வேறு நிலாக்கள் 11 - ஜி ராஜன்
வேப்பமரத்து வசந்தங்கள்
*************************************
தென்மேற்கு
பருவக் காற்றின்
சாரல் தெளித்த
சந்தோஷமோ...
என் வீட்டு ஜன்னல்
தொட்டு வளர்ந்த
வேப்பமரத்தின்
பசுமைத் தளிரணிந்த
சிறு கொம்பு
என்னை கையசைத்து
அழைக்கிறது...
ரொம்பவும்
பழைய மரம்தான்..
நான்தான் கவனிப்பதில்லை..
கொஞ்ச நாள் முன்பு
உதிர்ந்த இலைகளை
தீயிட்டு கொளுத்திய
அண்டை வீட்டுக் காரர்
புன்சிரிப்புடன் சொன்னார்..
கொசுவை விரட்டியடிக்கும்..
வேப்பம்பூ
வேம்பு சோப்பு...
வேப்பெண்ணை..
வேப்பிலை காப்பு...
வேம்புக் குச்சி பிரஷ்..
வேப்பமர வசந்தங்கள்..
வேகமாய் ஓடியது மனத்திரையில்..
பாரதம்தான்
தாய் நாடாம்
வேப்பமரத்துக்கும்...
இணையம் சொன்னது...
மருத்துவ குணங்களையும்
பட்டியலிட்டது...
மறக்கப்பட்ட..
புறக்கணிப்பட்ட..
தொலைக்கப் பட்ட...
இன்னும் என்னென்னெவோ...
ஜன்னலுக்கு
வெளியே..
வேப்பமரத்தின்
பசுமைத் தளிரணிந்த
சிறு கொம்பு
என்னை கையசைத்து
அழைக்கிறது..