இதயம் திருந்த மருந்து சொல்லடா

எம்.ஜி.ஆர் – சாவித்திரி நடித்து 1957 ல் வெளிவந்த ’மகாதேவி’ என்ற படத்திற்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில், எம்.ஜி.ஆருக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ஒரு அருமையான பாடல்.

இந்தப்பாடல் எழுதப்பட்டு 55 வருடங்கள் கடந்தாலும், இன்றைக்கு உள்ள மக்களின் மனநிலையும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் மனநிலையும் மாறாமல் இருப்பதைக் காட்டுகிறது. யு ட்யூபில் பாடலைக் கேட்கவும், பார்க்கவும் செய்யலாம்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு வழியில்)

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு வழியில்)

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்...ஓ...
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும் – மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் - பல
வரட்டுக் கீதமும் பாடும் - விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இதுபோல் குறுகிப் போகும்
கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு வழியில்)

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை எழுதும் முறையையும், உத்தியையும் பாருங்கள். ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் தவறு செய்யும் மக்களுக்கு,

‘தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா’

என்று எச்சரிக்கையாய் திரும்பத் திரும்பச் சொல்லி, திருந்தவும் செய்தி விடுக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Feb-16, 12:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 184

சிறந்த கட்டுரைகள்

மேலே