தமிழில் மகாபாரதம்தொகுப்பு ----

தமிழில் மகாபாரதம்[தொகு]
சின்னமனூர் செப்பேடு என்ற பழையசாசனமொன்றில் பாண்டியர்களின் பழைய வரலாற்றைச் சொல்கின்றபோது[2]:

"மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்....."

என்று குறிப்பிடுகிறது. செப்பேடுகள் கூறுவது சங்ககாலமாக இருக்கலாம். ஆனால் அக்காலத்தில் அதனைத் தமிழ்ப்படுத்திய புலவர் யார் என்பதும் தெரியவில்லை. அந்த நூலும் கிடைக்கவில்லை.

பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை.

பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.

இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன.

அதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருடையது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது.

அ. லெ. நடராஜன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் சோ "மஹாபாரதம் பேசுகிறது" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார்.[3]

இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

ஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில்[4] தினமும் தொடராகப் பதிவேற்றப்படுகிறது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் தொகுதி முதற்கனல், நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

எழுதியவர் : (20-Mar-16, 11:01 pm)
பார்வை : 157

மேலே