காணாமல் போனவர்கள்-சந்தோஷ்

ஒரு ஐந்தாண்டுக்கு முன்பு
வண்ணக் கொடிகளை ஏந்தி
வாகனங்களில் அணிவகுத்து
வாக்கு கேட்டு வந்தவர்களை
பிரச்சாரம் செய்கிறார்களென
நினைத்தோம்
பிச்சை கேட்கிறார்களென
நினைக்கவில்லை.
அவர்களுக்கு பிச்சையிட்டிருந்தால்
பிச்சைக்காரனென நினைத்திருப்போம்.
அவர்களோ எங்களில் சிலருக்கு
பிச்சையிட்டு, காலில் விழுந்து
வாக்குச்செல்வத்தை பறித்தவர்கள்.
அவர்களை வேட்பாளர்களெனவும்
சொல்லிக்கொள்ளலாம்.
அதிலொருவர் ஆளும் கட்சியில்
மற்ற சிலர் எதிர்கட்சிகளில்

அவர்களைத்தான் அந்தநாள் முதலாய்
காணவில்லை.
காணவில்லை என்றில்லை
காண இயலவில்லை.

யாரேனும் கண்டுப்பிடிக்க தேவையில்லை
வெற்றி பெற்றவர்
முதுகு வளைத்து கொண்டிருப்பார்
ஆளும் கட்சி முகாமில்..!

தோல்வி பெற்றவர்
நெஞ்சம் வெந்து கொண்டிருப்பார்
ஆண்ட கட்சி கழகத்தில்..!

எங்களின் வாக்குத் துண்டுகளை
பணம் காட்டி..
சின்னம் காட்டி..
தீய குணம் காட்டி
ஜனநாயகத்தோடு மிரட்டி
கடித்து தின்று செழித்தவர்களுக்கு
ஜீரணமாக ஆகியிருக்கும்
ஆண்டு ஐந்து...!

மீண்டும் வருவார்கள்....
அவர்களோ.. அவர்களுக்காக
அவர்களின் தலைமைத்தலைகளோ
வருவார்கள்..

வரும் நல்நாளை மட்டும்
ஊடகங்களே நீங்கள்
விலை போகாது
ஜனநாயகம் தழைக்க
நெற்றிக் கண்ணில்
கவனித்து படமெடுத்து
பாடமெடுங்கள்....
ஆம் வரும் அந்த நாளில்
அடக்குமுறை , ஒடுக்குமுறை
பேரலை, பெருமழை கழிவுகளில்
ஒதுக்கப்பட்ட எங்கள்
ஜனநாயகச் செருப்புகள் ஆடும்
ருத்திர தாண்டவத்தை..
நிமிடம் தப்பாமல்
ஒளிபரப்புச் செய்யுங்கள்...!

**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (28-Jan-16, 6:55 pm)
பார்வை : 103

மேலே