மலையடி கிராமம்

காடும் மலையும் விரைந்து
பாயும் ஓடை நதியும்
மழையும் முகடும் தேடி
விழும் அருவி நீரும்
மரமும் தழையும் பறந்து
விரையும் வௌவ்வால் ஆந்தையும்

புதரும் செடியும் மறைந்து
ஆடும் புலியும் அரியும்
புல்லும் முள்ளும் குதித்து
ஓடும் முயலும் மானும்
விறகும் வேரும் குறுக்கே
நழுவும் பல்லியும் பாம்பும்

கிளையும் விழுதும் பிடித்து
தாவும் குரங்கும் அணிலும்
கீரியும் பன்றியும் அகழ்ந்து
எடுத்த கிழங்கும் புழுவும்
நிறைந்த அம் மலையின்
கீழ் அமைந்த குறுங்கிராமத்தில்

குளமும் குட்டையும் குளித்து
மகிழும் கொக்கும் காக்கையும்
வயலும் வெளியும் கண்ணை
பறிக்கும் பயிரும் பச்சையும்
ஆடும் மாடும் அசந்து
அசைபோடும் அருமை மாலை

பகலவனும் படுக்க மலை
நடுவே நழுவும் அவ்வேளை
பெண்ணும் தோழிகளும் இடையில்
வண்ணத் துணியும் வாளியும்
ஒன்றாய்த் தூக்கி வரப்பே
அசைந்து போகும் அவர்கள்

குளத்தை நாடி கும்மாளத்தோடு
குழைந்து பேசி செல்கையில்
குயில் இசையாய் குரலெலாம்
ஒலிக்க கொலுசொலி செவியிழுக்க
வயற் தவளையும் பயிர்
வண்டும் இன்னொலி இசைக்க

வரப்பைக் கடந்து குளத்தை
அடைந்து குளிக்க மனம்
களிப்பில் ஆட்டம் போடும்
தோழி உடன் ஆடையிலே
துன்ப மெல்லாம் மறந்து
மனம் தொடுவானம் செல்ல

குளித்து விட்டு திரும்புகையில்
இருள் அரும்ப ஆரம்பிக்கும்
ஈரத்துணியுடன் இன்பாட்டு பாடிக்கொண்டே
வயற்கடந்து பின்னே நகைத்து
வீடு செல்ல பிரிவார்
மறுவிடியல் மனதில் கொண்டே.

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (23-Jan-16, 9:31 pm)
பார்வை : 110

மேலே