காட்சிப் பிழைகளோடு ரசனை உலா - சந்தோஷ்

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.


ஐம்பது நாட்கள்.
ஐம்பது கஜல்கள்.
ஐம்பது கவிஞர்கள்.
நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்
பல ரசனையாளர்களின் கருத்து பரிமாறல்கள்
சில வித்தகர்களின் அறிவுரைகள்
சில ஆளுமையாளர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும்
என் தமிழ் அன்பர் மகாகவியின் வாழ்த்துக்களுடன்,

அற்புதமான கஜல் கவிதைத் திருவிழா எழுத்து இணையத்தளத்தில் அரங்கேறியது.
”ஊர் கூடி தேர் இழுத்தால் உயர்வு வந்து சேரும். பார் வியந்து பாராட்டும்.” இந்த கஜல் தேர் எழுத்து தளத்தில் வலம் வர பெரிதும் முயற்சித்து ,முன்னெடுத்து வழிநடத்திய தோழர் ஜின்னா பாரட்டுதற்குரியவர் மட்டுமல்ல . நன்றிக்குரியவரும் ஆவார்.

முகமறியா இணையத்தள தோழர்கள், மாறுப்பட்ட கருத்துகளை சுமந்துக்கொண்டிருக்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிமுகமாகத் துடிக்கும் இளந்தளிர்கள் என யாவரையும் ஒரு வகைமையான சிந்தனை கூடாரத்திற்குள் வரவேற்று.. ஒரு நேர்கோட்டில் பயணிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு முன் தோழர் கவிஜி ”எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்” எனும் தொடர்கதை உட்பட பல தொடர்கதைகளில் இணையத்தள தோழர்களை இணைத்து, எழுத வைத்து பெருமைக்குரிய கூட்டுமுயற்சிக்கு முன்மாதிரியாக திக்ழந்தார். தோழர் ஜின்னா இந்த முன்மாதிரியை வேறுமாதிரி சிந்தித்து கஜல் தொடரை சிறப்பாக நடத்தினார்.

இந்த கஜல் தொடரில் நான் பங்களிக்கவில்லை என்றாலும், ஆரம்பம் முதல் நிறைவு வரை கண்டு வாசித்து ரசித்து மகிழ்ந்தேன். ஒரு வாசகனின் பார்வையில் “ கஜல் என்பது யாதென “ எனும் கேள்வி குறி ரசனைக்குறியாக மாறிய என் மனம் நிறைந்த அனுபவங்களை இக்கட்டுரையில் பகிர்கிறேன் .

தோழர்களே..! வாருங்கள். மீண்டும் சின்னதாய் கஜல் திருவிழாவிற்குள் ஒரு உலா வருவோம்.

கஜல் கவிதைகளுக்கும் புது அல்லது நவீன கவிதைகளுக்கும் என்ன வேறுபாடு.? இந்த கேள்வியோடுதான் இத்தொடரின் முதல் படைப்பை வாசிக்கச் சென்றேன். வாசித்தாலும் புதுக்கவிதைக்கான ரசனைதான் தந்தது. கஜலுக்கான ரசனை கிட்டவில்லை என்பதைவிட கஜலை இதுவரை அறியமுற்படாத விளைவினை விளங்கிகொண்டேன். இந்த தொடர் காட்சிப் பிழைகள் எனும் தலைப்போடு வலம் வந்தது . முதலில் வாசிக்க நேர்ந்தது தோழர் ஜின்னாவின் கவிதை, ஒரு காதலி மீதான ஏக்கம்.. தாபம்.காதல் சோகம் என பலவித உணர்வுகளை கொட்டிய ஜின்னாவின் கவிதையில் ..


”நான் அந்த பக்கம்
நீ இந்த பக்கம்
தண்டவாளமாக இருக்கிறோம் நாம்
நம்மை மிதித்துக் கொண்டே
ரயிலில் வருகிறது காதல்... ” // பிரிந்த இரு காதலர்களிடையே காதலுணர்வு படுத்தும் பாடு எப்படியானது என மிக நேர்த்தியான கற்பனையில் சொன்னவிதம் ரசிக்க வைத்தது. இதுப்போன்ற கற்பனைகள் கவிஞர் தபூ சங்கர் கவிதைகளில் வாசித்த ஞாபகம்.காதலியின் சிரிப்பழகில் செத்துப்பிழைத்தேன் என்பதை..

“உனது கன்னக்குழியில்
எனக்கான ஆறடி அப்படியே தெரிகிறது.. ” என வெளிப்படுத்திய விதம் அழகு. வரியை வாசிக்கும் வாசகனை யோசிக்க வைத்து ரசிக்க வைத்தது. காதலியின் கன்னக்குழியில் கல்லறைக்கான ஆறடி குழி தெரிகிறதாம். அழகில் மயங்கிவிட்டாரம்.

காதலில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் ஏதுமில்லை. காதலென்பது உணர்வு. உணர்வும் கூட..! உணர்வில் வெற்றியேது தோல்வியேது. இல்லையா.? இதைத்தான் தோழர் ஜின்னா அழகாக சொல்கிறார் இப்படி

“ உன்னிடம் தோற்றுப்போக
நான் ஒன்றும் போருக்காக வரவில்லை
காதலுக்காக வந்திருக்கிறேன்... ”


இதுபோல வரிக்கு வரி.. வசியப்படுத்தினாலும் கஜலென்றால் என்ன ? புலப்படவில்லை. ஆனால் இந்த கவிதைக்கு கருத்தளித்து எனக்கு புரியவைத்தார் தோழர் ஐயா திரு.அகன் அவர்கள்.

--

"என்ன வேணாலும் நினைச்சுக்கோ...
உன்ன இப்போ பிடிக்கல"
என்று சொல்லி நீ போனபோதுதான்
நிலவில் காற்றில்லை என்பது
ஞாபகம் வந்தது சம்பந்தமேயில்லாமல்.... ”


தோழர் கவிஜியின் காட்சிப் பிழைகள் கவிதையிலுள்ள வரியிது. பிடிக்கல என சொல்லி விட்டு சென்றவளுக்கும் நிலவில் காற்றில்லை என ஞாபகம் வருவதற்கும் என்ன சம்மந்தம்.? வெறுமனே நேரடி சொல்வித்தையில் கவிதையை அலங்கரிப்பதை விட.. ஒரு கவிதையை வாசிக்க வரும் வாசகனுக்கும் சிந்தனை வேலைக் கொடுப்பதும்.வரிகளிலுள்ள கருத்தாழத்தை ருசிக்க வைப்பதும். மிக தேர்ந்த, பல தரப்பட்ட ஞானங்கள் உடைய ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்பது என் கருத்து.

நிலவில் காற்றில்லை என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. காற்றில்லாத நிலவில் ஈர்ப்பும் ஈரமும் இருப்பதில்லை. வெப்பநிலை அதிகம் ஆதலால்.. மூலக்கூறுகள் அல்லது பொருட்கள் விடுப்பட்டு சென்றுவிடும். ஆக இந்த விஞ்ஞானத் தகவலை லாவகமாக உவமையாக எடுத்துக்கூறி.நிலவைப் போல ஈரமற்ற அவள் கல்நெஞ்சக்காரி என சூசகமாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் கவிஜி.

இதுபோலவும்.. கிளுகிளுப்பாகவும்.. உணர்வுமிக்கதாகவும் பல வரிகளில் த்ன் தனி முத்திரையை, ஆளுமையை செலுத்தியிருக்கிறார்.அதிலொன்று இது


”உன் மறதி ஞாயிறில் உன் வீட்டு
ஆடு நான் -மெல்ல அறு” // ..> படிமங்கள் உத்தி தோழர் கவிஜிக்கு மிக இயல்பாக வருகிறது. மறதி ஞாயிறு.ஞாயிற்றுக்கிழமை மட்டனுக்கு ஆடு பலியிடுவது போல.. அவளின் மறதியில் பலியானானோ காதலன் ? பலியாவது என தெரிந்தாலும். கொஞ்சம் மெல்ல அறு என எழுதியிருப்பது.. உச்சம்..படிப்பவருக்கும் வரும் இரக்கம்.!

இதே போல இன்னொன்ரு வரி..


” சட்டையில் கூட பூத்து விடுகிறாய்
இன்று நெற்றிப்பொட்டாய். “ // நெற்றிப்பொட்டு வைத்திருக்கும் ஒரு காதலி.. காதலனின் மார்பில் சாய்ந்திருந்தால் அவளின் பொட்டு அவனின் சட்டையில் ஒட்டியிருக்கும் அல்லவா. இதைதான் பூக்க விட்டிருக்கிறார் கவிஞர். .

நீ வராத என் இறுதி யாத்திரையில்
பிணத்தைக் காணவில்லை கலாட்டா! // பிணமானாலும் காதல் நெறி, காதலி மீதான அன்பு வெறி மாறாது போலிருக்கு.அப்போதும் தேடி நாட விழைவதோ? !! பலே பலே.இது கவிஜியின் சிறப்புகளில் ஒன்று.

கவிஜி.. அசத்தல் ஜி..!

--

காதலியோடு காதலோடு மயங்கியிருப்பது சொர்க்கம்.இச் சொர்க்கத்தை விடவும் வேறென்ன சொர்க்கம் தேவை. அப்படிதானே காதலர்களே ?.இதைத்தான் நிலாகண்ணன் இப்படி வன்முறை செய்கிறார் நிஜ சொர்க்கத்தின் மீது

“நீ என் அருகில் இருந்தால்போதும்
சொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.” அடடா என வியந்த வரியிது.


இதுபோல பல வரிகளில் ரசனைனை தூண்டி வாசகர்களின் உணர்வோடு விளையாடியிருக்கிறார் நிலா கண்ணன்.

“ஆடையை அட்டையாக்கிக்கொண்ட
கவிதைப்புத்தகம் நீ. ” -> ஆடை கவிதைப்புத்தகத்தின் அட்டை என்றால்.. புத்தகத்திலுள்ள கவிதைகள்.. ?

பூதங்கள் மட்டுமே
புதையலுக்கு
காவலிருக்க வேண்டும் என்பதில்லை.
சில நேரங்களில்
பூப்போட்ட தாவணியும் காவலிருந்துவிடுகிறதுதானே.! // புதையல் எதுவோ..? யோசித்துக்கொள்ளுங்கள். கிளுகிளுப்பு கூடிக்கொள்ளும்.

ஒட்டுமொத்தத்தில் நிலாவின் குளுமையோடு கண்ணனின் லீலையும் செய்திருக்கிறார் இந்த காட்சிப்பிழையில்..


--

நீயாகவும் அழைக்கவில்லை,
நானாகவும் வரவில்லை,
அழைத்து வந்த காதலோ
எனக்குள் ஒளிந்து கொள்கிறது. // இப்படி காதலை ஒளித்து வைத்தவர் தோழர் ஆண்டன் பெனி. காதலுணர்வு தானே எல்லாம் செய்கிறது. எதுவும் செய்ய வைக்கிறது.

என்னிலும் வாய் பிளந்து நிற்கிறது
அந்தத் தேனீர்க் கோப்பை
அதனிடம் எச்சரிக்கையாய் இரு. // அடடா என்ன ஒரு கற்பனை.காதலியின் அழகில் வாய்பிளந்து நிறகிறதாம் தேநீர் கோப்பை. கோப்பை மீது பொறாமைப்படும் கவிஞரே.. தேநீர் ரொம்பச் சூடாக இருக்கிறது.!


அகத்திணை
அளவேனும்
விலக்கி வை
உன் தோழியை
இது
நான்
உன்னை
தலைவியாக்கும்
தருணம். // இவ்வரியை முழுவதுமாய் உணரவேண்டுமெனில் சங்க இலக்கியத்தை படித்திருக்க வேண்டும். கவிப்பேரரசுவின் திரைப்பட பாடல் வரிகளில் இதுபோல சங்க இலக்கியங்களை உள்நுழைக்கவிட்டு.. ரசிகனின் மொழி ஆளுமையை சோதிப்பார். அல்லது கற்றுக்கொள்ள தூண்டுவார். சபாஷ் ஆண்டன் பெனியாரே..!

தொட்டில் பிடிக்கும் என்றாய்
மடையன் நான்...
உனக்கு, ஊஞ்சல் வாங்கி வந்துவிட்டேன். /// அழகிய சிறுகதை இதில்..!


---

பெளர்ணமி நாளில் கடல் அலைகள் வேகமெடுத்து ஆர்பரிக்கும்.ஆனால் அலைகள் ஏமாந்திருக்கிறது தோழர் ஜி.ராஜனின் காட்சிப்பிழையில்

”உன் முகங்கண்டு
பௌர்ணமி என்றெண்ணி
அலைகள் ஆர்ப்பரித்த கதைகள்
ரகசியமாய் பரவின கடலோரம்
கார்முகில் சொன்னது என் காதோரம் ” காதலியின் முகம் பெளர்ணமியாய் பொலிவாம். கடல் அலைகளும் இப்பெண்ணை பெளர்ணமி என்றெண்ணி ஏமாந்த கதை ரகசியமாய் பரவியதாம். இதை கார்முகில் சொன்னதாம் கவிஞரின் காதோரம். அடடா என்ன ஓர் ஈர்ப்புமிக்க கற்பனை.


இதுபோல நிலவை அழகுநிலையத்திற்கு அனுப்பி புதுமை செய்திருக்கிறார் கவிஞர். தலைவியை தீண்டிய காற்று நன்றி சொல்ல வருகிறது. யாருக்கு..?

“உன்னைத் தீண்டிய
பூங்காற்று மீண்டும் திரும்பியது
தாழம்பூவுக்கு நன்றி சொல்வதற்கு...
பாதி வழியில் பாரிஜாதப்பூவுடன்
காட்டுமுல்லையும் காத்திருந்தது முன்பதிவுக்கு.. ” பூவெல்லாம் முன்பதிவு செய்யுமளவிற்கு இந்த கஜலின் காதலி பேரழகோ..?

--
கவிதைகளில் அரசியலை பகடி செய்வதும். அரசியலை விமர்சிப்பதும் சில கவிஞர்களுக்கு கைவந்த கலை. சமீபத்திய சம்பவங்களை கவிதையினூடே காட்சியாக்கி சாடி இருக்கிறார் தோழர் கருணா.

உன் காதல் சாரலில் தகிக்கும்
நோய் கேட்டேன்..

பெருமழை பேரிடராய் மாறி..
ஒரு.. மரித்துப்போன புன்னகையை
நிவாரணப் பொட்டலமாய்
வீசி விட்டு போகிறாய்..

அதில் கூட உன் படத்தை ..
எதற்காக நீ ஒட்டி இருக்கிறாய்.! // புறக்கணித்த வலியை கூறினாலும்.. அதில் நகைச்சுவையுடனான நையாண்டி, நம்மை ரசிக்க வைத்தது. படத்தை ஒட்டி விளம்பரம் தேடும் அரசியல் போல ஈனத்தனமானதா காதலியே உன் அனுதாபம்.? என ஆதங்கப்படுகிறரோ..? இக்காலத்தில்.. சில மாந்தர்களின் மறுப்பும் வெறுப்பும் கூட விளம்பர மோகத்தில் தான் கவிஞரே!

இந்த காட்சிப்பிழையில்.. கஜல் பாடலுக்கு தகுந்த மெட்டுப்போடும் லயமான வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது.

.-
மகளிர் மீதான அன்பு மட்டுமல்ல, மழலை மீதான அன்பும் புனிதமானது. சிறு மழலைமீதானஅன்பை , பாசத்தை வர்ணித்து வாசிக்கும் நம்மையையும் ஒரு மழலையாய் ரசிக்க வைத்த தோழர் கனா காண்பவரின் காட்சிப் பிழை..அற்புத கோட்டோவிய மழை.

உன் அம்மாவை போல நீ புன்னகைக்கையில்
காதல் தொலைகிறது.
என்னை நீ பெயர் சொல்லி அழைக்கையில் என் அம்மா கிடைக்கிறாள். // ஆஹா.. என்னவொரு அழகு.. என்னவொரு அற்புத உணர்வுச் சிலிர்ப்பு.. நெகிழ்ச்சி..!

அன்புமிக்க தந்தையாகவும் காட்சியாகியிருக்கிறார். பிழையாகவில்லை கனா காண்பவர்.

--

மாத்தி யோசி என்பதுதான் தோழர் சுஜய் ரகுவின் சிறப்பம்சமோ ?

"உன்
ஆழ்துளைப் பார்வையில்
விழுந்து
மூர்ச்சையாகின்றன
பருவக் குழந்தைகள் ..! ” அவளின் பார்வை ஆழ்துளை. அதில் விழந்தாராம் காதலன் பருவக் குழந்தையாய்.

ஒவ்வொரு வரலாற்றின் மறுப்பக்கமும் கண்ணீர் சுமந்திருக்கும்.அதுபோலத்தான் இந்த கவிதையிலுள்ள காதல் துயர நிலையென இப்படி வர்ணிக்கிறார்.

“வரலாறுகள்
கண்ணீர் சுமப்பதுபோல்
நான் உன்னை
சுமக்கிறேன் ”

--
ஊனமுற்ற மனைவியை
முதுகில் சுமந்தபடி வரும்
மனிதரைக் கண்டு
ஓடி ஒளிந்து கொள்கிறது
வாழ்வின் சுமை...

புனிதமானது அன்பு. அன்பாய் சுமந்தால். சுமை கூட காதல்தான். சுமையென்பது யாதென தெளிந்தால் வாழ்வின் எவ்வித சுமையும் சுமையாகாது. வாழ்வியல் தத்துவமாக பிரகனப்படுத்திய தோழர் குமரேசனின் அனைத்து வரிகளும் பாராட்டுதற்குரியவை. உணரவும் ரசிக்கவும் செய்தவை. அதிலொன்று

குப்பைத் தொட்டியில் உணவிற்காய்
தெரு நாயோடு சண்டையிடும்
பைத்தியத்தைக் கண்டும்
மிஞ்சிய உணவைக்கூட
அவனுக்களிக்காது
சாக்கடையில் ஊற்றுகிறது
ஒரு தெளிந்த பைத்தியம்... // மனிதமற்றவன் பைத்தியமென சாடிய இவ்வரிகள் கருத்தாழமிக்கவை, எளிய சொற்களில் தெளிய வைத்திருக்கிறார் உண்மையில் சில பைத்தியமற்ற பைத்தியங்களை.

--


உண்மையில் கஜலென்பது யாதெனக் கேட்டால்... பதிலுரைக்கிறார் தோழர் தர்மன் இவ்வாறு..

இந்தக் கஸலைப் போலவே
புரியாத புதிர்தான் எனக்கு
இந்தக் காதலும். // அப்போ சரிதான் தோழர் .. வித்தை தெரிந்தவர்கள் செய்யக்கூடிய வேலைதான் காதலும் கஜலும்.

உன்னை பூஜிக்கத்தான் விருப்பம்.
உன் காதலின் ஆகம விதியில்தான்
அனுமதி இல்லை. // பிறப்பால் யாவரும் சமமென அறிவுறுத்திய வள்ளுவர். மூடத்தனங்களை அழிக்க போராடிய பெரியார் வாழ்ந்த இப்பூமியில், முற்போக்கு சிந்தையில் நாகரிகம் வளர்ந்த இக்காலத்தில் இன்னார்தான் பூஜை செய்யவேண்டுமென பிற்போக்கில் நடைப்போடும் சட்டத்தின் கழுத்தை பிடிக்கிறது இந்த வரி. பூஜிக்க விதியா.? எவன் படைத்தான் இந்த விதியை.? சதியாகதான் இருக்கிறது. கவிஞரே... காதலைக்கொண்டு ஆகம விதியை கிள்ளிவிட்டு பதம் பார்த்த விதம் கம்பீரம்.வீரியம். வாழ்த்துக்கள்.


குறிப்பிட்ட ஒரு பா வகைக்குள் வசதியாக அமர்ந்துக்கொண்டிருந்த ஒரு கவிஞரை சற்று வேறு மாதிரி எழுத வைத்த பெருமை இந்த காட்சிப்பிழை தொடருக்கு கிடைத்த வெற்றியென கூறுவேன். சமூகச் சிந்தனையில் கவிகள் பல எழுதிய தோழர் பழனிகுமார் அவர்கள் காதலை பாடியது அவரின் ரசிகர்களை பரவசத்திற்கு உள்ளாக்கியது மட்டுமல்ல . இன்னும் பல ரசிகர்களையும் பெற்றுக்கொடுத்தது. நிபுணத்துவம் பெற்ற ஒரு கவிஞர் எப் பாடுப்பொருளிலும் மிளிரமுடியும் தானே..? மிளிர்கிறார் பாருங்கள்.. இப்படி..

வெளிச்சம் மின்னிய என் கடலில்
நிலாவென நீ மிதந்திருந்தாய்
கரை ஒதுங்கிய அலையாவும்
காதல் நுரைத்திருந்தது . // காதல் நுரைக்கவில்லை, பொங்கியிருக்கிறது கவிஞரே உங்கள் கவிதையில்..!

என் மதியங்கள்கூட உன்
மதிமுகம் காண ஏங்குகிறது !
இந்தச்
சூரியனை என்ன செய்வது ? // எங்கெங்கும் அவள் நினைவுகள்... அடடா சூரியனே கொஞ்சம் இரவாகி இரக்கத்தோடு இந்த மதியத்தில் கடந்துப்போக கூடாதா நீ ?. ஏக்கம் தீராதா கவிஞரின் ஏக்கம் தீராதா ?
--

யாப்பு விதிகளில் கைதேர்ந்தவர் வெண்பா அரசி அம்மா சியாமளா ராஜசேகர் அவர்கள். கஜல் சூத்திரமும் அறிந்திருப்பார் எனும் நம்பிக்கையோடு வாசித்தேன்.கற்றுக்கொள்ளும் நோக்கத்தோடும் தான். துளியும் ஏமாற்றமில்லை. அம்மாவின் வரிகள் சந்த லயதோடு ஒசைகள் ரிங்காரமிடுகின்றன.

நிகழும் கொடுமைகளை தன் பா அணிவகுப்பில் அரசியலை.. சமூகத்தை சாடுகிறார்..

”என்னகத்தில் ஏற்றிவைத்தாய் காதலெனும் ஜோதி
நமைப் பிரிக்க கொலைவெறியாய் வந்ததிந்த ஜாதி ! "

”எல்லைகளைத் தாண்டியதாய் பொய்க்குற்றம் சுமத்திவிட்டு
துப்பாக்கி யால்சுட்ட அவலம்நான் சொல்லவோ ?”

இதுபோல வரிக்கு வரி சாட்டையடி . சபாஷ் அம்மா..!

மரபுக்கவிதை அறிந்தவர்கள், கஜலுக்குள் புதுக்கவிதை வடிவம் ஆளுமை செலுத்துவதை விரும்பமாட்டார்களென நினைத்தால்.. இல்லை, அதிலும் தன் முத்திரை பதித்திருக்கிறார் கவியரசி திருமதி.சியாமளா.

உன் காதல் சின்னத்தில்
வாக்களித்துவிட்டேன்
நீ தந்தது தேர்தல் கால
வாக்குறுதி
என்பதை அறியாமல் ....!// நெத்தியடி என சொல்லவைத்த வரி. ஜனநாயகத்திலும்.. காதலெனும் தளத்திலும் ஏமாற்றுபவர்கள் இருக்குவரை எல்லா வாக்குறுதியும் நயவஞ்சக குள்ளநரித்தனமே.!”இலைகளால் அசையும் இயற்கை
அலைகளால் பிரபஞ்ச கீதம்
வாய்மையால் சுழலும் வையம்- - உன்
தாய்மையே எனது சொர்க்கம்

நட்சத்திரங்களின் வழியாக
இறங்கி வருகிறது இரவு
இரவின்மீது ஏறி நட்சத்திரங்கள் பறிக்கிறது
நம் உறவு “ // ஆஹா.. அழகான சொல்லாடல். எழுதியது யாரெனக் கேட்டால். தோழர் கவித்தா சபாதியாரென கண்மூடிச் சொல்லும் என் ஆழ்ந்த ரசனை. ஆம் இயற்கை. இயற்கைக் காட்சிகள் மீது அதீத காதல் கொண்டவர் கவிஞர். பெரும்பான்மையான இவரின் கவிதைகள் இயற்கையினூடே கவிதையின் பாதையை அமைத்திருப்பார். அல்லது கவிதையின் பாதையில் இயற்கையை கொணர்ந்திருப்பார்.உன்னை எவ்வளவுதான்
ஊற்றி ஊற்றி நிறைத்தாலும்
காலியாகவே கிடக்கிறது கிண்ணம் ;
உன்னை எவ்வளவுதான்
வாரி வாரி இறைத்தாலும்
தீராமல் ததும்புகிறது எண்ணம் ! // ததும்பும் இந்த எண்ணம் போலத்தான் உங்கள் கவிதையின் மீதான என் ரசனையையும் தீராது கவிஞரே..!
தோழர்களே..

கஜல் திருவிழாவில்..இன்னும் சுற்றித்திரிந்து ரசிப்போம்.

மீண்டும் சந்திப்போம்.
- இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (2-Feb-16, 2:11 am)
பார்வை : 540

மேலே