வேறு நிலாக்கள் 10 கார்த்திகா முதல் கலாம் வரை

செம்மாந்து திரியும் கவிதைகள் ( 1)
************************************************


காவியம் ((பிரமிள் )
*

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது *நான் நிலா கொஞ்சம் நட்சத்திரங்கள் (கார்த்திகா ஏ. கே)
*

இருள் வானின் நீள் பக்கங்களைச்
சலனங்களற்றுத் திறக்கிறேன்

சுவடுகள் அற்ற என்
பாதங்களைத் தீண்டும் முன்பனி

கரங்கள் சேர்க்கும்
குளிர்க் காதலன்

உயிர் இழையோடும்
மெல்லிய மூச்சுக்காற்று

நட்சத்திரங்கள் புடை சூழ
புவி வலம் வரும் நிலவில்
என் பெயர் எழுதி இருக்கிறது! *


உப்புநீர்ச் சமுத்திரம் (குட்டிரேவதி)
*

அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்.
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்.
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாகவாய்ப் பாய்ந்து கடந்து
சிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்.
கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை.
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி
அதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்.
இப்பொழுதைய அதன் தாகமெல்லாம்
உப்புநீர்ச்சமுத்திரத்தை அப்படியே குடித்துவிடுவது.
நீண்ட நேரமாக கடலின் மேலே
நின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று
தலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும்
கடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை *


காற்று ஒருபோதும்….( தேவதச்சன்)
*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை *.


மரம் ( டாக்டர் அப்துல் கலாம்)
*

அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது
கிளி வளர்த்தேன்
பறந்துவிட்டது
மரம் வளர்த்தேன்
இரண்டும் திரும்பி வந்துவிட்டன
(தொடரும் ....)(ஒரு மாறுதலுக்காய் ..இந்தப் பதிவு ..
சனிக்கழமை முதல் தொடர் வேறு பரிமாணங்களில் ...
நேசத்துடன்,
கவித்தா )

எழுதியவர் : பிரமிள், கார்த்திகா, குட்ட (29-Jan-16, 12:12 am)
பார்வை : 144

மேலே