நானும் வருவேன்ஒரு பக்க கதை -கவிஜி

மான்டூகனுக்கு பிடித்த இரவுப் போக்கு... மற்றவர்களுக்கு அபாயகரமானது.. அவனுக்கோ ஆத்மார்த்தமானது.....

அவன் இரவுகளின் பட்சி.... பகல் முழுக்க தூங்குவான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது... ஆனால் இரவு முழுக்க ஒரு சாத்தானைப் போல வீதி எங்கும் அலைவான்.... தினம் ஒரு வீடு தேர்ந்தெடுப்பான்.......... அது அவனிடம் அந்த வீட்டுக்காரர்களின் பழைய முந்தைய நாட்களைப் பொறுத்து வீரியம் கூடுதலாகவோ... மிகக் கூடுதலாகவோ இருக்கும்...

விடியலில் புகார்கள் வருவதுண்டு.... ஆனால் எப்படி.... சாத்தியமே இல்லை... எல்லாம் மனப் பிராந்தி என்று சொல்லி விடும் சாமர்த்தியசாலி மான்டூகனின் பாட்டி.... ஒரு நாள் கேட்டும் பார்த்து விட்டது....

"மாண்டு அப்டி கூட முடியுமாடா...?"

"போ பாட்டி...அப்டியெல்லாம் இல்ல.... நான் கொஞ்சம் அழகா இருக்கேன்ல. அதான்... அப்படி என்ன பத்தியே நினைச்சு அவுங்க கனவுக்குள்ள நான் வந்தறேன்.. நாம எதை அதிகமா சிந்திக்கறோமோ அதுதான் கனவா வரும்னு அறிவியல் சொல்லுது...மெய்ஞானம்கூட... சாட்சிகள் உண்டு..." அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பாட்டி தூங்கி விட்டது....

அவன் சிரித்துக் கொண்டே..... இன்று பாட்டியிடம் புகார் கூறி பாட்டிக்கு இத்தனை பெரிய சந்தேகத்தை ஏற்படுத்திய ருக்குமணி வீட்டுக்கு போவது என்று முடிவெடுத்தான்.... "மவளே.. இன்னைக்கு மிரட்டற மிரட்டுல பாயோட உச்சா போறயா இல்லையானு பாரு..." என்று மனதுக்குள் கருப்புத் திட்டத்தை வகுத்துக் கொண்டு பின்னிரவில் ஒரு நேரத்தில் அறையில் எப்போதும் அமரும் இடத்தில் உடல் சரிந்து விடாதபடி சுற்றிலும் பாதுகாப்பாக தலையணை வைத்துக் கொண்டு கண்கள் மூடி உயிரை வெளியே கொண்டு வந்தான்...

அடுத்த கணம் ருக்குவின் தலைமேட்டில் நின்றிருந்தான்.... வியர்த்துக் கொட்டியபடி ஆவேன தூங்கிக் கொண்டிருந்த ருக்குவை பார்க்கவே பிணம் போல இருந்தது...

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்குகுகுகுகுகுகுகுகுகு....." என்று கத்தினான்.....

திடும்மென எழுந்தமர்ந்த ருக்குவின் கண்கள் நாலாபுறம் சுழன்றன... முன்னால் நிற்கும் மான்டு கண்களுக்கு தெரியவில்லை... அவனின் வெப்பக் காற்றை முகத்தில் வாங்கிய ருக்கு..... கத்தி......... கதறி... நினைத்த மாதிரியே உச்சா போய் சுவரோரம் பல்லி போல ஒட்டி முட்டிக் கொண்டு நின்றாள்.... அடித் தொண்டையில் இருந்து கத்திக் கொண்டே அறை முழுக்க சாத்தானின் வேலைகளை செய்து கொண்டிருந்தான் மான்டூகன்...

பிசாசின் பிடியில் ருக்குவை விட்டு விட்டு அதிகாலை வீடு திரும்பினான்....

தொடர்ந்தது.. வேட்டை இரவுகளின் வேடிக்கை வக்கிர மனம்.....

ஒரு நாள் அந்த ஒரு நாள்....

அவனால் ரதியின் வீட்டில் இருந்து திரும்ப முடியவில்லை...திரும்பினாலும் தன் உடலுக்குள் நுழைய முடியவில்லை... தலையணை சரிந்து உடல் சரிந்து விட்டது.. உயிர் வெளியேறும் போது இருந்த உடல் நிலை உள்ளே செல்ல முயற்சிக்கையில் இல்லாது போக... உயிர் வெளியிலேயே தங்கி விட்டது....

பாட்டி.. பக்கத்து வீட்டு ஆட்கள் என்று யார் யாரோ கத்தியும், தட்டியும், பார்த்தும்.. கதவு திறக்கப் படவேயில்லை.... மனதுக்குள் அழுகை வெடித்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் சட்டென கதவு திறக்கப்பட்டு வெளியே வந்தான் மான்டூகன்...

எதிரே நின்று கொண்டிருந்த மான்டூகனின் ஆன்மா திடுக்கிட்டு தடுமாறியது.... "எப்படி.. எப்படி இது சாத்தியம்....? வேறு யாரோ ஒருவரின் ஆன்மா என் உடலுக்குள் புகுந்து கொண்டதே என்ன செய்வது...?"- என்று மிக அருகில் சென்று பார்த்தது....

ஆன்மாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு கண்களால் ஏதோ கூறினான் வெளியே வந்த மான்டூகன்...

மெல்லிய உதடு கூட அசைந்தது.... அசைவை மனக் கண்ணில் ஓட்டிய மான்டூகனின் ஆன்மாவுக்கு இப்போது நன்றாக புரிந்தது....

"நான் உன்னோட அடுத்த ஜென்மம் டா...."

கவிஜி

எழுதியவர் : கவிஜி (16-Jan-16, 11:56 am)
பார்வை : 253

மேலே