ஊணமைத்தான் தான் அகத்தே வாழ்வான் தக – ஏலாதி 71

நடப்பார்க்கூ ணல்ல பொறைதாங்கி னார்க்கூண்
கிடப்பார்க்கூண் கேளிர்க்கூண் கேடின் - றுடற்சார்ந்த
வானகத்தார்க் கூணே மறுதலையார்க் கூணமைத்தான்
தானகத்தே வாழ்வான் றக. 71 ஏலாதி

பொருளுரை:

வழி நடந்து செல்பவர்க்கு உணவும்,
மிக்க சுமையைத் தாங்கிச் சென்று களைத்தவர்க்கு உணவும்,
நோயிற்று நடமாட முடியாமல் கிடப்பவர்க்கு உணவும்,
ஏழ்மையில் பசியால் வாடும் உறவினர்க்கு உணவும்,
தன் உடம்பைச் சார்ந்த வானுலகிலுள்ள தென்புலத்தார்களுக்கு உணவும்,
பிற இடங்களிருந்தும், அயல்நாட்டிலிருந்தும் வந்தவர்களுக்கு உணவும்
குறைபாடின்றி அமைத்துக் கொடுத்தவன் தனக்குரிய மனையில்
செம்மையாய் சிறந்து வாழ்வான்.

கருத்து:

வழிநடப்பவர் முதலானவர்களுக்கு உணவு கொடுப்பவன் இம்மையில் நல்வாழ்வு பெறுவான். அப்படி இயலுமா? பழனி, சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு நடைப்பயணமாக செல்வோர்க்கு தங்கள் தகுதிக்கேற்ப உணவுப் பொருட்கள், பழங்கள், குடிநீர் பலர் கொடுத்து வருவதை பலரும் பார்த்திருப்பீர்கள். அத்தகைய செயல்கள் அனைத்தும் சிறப்பான செயல்களே ஆகும்.

‘வானகத்தார்க்கு ஊண்' என்பது நீர்க்கடனாற்றுதல். ‘மறுதலையா' ரென்பதற்கு இடநோக்கி வேற்று நாட்டாரென்று பொருளுரைக்கப்பட்டது. தென்புலத்தார் - படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்ட கடவுட்சாதியர், தென் திசையிலிருப்பவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-16, 6:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 157

மேலே