அலெக்சாண்டரை எதிர்த்துப் புறக்கணித்தவர்

லௌகீகப் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்; வயதில் மட்டுமல்ல, ஞானத்திலும் மிகவும் முதிர்ந்தவர், உடல் வளைந்து கூனிக் குறுகி, பிறந்த மேனியராய் ஊரெங்கும்சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த ஞானியின் பெயர் டண்டமிஸ். கிரேக்கர் அப்படி அழைத்தனர், தட்சசீலத்தில் உச்சிக்கு வந்த உக்கிர பாஸ்கரனின் கொளுத்தும் வெயிலில், பாதத்தைப் பொசுக்கும் உஷ்ணத்தையும் உதாசீனப்படுத்தியவாறு நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த ஞானி.

ஓடிவந்த குதிரையொன்று அவரெதிரே ஒட்டி நின்றது. கூனிக் குனிந்திருந்த ஞானி தலையைத் தூக்கிப் பார்க்கவும், குதிரையிலிருந்து இறங்கிய – மாசிடோனிய மன்னன் அலெக்சாண்டரின் சொந்த அலுவலர் – ஒனெசிக்ரெடோஸ் அவரைப் பணிந்து வினவினான்.
“தாங்கள் தானே ஜிம்னோசோஃபிஸ்ட் டண்டமிஸ்?”

முற்றும் துறந்த துறவியர், முனிவர் போன்றோரை ஜிம்னோசோபிஸ்ட் என்று அழைப்பது கிரேக்கர் வழக்கம்.
“ஆமா, அதற்கென்ன?”
“எங்கள் மாமன்னர் மகா அலெக்சாண்டர் கூறியனுப்பிய செய்திகளைத் தாங்கள் பொருட்படுத்தவில்லையாமே?”
“நான் செவி சாய்ப்பதற்கு உன் மன்னனின் செய்தி என்ன அசரீரியா? அல்லது, அருள்வாக்கா? அதில் பொருள் இல்லை. ஆதலால் நான் பொருட்படுத்தவில்லை.”
வந்த எரிச்சலை அழுத்திக் கொண்டான் அவன். இந்த ஞானியை எப்படியாகிலும் தன்னிடம் அழைத்து வருமாறு அலெக்சாண்டர் அலுவலருக்கு ஆணையிட்டிருந்தான். ஆகவே அவனுக்கு நிதானத்தை உதாசீனப்படுத்த முடியாத சூழ்நிலையாக இருந்தது. மேலும் பணிந்தே சொன்னான்.
“எங்கள் பேரரசர் தங்களைத் தம் அரண்மனைக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கோரியிருக்கிறார்.”
“எதற்காக?”
“தங்களோடு நேருக்கு நேர் சம்பாஷிக்க அவர் ரொம்பவும் விரும்புகிறார்.”
“யோகி ஒரு போகியோடு கைகோர்க்க மாட்டான். கிழக்கும் மேற்கும் சந்திக்காது. நான் உன் மன்னனைப் பார்க்க முடியாது.”
வெண்கல மணியின் ஓசையன்ன குரலில் கணீரெனச் சொன்னார் ஞானி. எனவே ஒனெசிக்ரெடோஸ் தன் குரலைச் சற்று உயர்த்த ஆரம்பித்தான்.
“அவர் ஜீயஸ் தேவதையின் புதல்வர்.”
“இப்பூவுலகில் உள்ள எல்லோரும் கடவுளின் பிள்ளைகளே. நானும்தான்.”
“உலகத்தையே வென்றவர் உங்களை ஆவலோடு அழைக்கிறார்.
“அப்படி ஏன் அவன் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறான்? அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தப் பாரதத்தில் உள்ள அக்ர சிரேணியர், கதா, சகர், ஜனபதர், சிவி, சூத்ரகர், செüபூதி, பட்டனப் பிரஸ்தியர், மசாகார், மாளவர், பூச்சிகர், யெüதேயர் ஆகிய குடியரசுக்களோடு அவன் மோதிப் பார்த்தான் இல்லை. இதுநாள் வரை வியாச நதியின் அக்கரையைக் கூட அவன் கண்டான் இல்லை. இந்தத் தட்சசீலத்தின் அரசர் அம்பி விட்ட அழைப்பின் பேரில் படையெடுத்து வந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியின் ஒரேயொரு பெüரவ அரசன் புருஷோத்தமனை மட்டுமே அவன் வென்றிருக்கிறான். வலிமை வாய்ந்த ஜீவசக்தி மகதப் பேரரசை அவன் வெற்றி காணட்டும். அப்புறம் தான் அவன் உலகத்தை வென்றானா, இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்.”
“பொன்னும் பொருளும் அளித்துத் தங்களைச் சிறப்பிக்கத் தானே எங்கள் பேரரசர் தங்களை அழைக்கிறார்!”
“துறவிக்கு அவை தூசு. எனக்குத் தேவையானவற்றை என் தாய்த்திருநாடு ஏராளமாக வழங்கியிருக்கிறது. உன் மன்னனின் சன்மானத்தைத் தன்மானம் இல்லாத யாருக்காவது தரச் சொல்!”
சினத்தால் ஒனெசிக்ரெடோஸ் சிவந்தான். தன் மன்னனை ஞானி மதிக்காததற்காகப் பொருமினான்.
“ஒன்றுமே இல்லாத பரதேசி உமக்கு இவ்வளவு வீறாப்பா!”
“ஒன்றுமே உடைமை வேண்டாதவன் தான் முனிவன். ஆனால் அவனியில் உள்ள எல்லாமும் அவனிடம் உள்ளதே! என்னைப் போன்ற ஒரு பரதேசி தானே உன் அரசனுக்குப் பேரரசு எவ்வாறு அமைய வேண்டும் என்று விளக்கிக் காட்டினான். அது உனக்கும் கூடத் தெரிந்திருக்குமே?”
ஞானியின் இந்தப் பேச்சு ஒனெசிக்ரெடோஸின் மூளையில் குத்தியது, முன்னொரு நாளில் நடந்த நிகழ்ச்சியொன்றை அவனுக்கு நினைவு கூர்ந்தது.
கலநோஸ் என்ற தத்துவ ஞானியை அலெக்சாண்டர் சந்தித்துத்தன் பேரரசு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கும்படி கேட்டுக் கொண்டான்.
உலர்ந்து காய்ந்து சுருங்கிய விலங்கின் தோலொன்றைத் தரையில் வீசி அதன் ஓர் ஓரத்தில் மிதித்தார் கலகோஸ். தோலின் எதிர் ஓரம் தலைதூக்கி எழும்பியது. அம்முனையில் மிதித்தார், இம்முனை தலைதூக்கியது. சற்றுப் பகுதிகளின் விளிம்பில் நடந்து காட்டினார். எந்த ஓரத்தில் நடந்தாலும் அவ்வோரத்தின் எதிர்முனை தலைதூக்கியது. தோலின் நடுப்பகுதியில் நின்றார் ஞானி. எம்முனையும் எழும்பாமல் தரையில் தட்டையாகக் கிடந்தது தோல்.
ஒரு நாட்டின் இதயமான நடுப்பகுதியை (தலைநகர்) அடக்கிக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் எல்லைப் பகுதிகள் தாமாகவே வசமாகும் என்பதை ஞானியின் இச்செயல் விளக்கத்தின் வாயிலாக தெளிவாகப் புரிந்து கொண்டான் அலெக்சாண்டர்.
எங்கோ நடந்த இந்நிகழ்ச்சி இங்குள்ள இந்த ஞானிக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில் யோசிக்கலானான் ஒனெசிக்ரெடோஸ். தொற்றிக் கொண்ட அச்சத்தை வெட்கத்தால் வெளிக்காட்டாது ஞானியை லேசாக அதட்டிப் பார்த்தான்.
“நீர் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் எம் பேரரசரைப் பற்றி உமக்குத் தெரியாது.”
“தெரிய வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. துறவிக்கு அரசன் துரும்பு. உன் மன்னன் என்னை என்ன பண்ண முடியும்?”
“எச்சரிக்கிறேன். நீர் வராவிட்டால் உம்மை அவர் சிரச்சேதம் செய்வார்.”
தாம்பாளத் தட்டில் கொட்டும் தங்க நாணயங்கள் போல் கலகலவெனச் சிரித்தார் ஞானி. திருடன் போல் திருதிருவென விழித்தான் ஒனெசிக்ரெடோஸ். திராணியோடு உரைத்தார் ஞானி…
“என் மேனி என் தாய்த்திரு மண்ணில் விழத்தான் நான் விரும்புகிறேன். ஒருவருடைய ஆத்மாவை அழிக்க யாராலும் முடியாது. அது அழிவில்லாதது, நிலையானது. எனவே என்னைக் கொல்ல உன் மன்னனால் முடியாது. ஆசைக்கும் அதிகாரத்திற்கும் அடிமையானவர்க்கே உன் அரசனின் ஆணை செல்லுபடியாகும், எனக்கல்ல. திரவியத்திற்கும் மரணத்திற்கும் ஆட்படுபவன் உண்மையான பிராமணன் ஆக மாட்டான். நான் ஓர் உண்மைப் பிராமணன். உலகையே வென்றதாக சொல்லிக் கொண்டிருக்கும் உன் மன்னன் முதலில் தன்னை வெல்லட்டும். பின்னர் என்னைக் கொல்லலாம்…”
“இறுதியாக என்னதான் கூறுகிறீர்?”
“இனி உன்னோடு பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. ஆண்டவனின் ஆணைக்கே அடிபணியும் அடியவனாகிய யான் உன் கொற்றவனின் கட்டளைக்குக் கட்டுப்பட முடியாது என்று கூறுகிறேன். போ, போ! உன்னோடு வர முடியாது. போய்விடு!”
செய்வதறியாது சிலை போல் அசைவற்று நின்று விட்டான் ஒனெசிக்ரெடோஸ். தன் போக்கில் சென்று கொண்டிருந்தார் மாமன்னன் அலெக்சாண்டரை முதல் முதலாக எதிர்த்துப் புறக்கணித்தவர் என்று பெயர் பெற்ற ஞானி டண்டமிஸ்.

எழுதியவர் : செங்கோட்டை ஸ்ரீராம் (21-Feb-16, 10:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 142

மேலே