உள்ளங்கை

உள்ளங்கை
===========
அப்பாவின்
உள்ளங்கையின் இளஞ்சூடு
ஆரம்பப் பள்ளியில் சேரப் போகையில்தான்
அறிவுபூர்வமாக அறிமுகமானது எனக்குள்..

திருவிழா திடல்களிலும்
நெரிசல் மிகும் சாலையிலும்
இறுக்கத்தில் பகிர்ந்த அந்த இளஞ்சூடு
பெற்ற பரிசுகளையும் கேடயங்களும்
மூச்சிரைக்க ஓடிவந்து காட்டிய போது
பெருமையாய் பரவியது என் உயிருக்குள்...

ஏனோ அந்த உள்ளங்கை
வெப்பம் அன்னியமானது..
என் வாலிபக் காலத்தில்

நோய்ப் படுக்கையில்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
அவர் என் கரம் பற்றியபோது
மீண்டும் அந்த உள்ளங்கைச்சூடு
ஏதோ சொல்ல எத்தனித்தது..

பின்னொரு
கருப்பு நாளில்
சில்லிட்டு கிடந்த அப்பாவின்
உடலின் மீது என் சுடு கண்ணீர் வீழ
வாய்க்கரிசி இட்டபின் விறகடுக்கின்
சிதைமூட்டும் முன்னர் மீண்டும்
ஒருமுறை தொட்டுப் பார்க்கிறேன்..

எனக்கு உந்துதலும்
உயிர்சக்தியும் அளித்த
அந்த சூட்டை எனக்குள் சேமிக்க…

எழுதியவர் : ஜி ராஜன் (3-Jan-16, 9:50 pm)
Tanglish : ullangai
பார்வை : 116

மேலே