வேறு நிலாக்கள்_8 _ அகன்

" முடியா கதைகள் கொண்ட ஊமை மொழி" _ அகன்

&&&&&&&&&

" புல்நுனியில் 
வானம் எழுதும் கவிதை 
காலைப் பனித்துளி " 
_ புற்களைப்பிய்த்து எனக்கு 
அர்ச்சனை செய்து நீ 
அன்று சொன்னாய் இப்படி .... 

உன் கண்களைப் பார்த்தவாறு 
இப்படி நான் சொன்னேன் 
"வான வீதியின் 
சரிகைப் பொட்டுகள் 
விண்மீன்கள் ".... 

கீழ் கிடந்த முள் ஒன்றெடுத்து 
எனைக் குத்தி இப்படி சொன்னாய் 
"பூவின் கவலை வழிசல் 
செடியின் முட்கள் ......" 

பூவிதழ்களை உன் மீது தூவிய 
நான் சொன்னேன் இப்படி , 
"பச்சையின் உச்சியில் 
பூக்கின்றன மொட்டுகள் 
வேர்களின் சிரிப்பாய் ....." 

நீ கடித்த கனியொன்றின் 
ஒரு பகுதி எனக்கூட்டி 
அன்று சொன்னாய் இப்படி , 
"மலர்களின் பிரசவம் 
மரத்தில் கனிகள் ...." 

"கனிகளின் இறப்பு 
கைகளில் விதைகள் --என நான் அன்று முடித்தேன் " 


அதேப் பூங்காவில் 
அதே வீதிகளில்
இன்றென்னை அடிக்கின்றனர் 
பித்தன் நானென்று - 


திரும்பி வந்து நீ கேட்டால் அளிப்பதற்கு 
பூங்காவின் 
பூக்களையும் கனிகளையும் 
விதைகளையும் செடிகளையும் 
பிய்த்து உன் நினைவுகளோடு, 
--என் பிறந்த நாளுக்கு 
நீயளித்த சட்டைக்குள் திணித்துக்கொண்டு , 
பகலில் வானத்தையும் 
இரவில் விண்மீன்களையும் 
வெறித்துப் பார்த்துக் கிடக்கும் 
என்னை 
பித்தன் என்று அடித்து விரட்டுகின்றனர் . 


அறியமாட்டார்கள் அவர்கள் 
ஒரு மழைபொழிவின் 
அகலமெனும் தூரத்தில் நீ 
விலகிய நொடிகளில் இருந்து .. 
நாம் மீண்டும் சேர்வோமென அறியாமலேயே வீதிகளில்
 கிடக்கின்றேன்
இரவுகளின் இருட்டுகளில்
பகல்களின் பரப்புகளில்.
_ இரவு எனக்கு மிகவும் பிடித்த பொழுது..!!!
சப்தங்களைத் 
தொலைத்த பொழுதில் 
எனது மூச்சுக் காற்றோடு 
நான் உனக்காக உருவாக்கும் இசையில் 
பலர் வருவர்...! 

இரவு ...... 
துக்கங்களை தூக்கத்தில் .கரைக்கும் 
நித்திர மாத்திரை தயாரிக்கும் 
சத்திரச் சாவடி....!! 

உறவுகளை உருவாக்கிட 
காமன் சாசனம் 
படைக்கும் சாமம்.....!! 

வெளிச்ச நாற்றுக்களை 
வீதியுள் விதைத்துவிட்டு 
வீடுகளின் 
மூலை முடுக்கு மேடையில் 
இருட்டு நடத்தும் 
மதன நாடகப் பொழுதுகள்.....!! 

விடியும் விளிம்பில் 
விதியும் மாறும் 
என்றெண்ணி 
பல மழலையர் 
பசியில் படுத்துறங்க 
விடைப் பெற்ற வெளிச்ச இடைவேளை ...!! 

இரவு 
என்னோடு பேசும் இரகசியங்கள் காத்திட 
பகலை நான் விரும்புவதில்லை..!!. 
இரவை அழைக்கும் மந்திரக்காரன் பகலென்பதால் 
பகலை நான் வெறுப்பதில்லை...!!! 

இரவு என்பதாவது : 
விடியும் எனும் நம்பிக்கை அளிக்கும் 
வீரிய லேகியம் --இளைஞர்களுக்கு...!! 
முடிந்த முனைப்புகளின் கணக்கெடுப்பு 
முனகல் இசைத்தொடர்-முதியவர்களுக்கு....!

அன்றியும் ,
இரவுக்குள்ளும் வீதிகளின் வெளிகளிலுமே என் வாழ்வு
நீயின்றி
ஆனால் இப்போதெல்லாம்
வீதிகள் இல்லா ஊர்களை
எவர் அளித்தது ?

நடந்தும் 
கடந்தும்,ஓடியும்,தள்ளாடியும் 
சென்றுக் கொண்டே இருக்கின்றன
வீதிகள் அன்றுப்போலவே
எனது நெடுவளைவுகளிலும் 
நீளுடலிலும்.. 
நொடிகளைத் தொலைத்துவிட்டு 
சென்றவர்கள் மீதும்  
இன்றும் அப்படியே...!!! 

எரிந்து கரைந்தும் 
புதைந்து துண்டங்களாயும்...... 
மாறிப்போனீர்கள் 
என் போன்றோரைச் சுமந்தும் ..... 

பல்லக்கும் பரிவாரமும் 
பிண பாடையும்,மண ஊர்வலமும் 
யவ்வன சிங்காரமும் அலங்காரமும் 
சிருங்காரமும் 
சீறும் குளம்புகளின் அமிழ் வாதையும்.... 
எத்தனை ரகசியங்கள் இன்னமும் உங்களுக்குள்ளே .. 
அமுக்கங்களாய் ஆழத்தில்.....!!!! 

நீங்கள் சொன்னவை 
சொல்லாமல் சென்றவை 
சொல்ல மறந்தவை... 
என , 
இன்னமும் நெடுவளைவாய் நீளுடம்பாய் 
மெளனமாய் கிடக்கின்றீர்கள்
எங்களுக்கான இந்தப் பெயர்களுடன் 
ராஜபார்ட்டை.... 
ஜமீன்ரஸ்தா...... 
பறையர் பாதை ..... 
சுடுகாட்டு வழி.... 
பிராமண அக்ரகாரம்.... 
தேரோடும் வீதி.... 
தாசி தெரு.... 
செட்டியார் முடக்கு.... 
களத்துமேட்டு சந்து...

................மானுடத்திற்கான அடையாளங்கள் இழந்தே
முடியா கதைகள் கொண்ட
ஊமை மொழியாய்.
__ அகன்

எழுதியவர் : அகன் (27-Jan-16, 1:13 am)
பார்வை : 315

மேலே