வேறு நிலாக்கள் -17 சுசீந்திரன்

மழைக்காலம்

அழுத சூரியன்
தாமதமாக எழுந்து
இந்த வாரம் மழைக்காலம்
என்று முணுமுணுத்தபடியே
மங்கலாகி மறைந்து போனான்

தாவர வீட்டில்
இலைப் பெண்கள்
பச்சையம் தயாரிக்க
வெளிச்ச அடுப்பு இல்லாம ல்
வெட்டிக் கதைகள் பேசி
தொங்கிப் போனார்கள்

அன்றே பிறந்து
அன்றே இறக்கும்
ஈசல்கள்
அவசரம் அவசரமாக
கலவி செய்தன
அநேக சத்தத்துடன்.

மழை நல்லது-
பண்ணையாருக்கும்
பகட்டுக் கார்-காரர்களுக்கும் .
மழை பொல்லாதது -
தினசரி கூலியாளுக்கும்
திரை கடலோடும் மீனவனுக்கும்

இன்னொரு பக்கம்
வயலின் வரப்பு மறைந்து
வெள்ளம் வழிந்தோடும்
விதைத்தவன் வயிற்றில்
அடுப்பும் புகையும் இல்லாமல் எரியும்.

தேநீர் விடுதியிலும்
டாஸ்மாக் தெருவிலும்
திருவிழாக் கோலம்.
பக்கத்து பெட்டிக் கடையில்
புகை பிடிப்போர் கட்சிக்கு
புதிதாய் உறுப்பினர்கள்
வந்து வந்து சேர்வார்கள்

வருமானம் போச்சே என்று
வீட்டுத் தலைவன்
விசனத்தில் அமர்ந்திருக்க
வாசலில் தேங்கிய நீரில்
காகிதக் கப்பல் விட்டு
பிரயாணம் செய்யும்
கள்ளமில்லாத அவன் குழந்தை.

ஆர்ட்டீசியன் ஊற்றுகளாய்
சாலையில்
ஆங்காங்கே தெப்பங்கள்
அந்தபக்கம் நடந்து போகும்
ஆண்பாலுக்கு எதிர்பால்கள்
அடிசேலை நனையாதிருக்க
அரையடி தூக்கும்போது
மேயும் ஆந்தைக் கண்களின் சபலங்கள் .

அமாவாசைக்கு அப்புறம் வரும்
பௌர்ணமிக்கு
ஆண்டு விடுமுறை..
பாதையோர பாதரச விளக்குகள்
சிரித்தும் சிணுங்கியும் கண்சிமிட்டும்
என்ன கண்டதோ
இந்த நாய்கள் மட்டும்
இடைவிடாது குரைக்கும்..

இவைகளுக்கு இடையில்
வீட்டுக்குள் ஒழுகும்
வெள்ளிமழைக் கம்பிகளை
எப்படி கட்டுவதென்று
கன்னத்தில் கைவைத்து
யோசித்துக் கொண்டிருந்தாள் என்மகள் .

எழுதியவர் : சுசீந்திரன். (10-Feb-16, 12:38 am)
பார்வை : 150

மேலே