மீண்டும் ஒரு காதல்
சேலத்தில் மீண்டும் ஒரு இளைஞர் காணமல் போயிருப்பது , மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. காணமல் போனவரின் பெயர் ,குமார். இதே போன்று மூன்று மாதங்களுக்கு முன் ஒரு இளைஞர் காணமல் போனது குறிப்பிடத்தக்கது.கடந்த 2 வருடங்களில் , இவருடன் சேர்த்து 7 பேர் காணமல் போயுள்ளனர். காணமல் போனவர்களை பற்றிய ஒரு செய்தியும் , காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்.
“ஹேமா ! அந்த பையன பாருடி . உன்னையே வெறிச்சு பாக்குறான்”
“ஹே ,சும்மா இருடி. ”
“அவன் பாக்குற பார்வைய பாத்தா , இன்னைக்கு உங்கிட்ட புரபோசல் பண்ணிடுவான் போலருக்கு”
“அச்சோ ! அமைதியா வாடி .ப்ளீஸ்”
தோழி , ஜெயாவிடம் கெஞ்சிக்கொண்டே வந்தாள் ஹேமா. தலைகுனிந்து புத்தகத்தை புரட்டுவதைப்போல அவனைப்பார்த்தாள். ஒரு நொடி பார்வையில் , அத்தனையும் அவளுக்கு வெளிச்சமாயிற்று. ஜெயா சொல்வது போலவே , அந்த ட்ரிம் செய்த மூஞ்சுக்கார இளைஞன் ,அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இவளின் ஒரு நொடி பார்வையை அறிந்து கொண்டவன் , ஏதோ விண்வெளி சாகசம் செய்து , நோபல் பரிசு வென்றவன் கணக்காக, சாதிப்பு பார்வையை வீசினான்.
மாணவர்கள் ,கட்டிடத்தொழிலாளர்கள், ஆபிஸ் பணியாளர்கள் ,பள்ளி சிறுவர்கள் ,வன்னியர் , நாடார், கவுண்டர் ,இந்து, கிறிஸ்டியன் ,முஸ்லிம் , தமிழன் ,தெலுங்கன் ,கன்னடன் என எப்பேதமும் பார்க்காமல் , அந்த பேருந்து அனைவரையும் தன்னுள் தாங்கி , ட்ரைவரின் காலுக்கு பணிந்து ஊர்ந்து சென்றது. அந்தப்பேருந்தினுள் முன்வாயிலை ஒட்டி , இரண்டு சீட்கள் தள்ளியிருந்த ஜன்னலோர சீட்டை, தற்காலிகமாக 5 ரூபாய் கொடுத்து , டிக்கெட் என்ற பெயரில் விலைக்கு வாங்கியிருந்தாள் , ஹேமா.அவளை , படிக்கட்டில் நின்று பந்தாவாக பார்வையிலேயே , கூனிக்குருக வைத்துக்கொண்டிருக்கும் ரவி தான் இக்கதையின் நாயகன் என்று சொல்லி தெரிவதில்லை.
சென்ற ஏப்ரலில், இறுதித்தேர்வை முடித்துவிட்டு, அவன்மூளையை விரும்பாமல் மார்க்கை விரும்பும் பல கம்பனிகளால் கேம்பஸ் இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டு விட்டு, தினந்தோறும் CNAUKRI, MONSTER , FRESHERWORLD போன்ற இணையதளங்களை மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு என்ஜினியர். வேலையை மனதினுள் தேடிக்கொண்டு , வீட்டில் சும்மா இருக்கிறான். படிப்பு முடித்து மூன்று மாதங்களே ஆவதால் , அவனுக்கு இப்போது வீட்டு கோர்ஸ்களான காய்கறி வாங்குவது, பால் பாக்கெட் முதல் மளிகை சாமான் வாங்குவதுபோன்ற ஸ்பெசல் கோர்ஸ்களை, தாயின் முன்னிலையில் கற்றுக்கொண்டு வருகிறான்.
ஒருநாள் TC வாங்குவதற்காக , 8.15 மணி பேருந்தில் ஏறியபோது தான் , இத்தேவதையைப்பார்த்தான். 4 வருடமும் கல்லூரி பேருந்திலேயே பயணத்தை ஓட்டியதால் ,இந்த ஹேமாவை பார்க்காமல் விட்டு விட்டான். அதன்பின் ஒவ்வொரு நாளும் , வீட்டில் ஏதாவது பொய்யைச்சொல்லி 8.15 பேருந்தில் பயணிக்க ஆரம்பித்து , இரண்டு வாரங்கள் முடிந்து விட்டன.
அவள் சேலத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவ கல்லூரி ஒன்றில், ஹோமியோபதி டாக்டர் ஆவதற்கான 4 வருடப்படிப்பில் ,3 வருடங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டிருக்கிறாள்.தாய் , தந்தை சென்னை ; பயங்கரமான இயற்கை ரசிகை. அதனாலோ என்னவோ, காலஜைவிட்டு 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் , சித்தர்கோவில் எனும் வனாந்திரப்பகுதியில் , வாடகை வீட்டில் தங்கியுள்ளாள்.அமைதி விரும்பி; அளவாக , அழகாக உரையாடுவாள். பேஸ்புக் ஐடி கிடையாது. அவளின் கல்லூரியில் வந்த , அத்துனை புரோபோசல்களும் ,வீழலுக்கு இறைத்த நீராயிற்று. அவளின் பெண் நண்பர்களுக்கு கூட அவளின் போன் நம்பர் தெரியாது. மொத்தத்தில் அவள் ஒரு குடும்ப குத்து விளக்கு.
இப்படி அவளுடைய வரலாறு முதல் வீரம் வரை அனைத்தையும் , தன் ஊர்க்கார நண்பர்கள், பக்கத்து ஊர் நண்பர்கள் , 6 வருடங்களுக்கு முன் ஸ்கூலில் படித்த ஜூனியர் பையன் என இவர்கள் மூலமாக மேற்கண்ட பத்தியை அறிந்து கொண்டான்.
தினமும் காலை , 8.15 மணி பஸ்சில் ஏறி , அவள் பார்வையிலும் அவன் பார்வையிலும் படும்படி நின்று கொண்டு சைட் அடித்தல் , மாலை 3.15 மணிக்கு அவளின் கல்லூரி பஸ் ஸ்டாப்பிற்கு , தன் சைக்கிளையோ,தன் அண்ணன் பைக்கையோ எடுத்துக்கொண்டு வந்து , 3.45 மணி பஸ்சை பிடித்து மீண்டும் சைட் அடித்தல் மற்றும் அவளுக்கே தெரியாமல் அவளை ட்ராப் செய்தல் எனஅவனுக்கு ஒரு அன்றாட வேலை கிடைத்தது.
இரண்டுவார விடாமுயற்சிக்குப்பின் , இன்றுதான் அவளின் கரிசணம் இவனின்மேல் விழுந்திருக்கிறது. காந்தி ஜெயந்தியன்று ஓசியில் கிடைத்த பீரை கண்ட குடிமகன்போல் ,அவளின் பார்வையால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான். இன்று அவளிடம் எப்படியாவது பேசியாக வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தான்.பஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால் , மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான் அவளை மீண்டும் மனதின்கண் நிறுத்தி , சைட் அடிக்க ஆரம்பித்தான்.அதோ, இன்னும் இரண்டு நிமிடத்தில் பஸ் ஸ்டாப் வரப்போகிறது என்ற கவலை அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.இப்பேருந்து இப்படியே தன் பயணத்தை தொடரக்கூடாதா ? யாருமற்ற வனத்தில் , அவள் கண்களைப்பார்த்தவாறே , ஆயுள் முழுக்க பேருந்து பயணம் செல்லக்கூடாதா என்று அவன் மனதில் ஏக்கம் பிறந்தது.
“ **** காலேஜ் ஸ்டாப்புலாம் இறங்குங்க ”-என்ற கண்டக்டரின் குரல் அவன் மனதில் கடுப்பை கிளப்பியது.இதோ , ஹேமா வருகிறாள் . தினம் தினம் கனவில் கட்டியணைக்கும் காதல் தேவதை , என் முன்னே தலைகுனிந்தவாறு இறங்குகிறாள். அட, என்ன , அவள் என்னைப்பார்க்கிறாளா? இல்லை பிரமையா? ஆமாம் , அவள் அவனை ஒருமுறைப்பார்த்து விட்டு செல்கிறாள். அவள் செல்லும் வழி பூந்தோட்டமாகவும் , பூக்களின் நடுவே , வெண்சுடி அணிந்த பூ போல மெல்ல கல்லூரிக்குள் சென்று மறைந்தாள்.
மார்ச் 22 ஐவிட நெடியதொரு பகலாகவே அவனுக்கு அன்றைய தினம் இருந்தது . இரண்டுமுறை அவளால் , அவன் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. மென்சிரிப்பு , ஆங்காங்கே அவன் முகத்தில் தோன்றி மறைந்தன. அடிக்கடி கடிகாரத்தையும் , கண்ணாடியையும் பார்தவனுக்கு, பசி என்ற உணர்வு மரித்து, படபடப்பு மேலோங்கி இருந்தது.நேரம் நெருங்க நெருங்க ,ஆர்வத்துடன் ,பயமும்பெருகிற்று.
மணி 2.45 .குளித்தாயிற்று. அண்ணன் , கம்பனி மீட்டிங்கிற்காக வெளியூர் சென்றதால் , வண்டி இன்று நம் கையில். அம்மாவிடம் , நண்பன் வீட்டிற்கு செல்வதாய் கூறியாயிற்று. கல்லூரி அருகிலும் வந்தாயிற்று. படபடப்பு அதிகமாயிற்று. வண்டியை நிறுத்தியவன் , கல்லூரியை ஒருமுறைப்பார்த்தான். இன்னும் அரைமணிநேரமுள்ளது. அவளிடம் ப்ரபோசல் எப்படி செய்யலாம் ,என்ன பேசலாம் என காலையில் இருந்து மனப்பாடம் செய்த வசனங்களை அசைபோட்டான்.மணி அடித்த சத்தம் ,அவன் காதுகளில ஒலித்தது. இதோ , அனைவரும் கூட்டை விட்டு பறக்கும் புறாவைப்போல பறந்துகொண்டு வருகிறார்கள். எங்கே அவள் ?
வந்துவிட்டாள். காலையில் பார்த்ததை விட இப்போது கொஞ்சம் சோர்வாக இருக்கிறாள். பஸ் ஸ்டாப்பை நோக்கித்தான் வருகிறாள். ஒருமுறை , வண்டியின் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக்கொண்டே நின்றான். அவனை , ஹேமாவும் நொடிப்பொழுதில் அடையாளம் கண்டுகொண்டாள். பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றாள். அவளை அருகில் கண்டதும் மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளின் கோர்வைகள் மறந்தாயிற்று. எப்படியாயினும் காதலை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற உறுதி மட்டும் அவனுள் நிலைத்திருந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ ! நா உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசனும்”
பேந்த பேந்த விழித்தாள் ,ஹேமா . இன்று பார்த்து ஜெயா , தன் கல்லூரி காதலனுடன், மதியமே கம்பியை நீட்டிவிட்டாள்.
“சொல்லுங்க”
தயக்கம் மிஞ்சியிருந்த வார்த்தைகள் , அவள் உதட்டின்வழி , வெளிவந்தது.
“நீங்க இல்லாம என்னால இருக்கமுடியுமானு எனக்கு தெரில . ஆனா , எப்பவுமே உங்க கூட இருக்கனும்னு தோனுது, அட்லிஸ்ட் உங்க செருப்பாவாவது .எனக்கு எப்படி லவ்வ சொல்லனும்னு தெரிலைங்க, காட்டத்தான் தெரியும். உங்க கண்ணே என்ன கொல்லுது. அத பார்த்துகிட்டே சாகறதுக்கு தான் அந்த ஆண்டவன் என்ன படச்சானோனு நினப்பு வருது உங்கள தோள்ல சாச்சுகிட்டு , ஒரு பூந்தோட்டத்துல முடிவில்லாத ட்ராவல்ல , வாழ்நாள் முழுக்க பன்னனும்னு நினைக்கிறேன் .இங்கிலிஷ்ல இதுவரைக்கும் நா யார்கிட்டயும் சொல்லாத வார்த்தய ,உங்ககிட்ட மட்டும் சொல்லத்தோனுது . ஐ லவ் யூ. வில் யூ மேரி மீ னு கேட்க தோனுது. ஆனா , என்னப்பத்தி எதுவுமே தெரியாத உங்க கிட்ட அத சொன்னா, அது தப்புதான. அதாங்க, இந்த லட்டர் உங்க கிட்ட கொடுக்கறேன் .படிச்சிட்டு வாங்க. நா , நாளைக்கு புரபோஸ் பன்றேன்”
------------------------------------------ஒரு மாதத்திற்கு பின்------------------------------------------------------------
“எங்கடா இருக்க ?”
“வீட்டுல தாண்டி”
“சாப்டியா ?”
“ம் . நீ சாப்டியா ?”
“சாப்டேன். ஆமா , ஏன்டா இன்னைக்கு காலேஜ் வரல . நீ வருவன்னு ஆசையா வெயிட் பன்னட்ருந்தேன் .போ , எங்கிட்ட பேசாத”
“அச்சோ ! சாரி தங்கம் . இன்னைக்கு ஒரு இன்டர்வியூ அட்டன்ட் பன்னபோயிருந்தேன். ஆல்மோஸ்ட் சக்ஸஸ். அதுனால தாண்டா வரல”
“கங்கிராட்ஸ் டா . டேய் , யாருகிட்டயும் நம்ம லவ் பன்றத பத்தி சொல்லல தான?”
“என் ஹேமா மேல பிராமிசா யார்கிட்டயும் சொல்லல”
“ம். ”
“தங்கம். நா நாளைக்கு காலைல சென்னை போகனும்டி. ஏதோ பார்மாலிட்டிகாக எம்.டிய மீட் பன்னனும்னு இன்டர்வியூல சொல்லிருக்காங்க”
“சரிடா ! போய்ட்டுவா . எப்போ வருவ ?”
“2 நாள் ஆகும். இன்னைக்கு நைட் 11 மணி ட்ரெயினுக்கு தான் புக் பன்னிருக்கேன்”
“என்னடா சொல்ற ? அப்போ 3 நாளைக்கு உன்ன பாக்க முடியாதா?”
“ம்”
“என்னால மூனு நாளைக்கு உன்ன பாக்காம இருக்கமுடியாதுடா”
“என்னாலயும் தான் தங்கம்”
“போ ! பேசாத”
“ஏன்டா தங்கம் ?”
“என்னதான் பாக்க மாட்டில . அப்பறம் எதுக்கு பேசுற ?”
“சரி , நா வேணா இப்ப வரட்டா ?”
“அச்சோ வேண்டாம் . யாராச்சும் பாத்தா வம்பாயிடும்”
“கவலையே படாத. நா யாருக்கும் தெரியாம வந்துடறேன் .நாம கொஞ்ச நேரம் பேசிட்டு …..”
“பேசிட்டு ?”
“கிளம்படறேன்னு சொல்ல வந்தேன்டி”
“அதான பாத்தேன் . அந்த பயம் இருக்கட்டும். ரவி , நீ வாங்கிகொடுத்த சிம்ல சிக்னல் எடுக்கவே மாட்டேங்குது. வேற சிம் எடுத்துட்டு வரியா?”
“சரி தங்கம் , சரி போன வை. நா உடனே வரேன் ”
அண்ணன் இன்னும் அலுவலகம் விட்டு வரவில்லை. சே, பைக் இல்லாம பஸ்ல எப்படி போறது? என்று தனக்குள் சலித்தவாறே, பஸ்ஸைப்பிடித்து கிளம்பினான். இன்னைக்கு நைட் , எப்படியாச்சும் அவள கிஸ் அடிச்சிடனும் என்ற முடிவுடன் பஸ்சிலிருந்து இறங்கினான். பஸ் ஸ்டாப்பை ஒட்டிய வனம் அவன் கண்ணில் பட்டது.அரைகிலோ மீட்டர் தூரத்தில்தான் அவளது வீடு. முத்தத்தின் வேகம் அவனைத் தாக்க , கலோரிகளை எரிய வைத்து , கால்களை விரட்டினான். இதோ அவளது வீடு. யாரோ ஒரு பணக்கார புண்ணியவானின் , கோடைகால கெஸ்ட் ஹவுஸ், இப்போது ஹேமாவின் ரெண்ட் ஹவுஸாக பொலிவுடன் காணப்பட்டது. யாரோ ஒரு NRI-ன் பங்களா என்று ஹேமா சொன்னது, நியாபகத்திற்கு வந்தது. இதே போன்றதொருவீட்டில் , ஹேமாவும் தானும் மட்டும் வாழவேண்டும் என்று அவனுக்கு தோன்றியதில் ஆச்சரியமில்லை. ஆனால் ,இங்கு ஹேமா மட்டும் எப்படி தனியாக இருக்கிறாள் என்பது அவனுக்கு , ஆச்சரியம்தான். வீட்டினுள் , சமையல் செய்து முடித்ததற்கான அறிகுறி , வாசல் வரை வாசம் வந்தது. கதவை தட்ட , அவனின் தேவதை , பிங்க் கலர் நைட் சூட்டில் மின்னயது. அமைதியாக , குட்டிபோட்ட பூனைக்கணக்காய் வீட்டினுள் சென்றவன் , அவள் வீட்டை வைத்திருக்கும் அழகினைப்பார்த்தவாறே மெல்ல பேச ஆரம்பித்தான்.அவன் பேச்சு, இன்றைய சென்னைப்பயணத்தில் ஆரம்பித்து, சினிமாவிற்கு சென்று முத்தத்தில் முட்டியது.
“ஹேமா ! கொஞ்சம் வாட்டர் கொண்டு வா”
அவள் தண்ணீரை கொண்டு வரும்போது , அப்படியே அவள் இடுப்பைப்பிடித்து, தன் பக்கத்தில் இருக்கி , மெல்ல அவள் உதட்டை சுவைத்துவிடவேண்டும் .முடிந்தால்பக்கத்தில் இருக்கும் மஞ்சத்திலும் வீழ்த்த முயற்சி செய்யலாம். இப்படியான நினைப்புகளில் புது உற்சாகம் , அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது .
‘டங்’ என்ற சத்தம் அவன் தலையிலிருந்து ரத்தத்துடன் வெளிவர , மயங்கி சரிந்தான். கண்விழித்தபோது , அரைபோதையில் அல்லாடிக்கொண்டிருப்பவனை போன்ற நிலையில்லா தன்மை அவனுள் இருந்தது. அவனுக்கு அதை விட ஹேமா என்ன ஆனாள் என்பதே பெரும் கவலையாக மனதினுள் கிடந்தது. தான் எங்கோ , வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்தான்.மெல்ல தன் பார்வைக்கு முழு கவனத்தையும் ஊட்டி , சுற்றும்முற்றும் பார்த்தான் . ஏதேதோ கண்ணாடி பெட்டிகள் அவன் கண்களுக்கு காட்சியளித்தன . ஒரு மேஜையில் , இரும்பு சங்கிலியின்பிடியில் அவன் கைகளும் கால்களும் பினைக்கப்பட்டிருந்தன.அவன் மூளை சிறிது தெளிவை பெற்றபின் மீண்டும் ஒருமுறை , தன்நிலையை உணர ஆரம்பித்தான். வாய் அடைக்கப்பட்டு இருந்த அவன் சுற்றிலும் மீண்டும்ஒருமுறை பார்த்தபோது தான் தெரிந்தது , அக்கண்ணாடி பெட்டிகள் ,மனித எலும்புகளை தன்னுள் அடைத்துக்கொண்டிருக்கும் நரகத்தின் சேவகர்கள் என்று. அய்யோ, ஹேமா என்ன ஆனாள் என்று நினைப்பதற்குள் , அவன்முன் ஹேமா, ஜெயாவுடன் வந்தாள்.
சிரித்தவாறே , “என்ன ரவி ! பயந்துட்டியா ? பயப்படாத . நா உன்ன எதுவும் பன்னமாட்டேன் . சும்மா உன்ன வச்சி ஒரு எக்ஸ்பிரிமென்ட் .”
என்று கூறிவிட்டு , தன் மேஜையினுள் இருக்கும் கத்தியை எடுத்து , ரவியின் இதயத்தை நோக்கி சென்றாள் .
மீண்டும் சேலத்தில் பயங்கரம் .சேலம் மாவட்டம் , நாய்க்கன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் ரவி .இவர் நேற்று இரவு நண்பனை பார்ப்பதற்காக , பக்கத்து ஊரிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் , காணாமல் போனதால் , அந்த பகுதியே பரபரப்புடன் காட்சியளிக்கிறது.இத்துடன் 8 பேர் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து , காவல்துறை ஆய்வாளர் திரு.****** நமக்கு அளித்த பேட்டியில் ‘இது சைக்கோ கொலைகாரனோட செயலா இருக்கலாம்னு காவல்துறை சந்தேகப்படுது.இந்த செயலுக்கு பின்னால் இருப்பவர்களை கண்டிப்பாக காவல்துறை கைது செய்யும்’
‘யோவ் . அந்த பையன் கடைசியா , யார்கூடலாம் பேசிருக்கான்னு பாத்தியா ? என்ன ஏதுனு எதாச்சும் தகவல் கிடைச்சுதா?’
‘சார் , அவன் ஒரு மாசமா , ஒரு நம்பர்க்கு நிறைய தடவ போன் பன்னிருக்கான். ஆனா, அந்த நம்பர்லருந்து , ஒரு SMS கூட இல்ல . அந்த நம்பர , பிரபுங்ற பையன் பேர்ல சேவ் பன்னிருக்கான் . அது யார்னு விசாரிச்சதுல , அந்த பையனோட ஃப்ரூப்ல தான் நம்பர் இருக்கு. . கடைசியா வீட்டவிட்டு போறப்போ , வீட்டுல போன வச்சிட்டு போயிருக்கான். இவனுக்கு முன்னாடி , காணாம போன பசங்களுக்கும் இவனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. ஆனா, இதே மாதிரி தான் மத்த 7 பசங்களோட கேசும் .காணாமப்போற பசங்க எல்லாரும் , வேலை கிடைக்காதவங்களா தான் இருக்காங்க. காலேஜ் முடிக்கிற ஸ்டேஜ்லயோ, இல்ல முடிச்சிட்ட ஸ்டேஜ்லயோ இருக்கற பசங்கதான் .’
'சரிய்யா! அப்டினா , சந்தேகப்படுற ஆளுங்களையெல்லாம் ,உடனே அள்ளிட்டு வா. ’
‘ஓ.கே சார்’
அதே நேரத்தில் , 8.15 மணி பஸ்ஸில் ,
‘ஹேய் ஹேமா !! அந்த பையன பாருடி . உன்ன விழுங்கற மாதிரி பாக்கறான்’
‘சும்மாவே இருக்க மாட்டியாடி. அமைதியா வா’
என்றவாறே , புது விருந்தாளியை , புதுப்பார்வை பார்த்தாள் ஹேமா.