நவீனத்துவம் ---- ஜெயமோகன் கடிதம் --படித்தது
காமத்தைக் குறித்து சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு குறள்
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்
மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது. இயல்பிலேயே அப்படியா அல்லது மனிதன் தன் பண்பாட்டு வளர்ச்சிப்போக்கில் அப்படி உருவாக்கிக்கொண்டானா என்பதை உணர்வது கடினம் . ஆனால் அதைக்குறித்து போகிறபோக்கில் எதையும் சொல்லிவிடமுடியாதென்றே எண்ணுகிறேன். கோட்பாடுகள் வந்து போய்க்கொண்டே இருக்கும். அது என்றென்றும் அதற்கான நுண்ணிய மர்மத்துடன் தான் நீடிக்கும்
காமம் என்றல்ல வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் அதன் உச்சம் அதீதம் நோக்கிக் கொண்டுசெல்ல இயற்கை அனுமதிப்பதில்லை. இயர்கை எல்லாவற்றையும் அதற்கு இணையான எதிர் ஆற்றலால் சமப்படுத்தியே வைத்துள்ளது. அதீதமாக எது சென்றாலும் அந்த எதிர் ஆற்றலும் அதே அளவுக்கு அதீதமாகும். அது அழிவை உருவாக்கும்
காமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இன்பம். அவனுடைய படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண். அவனை உயிர்த்துடிப்புடன் அது வைத்திருக்கிறது. ஆனால் அதன்பொருட்டு அவன் உறவுகளை இழந்தானென்றால், நுண்ணுணர்வுகளை இழந்தானென்றால், அறவுணர்ச்சியை இழந்தானென்றால், ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டானென்றால் காலப்போக்கில் காமத்தையும் இழந்துவிடுவான்.
ஆகவே காமத்தைப்பற்றி மட்டுமல்ல எல்லாவற்றைப் பற்றியும் நான் சொல்வதும் குறளின் உவகையே
‘அகலாது அணுகாது தீக்காய்தல்’
ஜெ