எண்ணத்தில் துளிர்த்தவை 8

மரம் வெட்டுவதின் தீமைகள்
***************************************

​--வெட்டுண்ட மரமொன்று பேசியது
வெட்டவெளியில் என்னை கண்டதும் !
--மதியுள்ள ​​​மாந்தரில் ஒருவனே
மனமுடைந்து சொல்கிறேன் கேளாய் !
​--அதிர்ந்தேன் நானும் அரவம்கேட்டு
​அந்திநேரம் நடைபயின்ற நானும் !
​--இசைவிலா இதயமுடன் நின்றேன்
இரக்கத்தால் கூறிடுவாய் என்றேன் !

--எந்நிலையை நோக்கிடுக நீயும்
எதிரியாய் கொன்றனர் என்னை !
--உதவுகிறேன் உனக்கும் உலகிற்கும்
உயிர்வாழ நானும் பலவழியில் !
--அடுப்பெரிக்க முதல் உடலெரிக்கும்
அந்தநேரம் வரை தேவையுனக்கு !
--சுவாசிக்க ஆக்சிஜன் இலவசமாய்
சுகமுடன் ஓய்வெடுக்க நிழலாய் !

--வான்மழை பொழிய உதவுகிறேன்
வீடுகட்டத் துணையாய் நிற்கிறேன் !
--சிலதைக் கூறினேன் நினைவுக்கு
சிந்தித்து செயல்படு மானிடனே !
--அழிக்கிறாய் என்னை மண்ணில்
அடிப்படை தேவைநான் உனக்கு !
--அடிமனதில் நீயும் கொள்வாய்
அகிலமும் உணர்ந்திட செய்வாய் !

--தீமைகளைக் கூறிட நினைத்தேன்
தீட்டிய கவிதையும் உருமாறியது !
--எதிர்மறை என்றாலே எடுபடும்
என்றெண்ணி வடித்தேன் வரிகளை !
--வெட்டுவதை கைவிடுவீர் இனியேனும்
வளர்த்திடுவோம் மரங்களை நாமும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Feb-16, 3:26 pm)
பார்வை : 564

மேலே