கைக்குச் சிக்காத கவிதை
தினம் பூக்கும்
கவிப்பூக்களுக்கிடையில்
என் பூக்களும் மலரும்
சிலநேரம்...
என்பூக்களின் சுகந்தங்கள்
யாரை மயக்கியதோ
நினைவில்லையெனக்கு...
என்னை ...
எனக்கு உணர்த்தியதால்
எனக்கது தவமே...
என் தவிப்புகள்
என் தேடல்கள்
என்வழி உயிர்த்தெழ...
என்வானில்
எல்லைகள் கடந்துபறக்கும்
சிறு பறவையானேன்
நான்...
மெளனத்தின் ஜனனங்கள்
நடுநிசியில் உலவி
நட்சத்திரங்கள் கொய்து
என்மனத்தோட்டத்தை
அலங்கரிக்கும் சிலபொழுது...
எனைவிட்டு நழுவிய
எனக்கான வானம்
இருளுக்குள் புதைந்து கொள்ள
மின்மினிகளின்
மீட்டெடுப்பில் உயிர்ப்பேன்
புது ஒளியோடு பலபொழுது...
நான் கவிஞனென்ற இறுமாப்பு
எனைச்சூழ்ந்த நொடியில்
மழை பொய்த்த பாலைபோல்
வெறுமை சூழும் மனம்
வெளிச்சம் மறந்த விழியாய் பதற...
யாரோ எழுதிய
சில கவிகளின் மீட்டலில்
வீணை தேடும் விரலாய்
என் உயிர் சுரங்கள்
தறிக்கெட்டு கதற...
நானின்னும் கவிஞனில்லையென்ற
நாணம் என்னைக் கவ்வி கொள்ள
என் கைக்குச் சிக்காத அக்கவியில்
எனக்கான வானம்
மறுபடியும் உயிர்க்கும்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்