ரமேஷ் ஆலமின் =அகதி மரம்- கசல் உருவில்

[வேறு நிலாக்கள் 9-இல் ரமேஷ் ஆலத்தின்- அகதிமரம்-281331- படித்து அதைக் கசல் உருவாக்கம் செய்த எனது முனைப்பில் எழுந்த கவிதை..]

வறண்டதோர் குளத்திலே கண்களும் வெறித்து
இறந்தமீன் எலும்புடன் இருக்கிறேன் விறைத்து
இறந்த,என் காலத்தின் செருப்பெனக் கிடந்து
மறந்ததன் சுவடென மனதினுள் உறைந்து-----------------------------------------------------------(வறண்டதோர்..)

இருக்கிறேன் என்பதே பெருங்கன வாகும்!
இருந்தவேர் புதந்துபோய் எங்கேயோ கிடக்கும்!
கிளைகளோ எனக்கிலை எனைவிட்ட தாகும்!
இருப்பினும் நடக்கிறேன் எனக்கிது போதும்! -------------------------------------------------------(வறண்டதோர்..)

வேறொரு வானம் வேறொரு சிறகு
வோறொரு மூச்சொடும் அவர்க்கினி உறவு!
ஆரினி வருவார் ஆர்க்கினி நிழல்,நான்
பேரினில் நானுமே கூடெனில் விழல்தான்! ---------------------------------------------------------(வறண்டதோர்..)

விருப்பமும் காதலும் வீழ்ந்துமே போயின
நெருங்கிய தோழமை நீர்த்துமே காய்வன
சுருங்கிய மண்ணுமே சுடுகா டானது
சுழல்கிறேன் சரிவதைச் சொல்ல,யார் கண்டது? -------------------------------------------------(வறண்டதோர்..)

ஆற்றிடும் சொற்களை ஆரெனக் களிப்பார்!
ஊற்றிடும் கண்ணில்.நீர் ஆரினி வழிப்பார்!
காற்றிலென் சாம்பலைக் கரைத்து,நான் வேகிறேன்!
கடவுளைச் சபித்து,வான் கடந்துமே போகிறேன்.-------------------------------------------------(வறண்டதோர்..)
===எசேக்கியல் காளியப்பன் ====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (28-Jan-16, 6:51 am)
பார்வை : 71

மேலே