மல்லுக்கட்டு

மல்லுக்கட்டு
உங்களில் பலருக்கு ஞாபகமிருக்கலாம். இல்லையென்றாலும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மிக சமீபத்தில் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீதித்துறையில் ”கொலீஜியம்” அதாவது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் நியமனம் தொடர்பான மசோதா கொண்டுவந்தபோது அதை உச்சநீதிமன்றம் அதனைப் புறந்தள்ளியது. பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் போர்க்கோலம் பூண்டது. ” பா.ஜ.க அதன் வேலையைக்காட்ட ஆரம்பித்து விட்டது, நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுகிறது. சர்வாதிகாரம் காலூன்றத்தொடங்கிவிட்டது” என்பன போன்ற மாயையை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் கொந்தளித்தன.
அதே போல் வன்கொடுமையில் ஈடுபடும் சிறார்களின் வயதை 16 என மாற்றும் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது காங்கிரஸ், திமுக, தி.காங்கிரஸ், தே.வா.காங்கிரஸ் போன்ற பல கட்சிகளும் மேலவையில் தோற்கடித்தனர். மீண்டும் கொண்டுவரப்பட்டபோதும் ஆதரவளிக்கவில்லை. ஆனால் பகீரத முயற்சியாக குரல் ஓட்டெடுப்பின் அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே டில்லி மாணவி “நிர்பயா” கொலைவழக்கில் சிக்கிய சிறுவன் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி வெளிவந்துவிட்டான்.
”கூட்டல் கணக்கில் கோல்மால் செய்து, பெறப்பட்ட தீர்ப்பு” என பச்சைக்குழந்தைகளும் பதறும் வகையில் ஜெயலலிதா வெளிவந்தது… மாட்டுத்தீவன வழக்கிலிருந்து வெளிவந்து இன்று பீகாரில் ஆளும் பார்ட்னராக வலம் வரும் லல்லுபிரசாத், போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா உறவினர் “குவாத்ரோச்சி” யை தேடிப்பயனில்லை என சி.பி.ஐ. வாயாலேயே உச்ச நீதிமன்றத்தில் கூற, (சோனியாவின் தூண்டுதல் பேரில் மன்மோகன் சிங் எடுத்த நடவடிக்கை ) அதை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டு “ஓ.கே.,ஓ.கே… இனித்தேட வேண்டாம்” என உச்ச நீதிமன்றம்.
அதேபோல் முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரளமாநிலம், காவிரிப்பிரச்சினையில் கர்நாடகமாநிலம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்ததில்லை. ஆனால் எவரும் அதைக் கண்டிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மீது மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதன் பின்னணி என்ன? ஒரு அமைப்பு. அதுவும் மேட்டுக்குடி மக்களில் ஒரு சிலர் நிர்வாகத்தில் நடத்தப்படும் நலவாரிய அமைப்பு. இவர்களின் மனுக்களுக்காக உடனடி அமர்வு …. உடனடி தடை, என பெரும்பாலான மக்களின் உணர்வுகளோடு உச்சநீதிமன்றம் விளையாடுகிறது. இப்படி எத்தனையோ கேலிக்கூத்துகள்
கார் ரேஸ் நடக்கலாமாம்… ரேக்ளா நடக்கக்கூடாதாம்… ரோட்டில் கட்டிப்பிடித்து முத்தமிடலாமாம்.. ஆனால் காளையோடு விளையாடக்கூடாதாம்.
விலங்குகள் நலவாரிய அமைப்பு ஒட்டுமொத்த கால்நடைகளுக்கும் பாதுகாப்பென்றால், தீவனம் கூட வாங்கிப்போடமுடியாமல் கால்நடைகளை இறைச்சியாக்க கனத்த இதயத்தோடு விற்கிறானே விவசாயி … அவனிடமிருந்து .. அவற்றைப் பெற்றுக்கொண்டு தீனிபோடுவார்களா? இது விவசாயிக்கும் பலனளிக்குமே… இது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வருமா?
நீதித்துறையானது எத்தனையோ பொதுநலவழக்குகளை தானே மேற்கொண்டு தலையிட்டு அரசுகளை வழி நடத்தியுள்ளது என்பதையும் மறுக்கவில்லை. இதே நீதித்துறை இதேபோல் மனிதர்கள் நலவாரியங்களின் துணை கொண்டு, “மானாட…மயிலாட…”, ”ஜோடி நம்பர் 1” , ”சூப்பர் சிங்கர்” போன்றவற்றில் ஆபாச உடையணிந்து தங்கள் வயதிற்கு புரியாத பாலினம் சம்பந்தப்பட்ட பாடல் வரிகளைப் பாடி ஆடுகின்றனரே… தோற்றுப்போகும் குழந்தைகள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் கதறி கண்ணீர் சிந்துகின்றனரே.. அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவது குறித்து சிந்திப்பார்களா? அக்குழந்தைகளின் கல்வித்தரம்… திரைமறைவில் நடத்தப்படும் எதேச்சதிகாரம்… அதைவைத்து கொள்ளையடிக்கும் தொலைக்காட்சிகளின் வரவுசெலவு, இவற்றில் காட்டட்டும்… நீதித்துறை தனது அக்கறையை… அதை விட்டுவிட்டு ஒரு மாநிலத்தின், தேசத்தின் அடையாளத்தின் மீது கவனத்தினை செலுத்தி, அவற்றை சிதைப்பதில் அக்கறை கொள்ளவேண்டாம்.
சஞ்சய்த் வழக்கு, சல்மான்கான் வழக்கு, ஆகியவற்றில் காட்டிய அக்கறை மிகபிரசித்தம் என்பதை நாடு நன்கறியும்.
இந்திய இராணுவத்தில் ஒட்டகங்கள் மீது பீரங்கிகளை வைத்து பயிற்சி எடுத்தனர், இதற்கு படைப்பிரிவே உள்ளது. இதற்கு என்ன பதில்? அதுவும் விலங்குதானே … விலங்குகள் நலாமைப்புகள் தலையிடுமா?
இப்பொழுது மக்களின் மனங்களில் ஏற்படும் கேள்விகள் என்னவென்றால் ”ஒரு ஜனநாயக நாட்டில், உச்சநீதிமன்றம்தான் எதையும் முடிவு செய்யுமென்றால், தேர்தல் எதற்கு? மாநிலங்கள் மற்றும் மத்தியில் மக்களாட்சி எதற்கு? பிற உள்ளாட்சி அமைப்புகளும் எதற்கு?”. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிகளும் எதற்கு? கோடி கோடியாக செலவுகளும் எதற்கு? “ இவைதான் அந்த கேள்விகள். இவ்வாறு கேள்வி கேட்கப்படுவதால் இவர்கள் அனைவரும் நீதிக்குப்புறம்பானவர்களா?
காலவேகத்திற்கு ஈடுகொடுத்து, மக்களின் உணர்வுகள், தேசத்தின் பாரம்பரியத்தன்மை, கலாச்சாரத் தொன்மை, இவற்றை புறந்தள்ளும் நீதித்துறையால் யாருக்கு என்ன பயன்? நம் தேசத்தின் அடையாளம்தான் என்ன? மாநிலங்களின் தனித்தன்மைகள்தான் என்ன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசு, தனது நாட்டிற்கான நலத்தைக்காக்க, பாரம்பரியத்தைக்காக்க, பலத்தை அதிகப்படுத்த , தனது பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கேற்ப தேசத்தினை வழிநடத்த முடியாதென்றால் ஜனநாயகம் ஏன்?
பாகிஸ்தான் நாட்டில் ஜனநாயக அரசு இருப்பினும், அது இராணுவத்தின் பிடியிலிருந்து வெளிவராமல், கைப்பாவையாகவே செயல்படுகிறது. விளைவு ? அங்குள்ள மக்களே இந்தியாவுடன் கைகோர்க்க ஆவல் கொண்டாலும், இராணுவம் குட்டையைக்குழப்பி, பீதியை பிரசவித்து, அந்நாட்டின் முன்னேற்றத்தையே பின் தள்ளுகிறது.
பாகிஸ்தான் வளர்ச்சிக்கு இராணுவம் எப்படி முட்டுக்கட்டையோ மியான்மர் நாட்டின் வளர்ச்சிக்கு இராணுவம் எப்படி முட்டுக்கட்டையோ அதேபோல் இந்தியாவிற்கு நீதித்துறையோ?!... என இப்படியெல்லாம் எண்ணவைத்தது என்ன சாதனை?

நலவாரியங்கள்- நீதித்துறை ஆகியவை தங்களை ஆத்மபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமிது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நியாயமான மக்கள் கோரிக்கைகளுக்காக தங்களின் ஆளுமையை செலுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். தொடங்கட்டும் மல்லுக்கட்டு.

எழுதியவர் : m.பழனிவாசன் (16-Jan-16, 7:09 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 71

மேலே