திருக்கோவையார் பக்திநூலா - சித்தாந்தரத்தினம் கலாநிதி க கணேசலிங்கம்

(அவுஸ்திரேலியாத் தலைநகர் கன்பராவில் 27-02-2016-ல் நடைபெற்ற திருமுறை விழாவில் ஆற்றிய தலைமையுரையின் சுருக்கம்)
திருவாசகமும் திருக்கோவையாரும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த இரு நூல்கள். இரண்டும் தோத்திர நூல்களாகக் கொள்ளப்பட்டு, எட்டாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன.

திருவாசகம் 650 பாடல்கள் கொண்டு, படிப்பவர் மனத்தை உருகச் செய்யும் தலைசிறந்த ஒரு பக்தி நூலாகத் திகழ்கிறது. எளிதில் விளங்கக் கூடிய இனிய தமிழ் நடையில் ஆக்கப்பட்டது அது.

திருக்கோவையார் 400 பாடல்கள் கொண்ட, உலகியல் வாழ்வு தொடர்பான, காதல் பற்றிக் கூறும் ஒரு அகத்திணை இலக்கிய நூல். (திணை – ஒழுக்கம்). இளம் வயதில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காணுதல், உணர்ச்சி வசப்படுதல், உள்ளம் கலத்தல், காதலித்தல், திருமணம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கோர்க்கப்பட்டதால் கோவை எனப்படுகிறது.

காதல் வாழ்வு பற்றிப் பேசும் திருக்கோவையார் பக்தி நூலா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடையளிப்பது என் நோக்கமல்ல. இக்கேள்வியின் மூலம் திருக்கோவையார் பற்றிய சில குறிப்புக்களையும் விளக்கங்களையும் தந்து, அதனை அறிவதில் உங்கள் ஆர்வத்தைத் தூண்ட விழைகிறேன்.

திருவாசகம் போல் எளிதில் விளங்க முடியாத, சங்க இலக்கியம் போன்ற நடை கொண்டது திருக்கோவையார். ஆயினும் மணிவாசகரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கு இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது. திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையைக் குறிப்பிட்டு, ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’, என இறைவன் கேட்க, அவர் பாடியதாக வாய்வழி வந்த ஒரு கதை உண்டு.

திருவெம்பாவையில் வரும் கன்னியர் சிவனையும் சக்தியையும் போற்றுகிறார்கள். சிவனடியாரை மணக்க வேண்டி, ‘உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம்’ என்றெல்லாம் பாடுகிறார்கள். திருக்கோவையாரின் ஒவ்வொரு பாடலிலும் சிவனும் தில்லையும் ஏதோ ஒரு வகையில் இடம்பெறுகின்றன. இதனால் அது ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்றும் கூறப்படுவதுண்டு. சிற்றம்பலம் என்ற சொல், சித், அம்பலம் என்ற சொற்களால் ஆனது. (சித் - ஞானம், அறிவு; அம்பலம் - அம்பரம், வெளி). சிதம்பரம் என்பதும் இதனையே குறிக்கிறது.

சங்க இலக்கியம் போன்ற நடை கொண்ட திருக்கோவையார்ப் பாடல்களை விளங்குவதற்குப் பழந்தமிழ்க் கவிதைகளில் பயிற்சி தேவை. கவிதைத் தமிழில் வளர்ந்த அளவிற்கு வேறெந்த மொழியிலும் வளரவில்லை எனலாம். இனிமையும் கற்பனையும் பொருள் வளமும் கொண்டவை தமிழ்க் கவிதைகள். திருக்கோவையார்ப் பாடல்கள் இத்தகையவை. பின்வரும் பாடல் அடிகள் ஒரு உதாரணம்.

‘மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லல்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறியேன்’.

தலைமகளைப் பற்றிக் கேட்ட தலைமகனுக்கு, தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதில், தலைவி எங்கு சென்றாள் என்ற குறிப்புத் தனக்குத் தெரியாது எனத் தோழி கூறுகிறாள். தலைவியை ‘கருங்கண்ணி’ என்று காட்டுகிறாள். இதற்கு முன்னுள்ள சொற்களெல்லாம் கற்பனை மிக்க அடைமொழிகளாக அமைந்துள்ளன. ‘மானின் பார்வை(யை) ஆளுகின்ற மெல்லிய நோக்கை உடைய உமாதேவியைப் பங்கெடுத்த சிவபிரானின் வளம் மிக்க தில்லையில் வளர்ந்த கொவ்வைப் பழம் ஆளும் சிவந்த வாயிதழ் கொண்ட’ என்ற அடைமொழிகளைச் சேர்த்து, ‘கருங்கண்ணி’ அவள் எனத் தலைவி வர்ணிக்கப்படுகிறாள். உமாதேவியின் திருக்கண் நோக்கு மானின் பார்வையையும் தலைவியின் சிவந்த இதழ் உமைபங்கனான சிவனின் தில்லையில் உள்ள கொவ்வையையும் உதாரணமாகக் கொண்டுள்ளன. இத்தகைய திருக்கோவையார்க் கவிதைகள் மணிவாசகரின் தமிழ்ப் புலமையை விளக்குவதாக விளங்குகின்றன.

திருக்கோவையார்; ஆண் பெண் உறவைப் பாடினாலும் விரசமாக எதுவும் இல்லை. சொல்ல வந்த செய்தியில் தில்லையும் தில்லைச் சிவனும் தொடர்பு படுத்தப்படுகின்றன. தலைவியின் அழகிய கண்ணை வர்ணிக்கும் தலைவன் ஈசனிடம் தான் கொண்ட அன்பு போல் அது அகன்றிருப்பதாகக் கூறி மகிழ்கிறான். ‘ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்று’ (பா. 100) என்பது அவன் கூற்று. காதல் பேசினாலும் கடவுள் பக்தி குறையவில்லை.

பக்தி இறைவனுடன் கொள்ளும் தளராத அன்பு. அது பக்தனை இறைவனுடன் இணைக்கும் யோக நெறி. யோகம் என்பதற்கு இணைதல் அல்லது ஒன்றுதல் என்பது பொருள். திருமுறைகள் அனைத்தும் பாராயணஞ் செய்பவரை இறைவனிடம் செலுத்தும் சிறந்த பக்தியோகப் பனுவல்களாகும். பக்திக்குப் பணிந்து வருபவன் பரமன் என்பதை ‘பக்தி வலையில் படுவோன் காண்க’ என்று பாடி மணிவாசகர் விளக்குகிறார்.

இன்று பலவித யோகங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. பக்தி யோகம் ஒன்றே இறைவனுடன் சேர்க்கும் யோகம்; மற்றைய யோகங்கள் எல்லாம், உடம்பைப் பற்றிய பயிற்சிகளே, .
‘பக்தியை வளர்த்த திருமுறைகள் பைந்தமிழையும் வளர்த்தன. பக்தி இலக்கியம் இல்லையேல் தமிழ் இலக்கியத்தில் கணிசமான பகுதி இல்லையென்றாகிவிடும். திருமுறை ஆசிரியர்கள், குறிப்பாக சமயக் குரவர்கள், தம் அருட்பாடல்களினால் இறை நம்பிக்கையுடன் தமிழ் உணர்ச்சியையும் ஊட்டினார்கள்.

சம்பந்தப் பெருமான் ‘இன்தமிழ்’, ‘செந்தமிழ்’, ‘சம்பந்தன் தமிழ்’ ‘திருயெறிய தமிழ்’ என்று தனது பாடல்களைக் குறிப்பிடுகிறார். தன்னைத் ‘தமிழ் ஞானசம்பந்தன்’ என்கிறார். ‘தமிழோ டிசை பாடல் மறந்தறியேன்’ என்று நாவுக்கரசர் சொல்கிறார். ‘நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்’, ‘நாழும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞாசம்பந்தன்’, ‘தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்’ என்று சுந்தரர் பாடுகிறார்.

மாணிக்கவாசகர் தில்லைச் சிற்றம்பலத்தோடு தீந்தமிழையும் போற்றுகிறார். நீண்ட நாட்களாகக் காணாத தலைவனை அவனது தோழன் கண்டு வினவுவதாக இது காட்டப்படுகிறது. ‘கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழ்’ எனத் தமிழ் போற்றப்படுகிறது. கூடல் என்பது சங்கம் வளர்த்த மதுரை. இதனைக் கூறும் திருக்கோவையாரப் பாடல் வருமாறு:

‘சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின்
துறைவாய்; நுழைந்தனை யோ?அன்றி யேழிசைச் சூழல்புக்கோ’ -(பா.20)

இங்ஙனம் தமிழையும் பக்தியையும் வளர்க்கும் திருக்கோவையார் தமிழ் நிலத்தின் ஒருமைப்பாட்டையும் உணர்த்துவதைக் காண முடிகிறது. தலைமகளைத் தலைமகன் முதலில்; கண்டு வியப்புறும் காட்சியை முதற்பாடலில் நூலாசிரியர் காட்டுகிறார். தமிழ் நிலத்தில் பூத்த மலர்கள் கொண்டு கோர்க்கப்பட்ட தெய்வ மாலையொன்று, இளம் பெண்ணாக உருப்பெற்று அன்னநடை பயின்று, மன்மதனின் வெற்றிக் கொடிபோல் ஒளிர்கின்றதே என வியப்படைகிறான்.

‘திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி அனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே’. - (பா.1)

மருதம். நெய்தல், முல்லை, குறிஞ்சி, பாலை ஆகிய ஐவகை நிலங்களைக் கொண்டது தமிழகம். இந்நிலங்களுக்குரிய மலர்கள், முறையே, தாமரை, காவி, குமிழ் (முல்லை), காந்தள், கோங்கு என்பவையாகும். இம்மலர்களைச் சொன்னதால் தமிழகத்தின் ஒருமைப்பாடு குறிக்கப்படுகிறது. முல்லை மலரைக் குறிப்பிடும் போது ‘ஈசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ்’ என அடைமொழி கொடுக்கப்படுகிறது. முல்லை மலர் திருமணத்துக்கு முன் நிகழும் காதலைக் குறிப்பது. அது ‘களவு’ எனப்படும். பின் நிகழ்வது ‘கற்பு’; அதனைக் குறிப்பது மல்லிகை. காதலைப் பாடவந்த மாணிக்கவாசகர் முல்லையைக் கொண்டு வந்து அதையும் சிவனுடனும் தில்லையுடனும் தொடுத்துப் பாடுவது அவரின் தமிழ்ப் புலமையையும் கவித்துவத் திறமையையும் காட்டுவதாக உள்ளது.

இத்தகைய இலக்கிய நயம் மிக்க திருக்கோவையார் பல்வேறு செய்திகளைத் தருகிறது. சக்திக்கு சிவன், தந்தை, மகன் என்ற உறவு முறைகள் சொல்கிறது. இது போன்றவற்றை விளங்குவதற்கு சித்தாந்த அறிவு தேவைப்படுகிறது. சிவனின் அடிமுடி தேடிய கதையில் வரும் திருமால், அடியைக் காணாத நிலையில் அதனைக் காட்டுமாறு சிவனிடம் இறைஞ்ச, அவன் ஒரு அடியை மட்டும் காட்டினான்: திருமாலோ மற்றைய அடியையும் காட்டும்படி வேண்டி தில்லையம்பல வாசலில் வரங்கிடக்கிறான், என்ற ஒரு புதிய செய்தி வருகிறது. இது சிதம்பரத்து வாசலில் உள்ள கோவிந்தராசர் சன்னிதியைக் குறிப்பதாகவுள்ளது.

இவை போன்ற பலவற்றைத் தரும் திருக்கோவையார் காதலொழுக்கம் பற்றிப் பேசுகிறது. தில்லையையும் தில்லைச் சிவனையும் ஒவ்வொரு பாடலிலும் இணைக்கிறது. அது பக்தி நூலா, இல்லையா, என்று முடிவெடுப்பது உங்களைச்; சார்ந்தது.

நன்றி: முதுவை ஹிதயத்

எழுதியவர் : (5-Apr-16, 12:25 am)
பார்வை : 77

மேலே