காதல் கனவாகி - கற்குவேல் பா
உன் கணவருக்கு பிடிக்குமென்று
அயிரைமீன் வாங்குவதற்கு - நீ
உன் மாமியாருடன் ,
சந்தைக்கு வருகிறாய் !
என் குழந்தைகளுக்கு பிடிக்குமென்று
விரால்மீன் வாங்குவதற்கு - நானும்
என் மனைவியுடன் - அதே
சந்தைக்கு வருகிறேன் !
நம் இருவரின் தேவைகளும் ,
ஒரே இடத்தில நம்மை இணைத்து விட ;
என் கண்களிலிருந்து நீயும் - உன்
கண்களிலிருந்து நானும் விலக எண்ணலாம் ..
உன் மாமியாரும் , என் மனைவியும் ;
உயிரோடு ஊறிக் கொண்டிருந்த ,
அயிரை மற்றும் விரால் மீன்களை
பொறுக்கிக் கொண்டிருக்க ;
நம் இருவரின் கண்களும் - அவற்றிற்கு
நடுவே , இறந்த நிலையில் கிடந்த ,
வஞ்சிர மீன்களின் மேல்
விழுந்த வண்ணம் இருக்கிறது ..
காரணம் , அவை ;
மெரினா கடற்கரையின் ஓரங்களிலோ ,
சந்தோமே தேவாலயத்திற்கு பின்புறத்திலோ
நாம் இருவரும் ஒன்றாய் பகிர்ந்துண்ட ,
அதே வகை மீன்களாக இருக்கலாம் ..
இல்லையேல் ,
சாதியப் பெருச்சாளிகளின் பிடியில்
சவப்பெட்டியினுள் தள்ளப்பட்ட - நம்
காதல் நினைவலைகளின் ,
பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் !
~ பா கற்குவேல்