திருமணப் பொருத்தம் -- 1

மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் ஒரு பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் தலைமை குருக்கள் சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள். வேத பராயனங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் அவருக்கு அத்துப்படி. ஜாதகம் பார்க்கும் கலையை அவர் தந்தையிடமிருந்து நேர்த்தியாக கற்றிருந்தார். கை ராசியான சாஸ்த்ரிகள் என்று தினமும் இருபது பேராவது அவரிடம் தங்கள் மகள், மகன் களின் ஜாதகங்களை திருமணப் பொருத்தம் பார்க்க கொண்டு வருவர்.சாஸ்த்ரிகள் தட்சணை எதுவும் வசூலிக்காத போதும், மக்கள் தாராளமாய் அவருக்கு காணிக்கை கொடுத்தனர்.அன்று, "நீங்க பொருத்தம் பாத்து சரி ன்னு சொன்னா, அது அந்த ஆண்டவனே பச்சை கொடி காட்டின மாறி. ரொம்ப சந்தோஷம். நான் பையன் வீட்டுக்காரர்களை உடனே வீட்டுக்கு வரச் சொல்றேன்", என்று மகளுக்கு ஜாதகம் பொருந்திய திளைப்பில் சென்றார் ஒரு தந்தை.

சாஸ்த்ரிகள் தன் அக்ரகார வீட்டிற்கு வந்தவுடன், அவர் மனைவி விசாலம் மலர்ந்த முகத்துடன்,பில்ட்டர் காபியை கொடுத்தாள். விசாலத்தின் பில்ட்டர் காபியின் மனம், தெருக் கோடியில் நடப்பவரை சுண்டி இழுக்கும் என்றால் அது மிகை ஆகாது. சாத்வீக சமையல், ஆன்மீக குணம் பொருந்திய அக்மார்க் மடிசார் மாமி விசாலம். அமைதியான மாலையில், ஒரு சூறாவளியை கொண்டுவந்திருந்தான் அவர்களின் ஒரே வாரிசு ராம்.
திருச்சியின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ படித்து முடித்து சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருந்தான் ராம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தன் பெற்றோரை பார்க்க திருச்சி வருவான். "அப்பா, அம்மா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" பீடிகையுடன் தொடங்கினான் ராம். "நான் ப்ரீத்தி ங்கற பொண்ண காலேஜ் ல இருந்து லவ் பண்றேன்.ஆறு வருஷமா உயிருக்கு உயிரா காதலிக்கறோம்.அவங்க வீட்ல இப்போ அவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்க ஆரமிச்சுட்டாங்க. எங்க லவ் பத்தி அவங்க வீட்ல சொன்னதுக்கு, ஜாதகம் பொருந்தினா தான் மேற்கொண்டு பேச முடியும் ன்னு சொல்லிட்டாங்க. அவங்களும் நம்மள மாதிரி அய்யர் தான்" என்று தேங்காய் உடைத்தார் போல் பட்டென்று உடைத்தான்.

"என்னடா இது காதல் கத்திரிக்காய்ன்னு பேசிண்டு. உன்ன அப்படியாடா நான் வளத்தேன்?" பொரிய ஆரமித்தாள் விசாலம். "கொஞ்சமாவது நம்ப ஆத்த பத்தி நெனச்சு பாத்தியா? நம்ப அப்பா கிட்ட ஜாதகம் பாத்து தான் ஊர்ல எல்லாரும் கல்யாணம் பண்றா.அவர் பையனே காதல் கல்யாணம் பண்ணிண்டா, அதுக்கப்பறம் யாரும் அவர மதிச்சு ஜாதகம் பாக்க வர மாட்டா. ஜாதகம் பார்த்து வர காசுலதான் நாங்க உன்ன படிக்க வெச்சோம்.அது தான் எங்களுக்கு சாதம் போடறது. இப்படி அதுல மண்ணை அள்ளி போட பாக்கறியே?" மூச்சு விடாமல் தொடர்ந்தாள் விசாலம்.

"என்னம்மா நீ, சம்மந்தமே இல்லாம பேசற. அவாளும் அய்யர் தான்னு சொல்றேன். சந்தோஷமா ரெண்டு ஆத்துலயும் சேர்ந்து எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெய்யுங்க. ஊர்ல யாரு என்ன சொல்ல போறா?"வாதாடினான் ராம். "நன்னா பேச கத்துன்றுக்கேடா நீ. பாரு உங்க அப்பாவ வாயடைச்சு போய் நிக்கறார். இன்னும் ஒரு வார்த்தை பேசல அவர். உன் மேல அவ்ளோ கோவம். ஆனா நீ மேல மேல பேசிண்டே போற" வெடித்தாள் விசாலம்.

"அம்மா, உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல, நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்ப ஆத்துல கொலு பாக்க ப்ரீத்திய கூட்டிண்டு வந்தேன்.அன்னிக்கு அவ பிறந்த நாள் வேற.அவ பிறந்தது சரஸ்வதி பூஜ அன்னிக்கு தான் ன்னு சொன்னதும்,"நீ சாட்ஷாத் அந்த மஹா லக்ஷ்மி ம்மா. எங்க ஆத்துக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம். நன்னா இரு." ன்னு சொன்னியே அதே ப்ரீத்தி ம்மா. அவ கூட ஒரு நாள் பேசாம கூட என்னால இருக்க முடியாதும்மா. ரொம்ப நல்ல பொண்ணு. உன்னையும் அப்பாவையும் அனுசரிச்சு நடந்துப்பா. உங்களுக்கு ஒரு பொண்ணா இருப்பா. இன்னும் என்ன தான் வேணும்மா உனக்கு? என்னால வேற ஒரு பொண்ண கனவுலயும் நினைக்க முடியாதும்மா." விரக்தியாய் பேசினான் ராம்.

"மஹா லக்ஷ்மியோ மண்ணாங்கட்டியோ, இப்போ என்ன பண்ணனுங்கற எங்கள?" விசாலம் கேட்டு முடிப்பதற்குள், "என் ஜாதகத்த கொடுங்க. அவங்க வீட்ல கொடுப்போம். அவங்க அப்பா குடும்ப ஜோசியர்ட கொடுக்கணுமாம்" முந்திரி கொட்டையாய் பதில் சொன்னான் ராம். "விசாலம், நாளைக்கு காலைல அந்த மேஜை மேல வெக்கறேன் அவன் ஜாதகத்த" என்று சொல்லி தன் மௌனத்தை உடைத்து, பதிலை எதிர்பார்க்காமல் விருட்டென்று சென்றார் சாஸ்த்ரிகள்.

மறுநாள் காலை மேஜை மேல் இருந்த ஜாதகத்தை எடுத்துகொண்டு ப்ரீத்தியின் வீட்டிற்கு புறப்பட்டான் ராம். "டேய், ஏன்டா இப்படி இருக்கே. நேத்தி ராத்திரி ஒரு நிமிஷம் கூட உங்க அப்பா தூங்கல தெரியுமா? இப்படி எத பத்தியும் கவலை படாம நீ இருக்கியேடா "அலுத்துக்கொண்டாள் விசாலம். காதில் எதையும் போட்டுக்கொள்ளாமல், கையில் தன் ஜாதகத்துடன் ப்ரீத்தியின் வீட்டை நோக்கி தன் பைக்கில் பறந்தான் ராம். (தொடரும்)

எழுதியவர் : ரம்யா ரெங்கராஜன் (6-Feb-16, 12:22 am)
சேர்த்தது : ரம்யா ரெங்கராஜன்
பார்வை : 481

மேலே