கவிஞன் தொடர்பு எல்லைக்கு அப்பால் - சந்தோஷ்

யாரிடமும் இருப்பதில்லை
எக்கவிஞனுக்கும் ஓர் அச்சம்.

வரமென்று பெற்றிருப்பான்
தன் மூளையில்
சொற்களின் அச்சகம்.

தா என கட்டளையிட்டால்
தந்திடும் நல்கவி அவனது
சிந்தனை நூலகம்.

வேரென உள்நுழைந்து
கூர்ரென சிதைந்திடும்
அல்லது
பனியென உறைந்திடும்
வாசகனின் இருதயம்.

பூவென தாளெடுத்து
எழுதினாலே போதும்
ஆங்கே முளைக்கும்
பூவையரின் மாநகரம்.

காதலென முனைந்தாலே
மன்மத கவிஞனுக்கு
எதிர்பார்ப்பற்ற தாரமாகிடும்
எவ்வித எதிர்பாலின உயிரினமும்

தீயென எழுதினால்
தீக்கரையாகிடும் இழிசமூகத்தின்
நெடுநாள் மூடத்தனம்.

எரிமலையென பொங்கினால்
பொசுங்கிடும் வக்கிரவாதிகள்
செல்லரித்த சமுதாயம்.

இப்படியாகதான்
ஒரு கவிஞனை
என்னுள் செதுக்க நினைத்தேன்..
அந்தோ.. பரிதாபம்...
என்னுள் இருந்திடும் கவிஞன்
அவனுக்கு
அவ்வப்போது தகராறு
அவ்வப்போது
அவனுக்கு சோகச் சுவடு
அவ்வப்போது
அவனுக்கு போதையே குறிப்பேடு.

கவிஞனின் கற்பனையானது
கவிஞனின் சிந்தனையானது
இப்பொதெல்லாம்
சிகரெட்டின் சாம்பலாய்.
புற்றுநோய் சீரழித்த
யாக்கை பிண்டமாய்..!

இப்போது...
எனக்குள்ளிருக்கும் கவிஞனுக்கு
வாழ விருப்பம்.
வாழ்க்கை விருப்பத்தில் அல்ல.

ஆம் என் கவிஞன் தற்போது
தொடர்பு எல்லைக்கு அப்பால்..!


--

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-Jan-16, 7:16 pm)
பார்வை : 96

மேலே