ஊரைச்சுடுமோ

சந்திரசேகர கவிராஜ பண்டிதர் சென்னையில் இருந்தபோது வண்ணார்பேட்டையிலுள்ள சஞ்சீவி ராயன் தெருவிற் சில வருஷங்கள் வசித்து வந்தார். ஒருநாள் இரவு நிலா நன்றாக எறித்தது. இராப் பிச்சைக்காரன் ஒருவன் வீடுதோறும் சென்று அன்னப்பிச்சை வாங்கிக்கொண்டே வந்தான். அவன் பல ஊர்களைச் சுற்றினவன். பல பாட்டுக்களை அவன் அறிந்திருந்தான். ‘அம்மா, பிச்சை‘ என்று மட்டும் சொல்லிப் பிச்சை வாங்காமல், இனிய சாரீரத்தோடு தமிழ்ப்பாடல்களைப் பாடி அன்னங்கேட்பது அவன் வழக்கம்.

பிச்சைக்காரன் பாடிக்கொண்டே சந்திரசேகர கவிராஜ பண்டிதர் இருந்த தெருவழியே வந்தான். அவனுடைய இனிய குரல் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரச்செய்தது; பெண்டிர் அவன் பாட்டில் மயங்கி அவனுக்கு மனமுவந்து அன்னமளித்தனர்.

அவன் தெம்மாங்கு, வெண்ணிலாப்பாட்டு, பராபரக் கண்ணி முதலியவற்றைப் பாடுவான். ஒரு கண்ணியில் ஓரடியையே திருப்பித் திருப்பிப் பாடுவான். ஒரு தெரு முழுவதற்கும் அந்த ஒரு கண்ணியே அவனுக்குப் போதியதாக இருக்கும். அன்று வீசிய நிலாவொளியில் அவனுடைய ஞாபகம் நிலாவைப் பற்றிய பாட்டொன்றிற் சென்றது.

‘ஊரைச் சுடுமோ‘ என்று அவன் ஆரம்பித்தான். தமிழ்ப்பாட்டாக யார் எதைச் சொன்னாலும் கேட்பதில் ஆவல்கொண்ட கவிராஜபண்டிதரை அந்த ஒலி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவித்தது. பண்டிதர் பிச்சைக்காரனருகிலே சென்று நின்றார். அவன், ‘ஊரைச் சுடுமோ‘ என்னும் தொடரையே பலமுறை நீட்டியும், குறுக்கியும் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றான். பண்டிதருக்கோ அந்த நிமிஷத்தி லேயே பாட்டு முழுவதையும் அவன் சொல்லக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அவனாகச் சொல்லட்டுமென்று காத்திருந்தார். ‘ஊரைச் சுடுமோ‘ என்பதற்குமேல் ஓரெழுத்துக்கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.

இவர் பொறுமையை இழந்தார்; ‘அந்தப் பாட்டை முழுவதும் சொல்லிவிடப்பா‘ என்று கேட்டார். பிச்சைக்காரன் தலையெடுத்துப் பார்த்தான். ஒன்றுமில் லாமற் பிச்சைவாங்குவதை விடச் சில பாட்டுக்களைப் பாடிப்பிச்சை வாங்க வெண்ணித் தான் பாடிவரும் பாட்டை ஒரு பெரியவர் கவனத்தோடு கேட்டு வருகிறா ரென்பதை அவன் உணர்ந்தபோது அவனுக்குச் சிறிது கர்வமும் உண்டாயிற்று.

‘இதோ சொல்கிறேன்‘ என்று கூறி மறுபடியும், ‘ஊரைச் சுடுமோ‘ என்றே தொடங்கினான். ‘இவனுக்கு இதற்கு மேல் தெரியாதோ?‘ என்ற சந்தேகம் பண்டிதருக்கு உண்டாயிற்று. பலமுறை ‘ஊரைச் சுடுமோ‘ என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு அப்பால் பெரிய புதையலை வெளியிற்கொண்டுவந்தவன் போல அவன்,‘உலகந்தனைச் சுடுமோ‘ என்றான்.

அதைக் கேட்ட பண்டிதர் அந்தப் பாட்டு ஒரு வெண்பாவாக இருக்கவேண்டுமென்று ஊகித்தறிந்தார். ‘பாட்டின் இனிமை முதலடியிலேயே ததும்பி நிற்கிறது! பின் அடிகள் எவ்வளவு இனிமையாக இருக்குமோ!‘ என்று ஏங்கினார்.

‘ஐயா, நான் மறந்துவிட்டேன். தானாக வந்தால் வரும்; நானாக நினைத்தால் வருவதில்லை‘ என்றான் பிச்சைக் காரன்.

‘யோசித்துப்பாரப்பா‘ என்று சொல்லிப் பண்டிதர் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்ன மிடச் செய்தார். அவன் தன்னால் ஆனவரைக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தும் வரவில்லை. முதலடிக்கு மேலே பாடும் வழக்கம் அவனுக்கு இல்லை.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (6-Feb-16, 1:02 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே