தடை செய்யப்பட்டுள்ள கூட்டு மருந்துகள்-- தேவைதான் இந்தத் தடை
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் அண்மையில் 344 கூட்டு மருந்து, மாத்திரைகளுக்கு (எஃப்.டி.சி.) தடைவிதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு வழக்கம்போல மருந்து உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தை நாடவிருப்பதாகக் கூறியுள்ளனர். இவர்களோடு மருந்து விற்பனையாளர் சங்கங்களும் இணைந்து, அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்து தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றன.
தடை செய்யப்பட்டுள்ள கூட்டு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகம் பாதிக்கப்படுபவை, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள்தான். இந்தத் திடீர் தடையின் மூலம் இந்திய மருந்து வர்த்தகத்தில் ரூ.3,800 கோடி பாதிப்பு ஏற்படும் என்று இவர்கள் சொல்கிறார்கள். இந்தக் கூட்டு மருந்துகளை ஆய்வு செய்த மருத்துவக் குழுவினர், இந்தக் கூட்டு மருந்துகள் நலம் தருபவை என்பதற்கான சான்று கிஞ்சித்தும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில், பட்டியலிட்டுள்ள கூட்டு மருந்துகளின் மூலக்கூறுகளை விவரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மூலக்கூறுகள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடியவை; சாதாரண மக்களுக்குப் புரியாது. உதாரணமாக, நெமிசுலைட் + செட்ரிசைன் + காஃப்பைன் கூட்டு மருந்து, டைசைக்லோமைன் + டிரமட்டால் + பாராசிட்டமால் கூட்டு மருந்து உள்ளிட்டவை குறித்து சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் பட்டியலோடு, தற்போது மருந்துக் கடைகளில் புழக்கத்தில் உள்ள க்ரோசின் கோல்டு அன்டு ஃபுளு, டி-கோல்டு டோட்டல் உள்ளிட்ட மாத்திரை, மருந்துகளின் வணிகப் பெயர்களை வெளியிட்டால் மட்டுமே, சாதாரண மக்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரியும். இல்லாவிட்டால் இது வெறும் மருத்துவ உலகம் சார்ந்த, யாருக்கும் தெரியாத ஒன்றாக முடிந்துபோகும்.
இந்த ஆய்வுகளின் அறிக்கை குறித்து மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு அமைப்பு குறிப்பிடும்போது, வலி நிவாரணிகளில் வணிகச் சந்தையில் உள்ள கூட்டு மருந்துகளில் 73% மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெறாதவை என்று கூறுகிறது. அப்படியானால், இத்தனைக் காலம் இதை ஏன், எப்படி அனுமதித்தார்கள்? இதை உற்பத்தி நிலையிலேயே தடுத்திருக்க வேண்டாமா? அல்லது மருந்து விற்பனைக் கடைகளில் ஆய்வுகள் நடத்தி பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? வெறும் அறிக்கை அளிப்பதால் மக்களுக்கு என்ன பயன்?
கூட்டு மருந்து என்பது சில நோய்களுக்கு ஒரு மாத்திரையில் அனைத்து மூலக்கூறுகளையும் சேர்த்து வழங்குவது. ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தால், இரண்டுக்கும் சேர்ந்து மருந்து வழங்கப்படுவது மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய முடிவு. ஆனால், வெறும் காய்ச்சல் மட்டுமே உள்ளவர், ஏன் சளிக்கும் சேர்த்து மருந்து சாப்பிட வேண்டும்? அல்லது வலி நிவாரணியையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்? இந்தியாவில் தேவைப்படாத நோய்க்கும் சேர்த்து மருந்து சாப்பிடும் நிலைதான் மிக அதிகமாக காணப்படுகிறது என்கின்றன ஆய்வுகள். இந்த நிலைமை இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ கிடையாது. அமெரிக்காவில் கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
கூட்டு மருந்துத் தடையை எதிர்க்கும் மருத்துவர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், இதுநாள் வரை இந்த மாத்திரைகளை சாப்பிட்டுவந்த நோயாளிக்கு திடீரென்று இந்த மாத்திரை கிடைக்காமல் போனால் மிகவும் சிரமத்துக்கு ஆளாவார் என்று கூறியுள்ளார். நாங்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் நான்கு மூலக்கூறுகளை தனித்தனியாக எழுத வேண்டியிருக்கும், இதனால், நோயாளிகளின் மருந்துப் பட்டியல் நீளும் என்கிறார். இந்த அபரிமித கரிசனம் ஏற்கக்கூடியதாக இல்லை.
மருந்து விற்பனையாளர் சங்கத்தினரின் ஒரு கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியது. எந்தெந்த வணிகப் பெயரில் விற்பனையாகும் மாத்திரைகளில், எதில் தடைசெய்யப்பட்ட கூட்டு மருந்து உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். அதிலும் குறிப்பாக இந்த மாத்திரை, மருந்துகளை தனியாகப் பிரித்து வைத்து, அதை விநியோகித்த நிறுவனத்திடம் திருப்பிக்கொடுத்து பணத்தை மீட்பது மிகவும் கடினம் என்கிறார். இதற்கெல்லாம் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்கிறார்கள். மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெறாத மாத்திரைகளை வாங்கி, 40 - 50 சதவீத லாபத்துக்கு விற்பனை செய்தவர்கள், இந்த இழப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
வணிகப் பெயர் கொண்ட மருந்துகளுக்குப் பதிலாக அடிப்படை ரசாயனக் கூறுகளை (ஜெனரிக்) பரிந்துரைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் இந்தத் தடை கொண்டுவரப்பட்டாக வேண்டும்.
தற்போது அனுமதியில்லாத கூட்டு மருந்துகள் தயாரித்தவர்கள் அனைவரையும் அரசுக்குத் தெரியும். ஆனாலும், ஒருவரைக்கூட கைது செய்யவில்லையே. எந்தவொரு மருந்து உற்பத்தியாளர் அல்லது அனுமதி பெறாத மருந்துகளை விற்ற மருந்துக் கடைகள் மீதும் நடவடிக்கை இல்லையே ஏன்? இத்தனை ஆண்டுகள் இப்படியொரு தவறு நடப்பது தெரிந்தும் முந்தைய அரசுகள் வாளாவிருந்தது ஏன்? இதிலும்கூட பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்குமோ?
கஞ்சா, அபினி விற்பனை செய்பவரை உடனடியாகக் கைது செய்து சிறையிலிட முடிகிறது. அனுமதி பெறாத மாத்திரைகளைத் தயாரித்து, விற்க தடை விதிக்கப்படுகிறதே தவிர, இதுவரை அத்தொழில் புரிந்தவர்களைக் கைது செய்ய முடிவதில்லை. அதுதான் ஏன் என்று புரியவில்லை!