வேறு நிலாக்கள் 9 ரமேஷாலம்

அகதி மரம்
***************

வாழ்தலும் ....
வாழ்தல் குறித்த கனவுகளும்...

ஒரு வறண்ட குளத்தில்
கண்கள் வெறிக்க...
எலும்புகள் தெரிய...
விறைத்துக் கிடக்கும்
ஒரு மீன் என...
ஆகிவிட்டது எனக்கு.

இறந்தகாலத்தின்
செருப்பாய்
தேய்ந்து கொண்டிருக்கிறது...
எனது நிகழ்காலம்.

"இருக்கிறேன்"....
என்பதே தினம் நீளும்
பெரும் கனவாய்
விதிக்கப்பட்டுவிட

ஒரு நகரும் மரமென
எனது வேர்களை
எங்கோ புதையவிட்டு விட்டு
நடந்து கொண்டிருக்கிறேன் நான்.

இங்கு-
இன்று......
என் கிளைகளும்
என்னோடு இருப்பதற்கில்லை.

வேறு வானத்தில்...
வேறு சிறகுகளுடன்...
வேறு காற்றை...
சுவாசித்தபடி
அவை நடை பயில்கின்றன.

இன்று என்னிடம்-
யாரும் தங்கிச் செல்லும்
நிரந்தர நிழல் இல்லை;
எந்தப் பறவையும்...
என்மேல் தங்குவதற்கு இல்லை.
அலைந்து சிதையும்
என்மேல்...
கூடுகட்டிக் குஞ்சுகளுடன்
வாழ....
அவை என்னை
நம்புவதற்கில்லை.

எனது விருப்பம்...
எனது காதல்...
எனது தோழமை...
எல்லாமே
எமது மண்ணிலேயே...
வெட்டப்பட்டுவிட...
இன்று...
எதனோடும் இல்லை
நான்.

என் கல்லறைக்கான இடம்
எனது மண்ணில்
மறுக்கப்பட்டு விட...
வியர்த்தபடி
வேறு மண்ணில்
விறகாகிச் சரிகிறேன்.

வார்த்தைகளால்
அழத்தெரியாமல்...

எனது சாம்பலைக்
காற்றில் உதிர்த்தபடி....

கடவுளைச் சபிக்கும்
வானத்தைக் கடந்து செல்கிறேன்

ஒரு...
அகதி மரமென ..

எழுதியவர் : ரமேஷாலம் (27-Jan-16, 4:57 pm)
பார்வை : 273

மேலே