அவள் பார்வைக்குள்

மெல்ல மெல்ல
சிறகு விரிக்கும் ஒரு
கருங்காக்கை
சூரியனை விழுங்கியது

வெகு நேரமாய் காணாதிருந்த
நிசப்தம் திடீரென
ஆக்கிரமிப்பு செய்து
கொண்டிருந்தது

உண்டதை அசை போடும்
மாடாய் மெல்ல மாறியது
மனம்
எத்தனையோ வகை வகையாய்
உண்டிருந்தும் சரியாய்
செரிமானம் ஆகாமல்
முதலில் எட்டிப்பார்த்தது
அவள் விழிகள் தான்

நான் தேவதைகளை
நேரில் கண்டதில்லை
ஆனால் நான் கற்பனை
செய்து வைத்ததில்
சிறகுகள் மட்டும்
இல்லாதிருந்தது அவளிடம்

மின்னல் வெட்டும்
பார்வை
சன்னல் வைத்த
ஆடை
சடாரென்று நிறுத்தப்பட்ட
பேரூந்து போல நான்
ஆட்டம் கண்டதில்
ஆச்சரியம் இல்லை
நிச்சயம் பல நிதானமற்ற
பேரூந்துகள் இதுவரை
கவிழ்ந்திருக்க கூடும்

இதோ மார்கழி
இந்நேரம் போர்வைக்குள்
இருந்திருக்க வேண்டும் ஏனோ
அவள் பார்வைக்குள்
விழுந்திருக்கிறேன்

எனது அகவரிகளில்
ஆயிரம் கவிதைகளை
கொடுத்தவள்
முகவரியை தராதது வருத்தம்

உலகம் உருண்டை தானே
மனதை தேற்ற பாவம்
கலீலியோ கல்லடி பட்டு
இதை கண்டறிந்து கொடுத்தானே

நீ நட்சத்திர கூட்டத்தில்
ஒளிந்திருந்தால் தான்
கடினம்
பூமியில் தானே இருக்கிறாய்
நிச்சயம் கண்டறிவேனடி

எழுதியவர் : கவியரசன் (18-Jan-16, 12:34 pm)
Tanglish : aval paaarvaikkul
பார்வை : 112

மேலே