்றேன்.

நிமிர்ந்து பார்த்தார். எதிரே சுவரில் மாட்டியிருந்த காந்தி படத்துக்கு அவர் கை யதார்த்தமாக வணக்கம் செலுத்தியது.

(தினமணி கதிர் - 17.8.1952)

எழுதியவர் : மீள் (31-Dec-15, 11:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 238

மேலே