காதல் என்றும் இன்ப நாதம்

விழிகள் பேச விளைந்த காதல்
****விடையாய் இதயம், இடத்தை மாற்றும்
மொழிகள் மறக்கும், மூச்சுக் காற்றில்
***முல்லைப் பூக்கும், மயக்கம் கொடுக்கும் !

வருகை காண நயனம் ஏங்கும்
****வயிற்றுப் பசியும் மறந்தேப் போகும்
அருகில் வந்தால் நாணம் தின்னும்
****அழகாய் விரலும் கோலம் போடும் !

உணர்வின் அலைகள் உள்ளம் உரசும்
***உயிரின் இழையோ உரிமை கேட்கும்
மணமும் முடிக்க மனமும் விழையும்
****மலர்ந்த காதல் நெஞ்சில் இனிக்கும் !

துடிப்பும் கூடும் தொலையும் தூக்கம்
****துள்ளு முள்ளம் துணையைத் தேடும்
விடியல் கசக்கும் வெயிலில் குளிரும்
****விலகும் அச்சம் அணைப்பில் உருகும் !

காதல் என்றும் இன்ப நாதம்
****காலந் தோறும் இனிக்கும் கீதம்
பேதம் போக்கும் வாழ்வின் வேதம்
****பெற்ற பேறால் உண்டோ சேதம் ?

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Jan-16, 1:31 am)
பார்வை : 101

மேலே