மாட்டுப் பொங்கல் காளைகள் - குமார்

காளைகள்
உணவுத் தொழிற்சாலையின்
தொழிலாளிகள்

எட்டுமணி நேரத்திற்கும் மேல்
உழுதாலும்
அவை மனிதனைப்போல்
அழுவதில்லை
சங்கம் வைத்து
எழுவதில்லை

உழைப்பிற்கு எடுத்துக்காட்டு
எருது
அவை ஏங்குவதில்லை
உழைப்பிற்கு
கிடைக்குமென்று விருது

அரசியல்வாதிகளின்
பகடைக் காய்கள்
இலங்கையோடு சேர்த்து இவைகளும்

ஜாதி மதச் சண்டைகளால்
அவற்றின் மண்டை உடைவதில்லை
ஏனெனில்
அவை மக்கள் அல்ல
மாக்கள்
சிக்கல் அல்ல
உழைக்கப் பிறந்த
பூக்கள்

இவை
பசுத்தோல் போர்த்திய
புலிகள் அல்ல
வலிதோள் பொருந்திய
பசுக்கள்

இயந்திரங்கள் நிறைந்தும்கூட
இவைகளின் இயக்கம்
குறைவதில்லை

மணலை மட்டுமே
பண்படுதுகின்றன
மனிதரைப்போல்
யார் மனதையும்
அவை புண்படுத்துவதில்லை

வால் இருந்தும்
அவை வாலாட்டுவதில்லை
தோல் இருப்பதால்
வண்டியிழுக்கின்றன
கால் வலித்தாலும்
நொண்டி இழுக்கின்றன

அவை
வாயூட்டு எவ்வளவு
கொடுத்தாலும் ஏங்குபவை
மாந்தரைப்போல்
கையூட்டு வாங்காதவை

அவைகள்
அசைபோடுபவை
ஆசை போடுபவை அல்ல

மாட்டுப்பொங்கல் அன்றுதான்
விட்டுவைகின்றோம்
மற்ற நாட்கள் அனைத்துமே
போட்டுத் துவைக்கின்றோம்

அவற்றின் ஆண் இனமோ
தோள் கொடுக்கின்றன மனிதனுக்காக
பெண் இனமோ
பால் கொடுக்கின்றன மனிதனுக்காக
இரண்டினமும் இறந்தாலும்
தன் தோல்கொடுக்கின்றன
மனிதனுக்காக

மக்களே நாம் என்ன செய்தோம்
இந்த மா மாக்களுக்காக

அதன் சதைக்காக
செய்கின்றோம் அவைகளை வதை

அவை கடவுள் மனிதனுக்குக்கொடுத்த
சித்திர விதைகள்
அவற்றை தயைகூர்ந்து செய்யாதீர்
சித்திரவதைகள்

எழுதியவர் : குமார் (14-Jan-16, 7:32 pm)
பார்வை : 172

மேலே