கண்ணாடி சினேகம்
அர்ச்சனைகள் இல்லாமல் ஆரம்பமாகாது அந்த அறையின் தினப்பொழுது.
கல்லூரி நண்பர்கள் நான்கு பேர் வேலை செய்யும் போது ஒன்றாக வசிப்பது அபூர்வம் தான். வினோத்தும் சேகரும் அடுத்த அடுத்த அலுவலகத்தில் பணிபுரிந்ததால் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பது வழக்கம். சேகர் சற்று முன்னரே எழுந்து காலை எட்டு மணிக்கெல்லாம் தயாராகி விடுவான். நம்ம தலைவர் வினோத்தை அரைமணி நேரமாவது எழுப்ப போராடணும்.
“நடுராத்திரி வரைக்கும் யாருடா டிவி பார்க்க சொல்றது?”
“என் மேனேஜர் பார்க்க சொன்னாரு மச்சி ”
“மவன, இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பல..!!!”
“கிளம்பலனா ? ”
“இன்னொரு பத்து நிமிடம் தருவேன்.. போடா.. கெளம்புடா”
தினம் தினம் இதே பாடு தான்.
“என்னமோ இவர் மட்டும் தான் நாட்ல உத்தமரு மாதிரி ஒன்பது மணி வேலைக்கு அவனவன் பத்து மணிக்கு தான் வரான். நீ மட்டும் ஏன் பத்து நிமிடம் முன்னாடி போற? காலேஜ்ல இருந்து இதே தொல்லை. என்னையும் இதுல இம்சிக்கிற” புலம்பிக்கொண்டே பின்னிருக்கையில் அமர்ந்தான் வினோத்.
“டேய், காலையிலேயே என்னை கத்த வைக்காதே, அமைதியா வா..” சேகர் வண்டி ஓட்டிக்கொண்டே..இவை வெறும் வாய் வார்த்தை சண்டைகள் தான். இருவரும்
ஆத்மார்த்தமான நண்பர்கள். இவனுக்கு ஒன்று என்றால் மற்றவன் உருகிவிடுவான். விவரிக்க முடியாத தோழர்கள்.
வீட்டிலிருந்து இரண்டு சந்து கடந்திருப்பார்கள், இவர்களை உரசியபடி வேகமாக ஒரு வேன் கடந்து சென்றது. “கொஞ்சமாச்சும் பொறுமை இருக்கா பாரு. நாம பொறுமையா போனாக்கூட விட மாட்டேங்குறாங்க பாருடா. ” சேகர் வருத்தப்பட்டுக் கொண்டான். அந்த வேனின் பின்புறம் “ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா” என்று எழுதப்பட்டு இருந்தது. மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன். வெண்மை நிறத்தில் சீருடை அணிந்து இருந்தார்கள்.
கடைசி இருக்கையின் ஓரத்தில் ஒரு மொட்டு மிக அமைதியாக உட்கார்ந்து இருந்தது. மாணவர்களின் பேச்சில் கவனம் போகாமல் வெளியே நடக்கும் மக்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“டேய் சேகர், அந்த வண்டியில் பாரேன் ஒரு குட்டி பொண்ணு என்ன சமத்தா இருக்கு. செம க்யூட்.”
“ஆனால் சிரிப்பு சந்தோஷம் குறையிற மாதிரி இருக்கு. என்ன மொறை மொறைக்குது பாரேன். நானும் மொறைக்குறேன் பாரு”
“நீ சாதாரணமா பார்த்தாலே குழந்தைகள் பயந்துவிடும். இதுல வேற நீ மொறைக்க போகிறாயா?”
வேண்டுமென்றே கோவமாக பார்ப்பது போல அந்த குழந்தையை பார்த்தான். குழந்தையும் பார்த்தது. எந்த மாறுதலும் இல்லை. அதற்குள் வேனருகே வழி கிடைத்ததால் முன்னே சென்று வேகமாக சென்றனர் இருவரும்.
இரண்டு நாட்கள் கழித்து அதே வேன், அதே பின் தொடரல், அதே குழந்தை, அதே சோகம். இவர்களையும் குழந்தை பார்த்தது. சேகர் முகத்தில் இல்லாத சேட்டைகளை செய்தான். அஷ்டகோணமாய் இருந்தது. நாய் போல நாக்கை தொங்கவிட்டு மூச்சுவாங்கினான். வாயில் ஏதேதோ செய்தான். குழந்தை முகத்தில் முதல் முதலாய் ஒரு மாற்றம். லேசாக சிரிப்பின் ரேகைகள். அந்த சின்ன புன்னகையே சேகரிடம் பன்மடங்கு புன்னகையை உருவெடுத்தது.
தினமும் பள்ளி வேனை இவர்கள் இருவரும் பின் தொடர்வது வழக்கமாகி விட்டது. பள்ளி வாயில் வரையில் நடந்தது பின் தொடரல். மெல்ல மெல்ல அந்த குழந்தையும் கண்ணாடி பின்புறமிருந்தே இவர்களிடம் உறவாட துவங்கியது. தினமும் இவர்கள் வந்தவுடன் கையசைத்து காலை வாழ்த்தை தெரிவிக்கும், சாப்பிட்டு விட்டீர்களா என குழந்தை கேட்கும். இவர்களும் சைகையிலேயே பதில் சொல்வார்கள். தோசை என்பதற்கு வட்டமாகவும், இட்டிலிக்கு கன்னமும், பூரிக்கு விரலை கீழே நோக்கி காட்டுவது என புதிய பாஷையில் பேசத்துவங்கினர். சிக்னலில் வெகுநேரம் நிற்பது வழக்கம் என்பதால் அந்த நேரத்தில் இவர்கள் விளையாடிக்கொண்டு வருவார்கள். அவள் விரலைத் துப்பாக்கி போல வைத்து சுடுவாள், இவர்களும் சுடப்பட்டது போல துடிப்பார்கள். ஊரும் சுற்றமும் இவர்களை பைத்தியக்காரர்கள் என்று நினைக்குமே என்று எண்ணிக்கூட பார்க்கவில்லை.
வர வர இந்த குழந்தையிடம் காலை சில நிமிடங்கள் செலவிடவில்லையெனில் நாளே ஒழுங்காக ஓடாது போல நினைத்தான் சேகர். என்றாவது வினோத் தாமதம் செய்து வேனை விட்டுவிட்டால் கடிந்து கொள்வான்.
மறுநாள் வேனை நெருங்கும் போது குழந்தை முந்தைய தினம் வராததற்கு கோபம் கொள்ளும். பொய்க்கோபம் தான் அது.
ஒரு நாள் வேகமாக பின் தொடர்ந்து செல்லும் போது குழந்தை முகம் வெளிறிப்போய் கைகளை உதறி பின்னால் பார்க்கும்படி எச்சரித்தது. லாரி இவர்கள் வண்டியை இடித்திருக்கும். கடைசி நிமிடத்தில் ஓரம் கட்டினான் சேகர். பின்னர் தான் குழந்தை முகம் சகஜ நிலைக்கு வந்தது. கண்ணில் சிறு துளிகள். பெயரிடப்படாத உறவு முளைத்தது.
ஒரு நாள் குழந்தை தன் பிறந்தநாளில் புத்தாடையில் வந்ததால் மறுநாள் இரண்டு புத்தகத்தை ஜன்னல் வழியாகப் பரிசாக அளித்தான் சேகர். ஓவியம் வரைவது என்ற புத்தகம். புத்தகங்களை பரிசாக அளிப்பது சேகரின் நீண்ட வருட பழக்கம்.
மாலை அறை திரும்பும்போது சேகர் ” வினோத் நாளை காலை பத்து மணிக்கு தயாரா இரு. இன்னைக்கு அலுவலகத்திற்கு ஒரு போன் கால் வந்தது. பைலட் மிஸ்ரா பேசினார். நாளைக்கு உங்க நண்பருடன் என் வீட்டுக்கு வர முடியுமான்னு கேட்டார்.எதுக்கு என்ன விவரம்னு கேட்பதற்கு முன்னரே லைன் கட்டாகிவிட்டது.
ஞாயிற்று கிழமையும் தன்னை நிம்மதியாக தூங்கவிட மாட்டேங்குறானே என்று அலுத்துக்கொண்டே சேகருடன் வினோத் சென்றான். ராயல் பாம்ஸ். அடுக்கு மாடி குடியிருப்புகள். உள்ளே நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட். தேடிப்பிடித்து மிஸ்ராவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினர்.
வடநாட்டு முகம் ஒன்று ” ர் யூ சேகர் ? ஐயம் மிஸ்ரா. கம் இன் ஜென்டில் மென் .யுவர் குட் நேம்? ” . “வினோத்”.
வடக்கத்தியர்கள் என்று வீட்டின் அமைப்பு, அலங்காரம் அனைத்தும் காட்டியது.
ஆங்கிலத்தில் ” உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், யாரிவன் உங்களை திடீரென அழைக்கிறான் என்று. நான் தான் சுனிதாவின் தந்தை ” வினோத் சேகர் காதில் ” அடப்பாவி, யாருடா சுனிதா? புதுசா என்கிட்ட சொல்லாம ஏதச்சும் பெண்ணை உஷார் பண்ணிவிட்டயா? ரவுண்டு கட்டி அடிக்க போறானுங்கடா”
அவர் தொடர்ந்து “நீங்க சுனிதாவிற்கு தந்த புத்தகத்திற்குள் உங்க விசிடிங் கார்டு இருந்தது. அதை வைத்து தான் உங்கள் அலுவலகத்திற்கு நேற்று அழைத்தேன்.”
இப்போது தான் அந்த வேனில் தாங்கள் சினேகம் கொண்ட குழந்தையின் பெயரைக்கூட கேட்காமல் இத்தனை அன்னோன்யமாக இருப்பது நினைவிற்கு வந்தது இருவருக்கும்.
"இதர் ஆவ் பேட்டி (இங்கே வா மகளே) ” சுனிதா தன் தந்தை மடியில் அமர்ந்தாள். சேகரையும் வினோத்தையும் தன் வீட்டில் பார்த்ததில், ஆச்சர்யம், சந்தோஷம், ஏக குஷி. சிரித்துக்கொண்டே இருந்தாள். “பால் குடித்துவிட்டு போ சுனிதா” அம்மாவின் குரல் உள்ளிருந்து. சமையலறை உள்ளே சொல்லும் முன்னே திரும்பி உண்டுவிட்டீர்களா என்று சைகையில் கேட்டாள். பதிலுக்கு காத்திராமல் மறைந்தாள்.
“பாருடா. இப்ப கூட சைகை தான் பண்றா ”
“அவளாள அவ்வளவு தான் செய்ய முடியும். சுனிதா வாய் பேச முடியாத ஊமை. யாரிடத்திலும் பழக மாட்டாள் இரண்டு மாதம் முன்னர் வரை. அவ சிரிச்சு நாங்க பார்த்ததே இல்லை. ரொம்ப கெட்டிக்கார பொண்ணு. னால் படிப்பில் ர்வம் காட்டுவதே இல்லை. பண்ணாத வைத்தியம் இல்லை. காதும் கம்மியாத்தான் கேட்கும். பள்ளி செல்வதில் கூட ஆர்வம் இல்லை. ஆனால் திடீர் என்று இந்த இரண்டு மாதமாக ஏகப்பட்ட மாற்றம். படிப்பில் ஆர்வம், என் கிட்ட வந்து ஒட்டிக்கிறா, பள்ளிக்கு முன்பே தயாராகி விடுகிறாள், வேனுக்கு இவ முதலில் போய் காத்திருப்பது என பெரிய மாற்றங்கள்.
அப்ப தான் ஓவிய புத்தகத்தில் உங்க விசிடிங் கார்டு இருந்தது. பக்கத்து வீட்டு பொண்ணு அதே வேன்ல வருகிறாள்.அவ தான் உங்கள பத்தி சொன்னாள். யார் இவள் மீது பரிதாபம் காட்டினாலும் இவளுக்கு சுத்தமா பிடிக்காது. உங்க உறவு தான் இவளை இவ்வளவு மாற்றி இருக்கிறது. நான் என்றைக்கும் கடமைப்பட்டு இருக்கிறேன்.”
சுனிதா சேகரை ஒரு அறையின் முகப்பிலிருந்து அழைத்தாள். தன் அறையை காண்பித்தாள். வரைந்து வைத்திருந்த ஓவியங்களை சேகரிடம் கொடுத்தாள். மூட்டை மூட்டையாய் இதுவரை தொடாத எல்லா விளையாட்டு சாமான்களையும் இறைத்து விளையாடினாள். தன் புத்தாடைகளை காட்டினாள். சத்தமாக சேகரும் சுனிதாவும் சிரித்து விளையாடினர்.
“சுனிதாவின் சிரிப்பு சத்தம் எப்படி இருக்கும்னு இதுவரை நாங்கள் கேட்டதே இல்லை ” என அவள் தாய் ஆனந்த கண்ணீருடன் வினோத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். தன் சோகம் முழுதும் பறந்து போய்விட்டது போன்று இருப்பதாகவும் அதற்கு மிகுந்த நன்றி கூறினாள். சிரிப்பொலி அந்த அறையிலிருந்து ஓயவேயில்லை.
ஒரு மணி நேரம் கழித்து குலுங்கி குலுங்கி சிரித்தபடி உள்ளிருந்து வந்த சேகர் வினோத்தின் தோளை அணைத்தபடி சிரித்தான். குலுங்கி சிரித்தவன் திடீரென குமுறி குமுறி அழுதான். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
வினோத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. “என்ன கொடுமைடா இது”. சிறிது நேரத்தில் கண்ணை கசக்கிக் கொண்டு, சாதாரண நிலைக்கு திரும்பி, “சார், ஒரு சின்ன கோரிக்கை, நாளையிலிருந்து தினம் சுனிதாவை நாங்கள் காலை பள்ளியில் விடுகிறோம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில் ”
“மகளின் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். உங்களுக்கு சிரமமில்லையெனில் தாராளமாக.”
“என்ன சிரமம் சார். எங்க செய்கையால் ஒரு அரும்பு சந்தோஷமா இருக்குன்னா , இதை விட நாங்க என்ன சார் பெரியதாக சம்பாதித்து விட முடியும்.”இப்போதெல்லாம் வினோத் சேகர் முன்னரே தயாராக கிளம்பி வண்டியிடம் நின்றுவிடுகிறான் சுனிதாவை காண.
___________________
-விழியன்
நன்றி : நிலாசாரல்