சாமியே சைக்கிள்ள போக , பூசாரி புல்லட் கேட்டானாம்

வெகு நாளாய் இந்தப் பழகிய மொழிக்கு அர்த்தமாய்ச் சில கற்பனைகள் எனக்குள் இருந்தது.ஆனால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது இன்றுதான் .அலுவலக ஓய்வு அறை ஒன்று புதியதாய்க் கட்டப்பட்டு அதற்குக் கணபதி ஹோமம் நடத்த வழக்கமான ஆஸ்தானக் கோவில் அர்சகரைத் தொடர்புகொண்டல் அவரின் இரண்டு அலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டதாகத் தானியங்கிக்குரல் செப்பியது .அவர் மிகவும் பிரபலமானவர் அப்படி அனைத்து வைக்க வாய்ப்பில்லை.இரண்டு நாளாய் நேரில் வருவதாகச் சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தார் மனுசன் .ஆனால் இன்னும் ஒரு நாள் இருக்கும்போது தாமதித்தால் நிர்வாகத்தின் கத்தி நடுமண்டையை பதம் பார்த்து விடும் என்று அவரை எப்படியாவது பார்த்து விட அவர் பணிபுரியும் கோவிலுக்குத் தேடிக் கண்டுபிடித்துப் போனேன் .

அங்கு மனிதர் மிகச் சாவகாசமாக ஒரு குடும்பத்தை உட்காரவைத்து ஜாதகம் பார்த்துக் கொண்டு இருந்தார் . அவருக்கு எதிர் புறத்தில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்கார்ந்து இருக்க அவர்களிடம் அவர் ராவணன் நவக்கிரகங்களைஅடக்கித் தன் வீட்டில் படிக்கட்டுகளாகக் குப்புறப் போட்டு வைத்திருந்தது போலக் கிரகங்களை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார் .கேது புத்தி உனக்கு விரயச்செலவு அதிகமிருக்கும் .சனிப் பார்வை இருப்பதால் சில உடல் உபாதைத் தோன்றி நீங்கும்.ஆயிரம் ரூபாச் சம்பாதிச்சா ஆயிரோத்தோரு ரூபாச் செலவு வரும் .சொந்தமா வரத்தகம் வேண்டாம் அடிமைத்தொழில்தான் சிறப்பு .யாரையும் நம்பி வாக்குக் கொடுக்கவேண்டாம் .... அவர் சொல்லும் பலனெல்லாம் ஏறக்குறைய அந்த ஜாதருக்குப் பொருந்துச்சோ இல்லையோ ஒரு தமிழ் நாட்டு பிரபலக்கட்சிக்கு அச்சு அசலாய்ப் பொருந்திப்போவது போல எனக்கு ஒரு பிரம்மை! (தொலைக்காட்சி விவாத அரங்கம் அதிகம் நான் ஏன் அதிகம் பார்க்கக் கூடாது என்று என் மனைவி சொல்லும் ஆய்வுரைக்கு அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.)

ஜோதிசம் என்ற வார்த்தையை விட எனக்குச் சாதகம் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் .வாழ்வதற்கு உரியச் சாதகமான எளிய வழியைச் சொல்லிக்கொடுப்பதே ஜோதிடமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் ஜோதிடம் தவறு என நிரூபிக்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அதை அதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் பார்க்க விடாமல் தடுக்கப்பட்டு ஏதோ ஒரு தவறிழைத்து விட்டார்கள்.நானும் திருவருள் ஜோதிட மையத்தில் ஆசான் சாந்தலிங்கனாரிடம் முதல் ஆறு மாத அடிப்படை ஜோதிடம் எழுதும் அடிப்படைக் கணக்குகள் பயின்று இருக்கிறேன் அது மட்டுமல்ல என்னைச்சுற்றியுள்ள என் நண்பர்கள் சுகுமார் உட்படப் பலரும் இயல்பிலேயே ஜோதிடம் அறிந்தவர்கள் ( சமீபத்தில் சுகுமார்த் தந்த ‘டிப்ஸ்’ – யாருக்காவது சனிப் புத்தியோ, சனித் திசையோ நடந்து கொண்டு இருந்தால் அவர்களை நாய்கள் துரத்தாதாம் !)

எல்லா உயிரும் சமம்.சகல உடல்களும் இந்தச் சூரியக்குயவன் படைத்த மட்பாண்டங்கள்தான் என்பதை ஒத்துக்கொள்ளாத ’பக்கிகள்’, தான் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்று பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விடும் கற்பனையில் செய்த உச்சப் பட்ச மேஜிக் தமாசுகள்கள்தான் - மறைக்கப்பட்ட ஜோதிடவிஞ்ஞானம்.சரித் தலைவலிக்குச் சாப்பிடும் அனாசின் மாத்திரையில் எந்த ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியாத நாம் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம் (வளர்ந்த) உடலின் 206 எழும்போடும் அது எப்படித்தொடர்புடையது என்பதைக் கவனம் செலுத்த நேரமா இருக்கிறது ?.எல்லாத்தையும் லூசில் விட்டு விட்டோம்.

சரி இது கூடப்பராவாயில்லை.ஒருச் செய்திச் சானலில் அன்றாட ஜோதிடப் பலன்கள் சொன்ன ஒரு வேடிக்கையைப் பாருங்கள் அவர் ஒரு 'எண்கலைவித்தகர்', 'ஜோதிடக்கலைமணி' ஆவார். அவர் ஒரு சமயம் ஒரு வசதியான திருமணமாகாதப் பெண்ணுக்குப் பரிகாரம் சொல்லும் போது, ஒவ்வொரு வியாழன் தோறும் குருபகனுக்கு அர்ச்சனைச் செய்யச் சொன்னாராம் அவள் இறைநம்பிக்கை இல்லாதவள் என்பதால் மறுத்து விட்டளாம்.அவளுக்குப் பதிலாக அவள் வீட்டுப் பணிப்பெண்ணை அர்ச்சனைச் செய்யச் சொன்னாராம் அவள் வாரா வாரம் (முதலாளி மேல் உள்ள ) பயப் பக்தியுடன் தனது முதலாளியின் மகளுக்காக அர்ச்சனைச் செய்துவந்தாளாம்.குருப் பார்வை அவள் மேல் பட்டு வீட்டுப்பணிப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து விட்டதாம் ! இது எப்படிக் குரு என்ன அவ்வளவு ”ஜொள் ஜக்கா “ இப்படி எதாவது சொல்லப்போயிதான், வேண்டாம் உன் பழைய பஞ்சாங்கம் பரணில் வை என்று சொல்லப் பகுத்ததறிவாளார்கள் படையெடுக்கிறார்கள்

சரி நான் பார்க்கப்போன விசயத்திற்கு வருகிறேன் ...

ஒரு வழியாய் அவர்களின் ஏழு கிரகங்களையும் துவைத்துத் தொங்கவிட்ட பிறகே அவரின் பார்வை என் மேல் படிந்தது. வணக்கம் சொன்னேன்.சிரமப்படுத்திட்டேனோ ? என்றார். (ஆமாம் என்றாச் சொல்லவா முடியும்? நாழு இடத்தில் வழிக் கேட்டு ஆறு கிலோ மீட்டரல்லவாச் சுற்றியிருக்கிறேன் கடனைத் திருப்பிக் கேட்கும் போது வாய்தாக் கேட்க்கும் போது அணிச்சையாயாய் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரிப்போமே அப்படி ) சிரித்துக்கொண்டேன் .அவரிடம் தயாராய் வைத்து இருந்த பூஜைப் பொருள் பட்டியலை இந்த வருட வாசன் பாஞ்சாங்கப் புத்தகத்திற்குள்ளிருந்து ஆதிசேசன் வாலைபோல உருவித்தந்தார். பவ்வியமாகப் பெற்றுக்கொண்டேன்.இரவு ஒன்பது மணிக்கு நம்ம உதவியாளர்கள் வருவார்கள் சகல ஏற்பாடும் செய்து விடுமாறும் சொல்லியனுப்பினார்.அதோடு அவரின் பூஜைக்கான தொகை எவ்வளவு என்பதையும் வரவாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்ற ரகசியத்தையும் சொன்னார் குரல் தாழ்த்தி சொன்னார் .(பேஷ் பேஷ் நன்னாருக்கு ! )

அதிகாலைப் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் துவங்குவதால் இரவே எல்லா வேலைகளும் முடித்து விடவேண்டும் என ஆரம்பித்தோம் . ஒரு வழியாய் எல்லாம் முடித்து விட்டோம் என்பதாய்ப் பெருமூச்சு விடும் போது இரவு ஒன்பது மணி .அப்போதுதான் மாவிலையும் ,பசுமாட்டின் கோமியமும் இல்லை என்பதை மிகச் சாதரணமாக அலுவலக உதவியாளன் சொல்ல,மீண்டும் ஓட்டம்.. ஒரு இடத்தில் ஒரே ஒரு மாடு இருந்தது.அந்த வீட்டு வாசலில் ஒரு நாய்க் கட்டியிருந்தர்கள் அது எங்களைப்பார்த்து விரோதமாகக் குலைத்துக்கொண்டே இருந்தது.அடுத்த இடத்தில் ஒரு பசுமாட்டுப் பண்ணையே இருந்தது.ஆனால் நாயிற்குப் பதிலாக அதைப் பராமரிக்கும் ஆளின் குரல் அதை விட விரோதமாக இருந்தது ! பாதிப் போதையில் உளற்ற்ற்றினார்... எப்படியோ பாத்திரமும் பணமும் கொடுத்துவிட்டுத் தப்பித்தோம். அதே போல ஒரு வீட்டில் தன்மையாய்ப் பேசி மாவிலைப் பறித்துக்கொண்டோம் இப்படியாகப் பரப்பரப்பு ஓய இரவு பதினொன்றும் ஆகிவிட்டது.

அதற்குள் வந்து இருந்த சுவாமிகளின் (சம்பளம் எவ்வளவு என்று தெரியாத ) உதவியாளார்கள் ஹோமத்திற்கு ,ஈசான்யத்தில் பேப்பர் விரித்து அதன் மேல் தேவையான செங்கல் அடுக்கி மணல் பரப்பிக் கிரகங்களைக் கட்டிப்போட்டு முடிக்கவும் சரியாய் இருந்தது .அவர்கள் விடைபெறும் போது இரவு உணவுக்குப் பணம் கொடுத்து விட்டு,அவர்களிடம் ஏன் சாமி அலைபேசியில் தொடர்புகொள்ள மாட்டேன்கிறார் ? என கேட்டதற்கு வந்த இருவரில் ஒருவர் இன்னொரு உதவியாளாரைத் தவித்து விட்டு மெல்ல என் அருகே வந்த அவர் சன்னமான குரலில் ,நோக்குத் தெரியாதா ? போன வாரம் சாமி வீட்டில் பட்டப் பகல்ல மதியம் மூணு மணிக்கு மாமியும், சாமியும் தூக்கிண்டு இருந்த அறைக்குள் யாரோ ஒரு விசமிப் புகுந்துச் இரண்டு செல்ஃபோன், நகை,பணம் அத்தனையும் வாரிண்டுப் போயிட்டான் சாமி பாவம் என்று முடித்தார்.
பாவம் என்று சொல்லும்போது அவர் அதை ஒரு கரிசனத்தில் சொல்ல முயற்சி செய்தார் .ஆனால் அதை மீறி அவர் கண்களில் அந்த நிகழ்வின் மூலம் அதீத ஒரு திருப்தி அடைந்து விட்டதற்கான ஒளி மின்னி மறைந்ததைக் கண்டேன் !

எனக்குள் இன்னொரு முறைப் பதிவின் தலைப்பச் சொல்லிக்கொண்டேன்.

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (26-Feb-16, 7:12 pm)
பார்வை : 387

மேலே