கண்ணில் பட்ட கவிதை பாப்லோ நெருடா வின் உன் சிரிப்பு

எனது ரொட்டியை எடுத்துச் செல்
விரும்பினால் காற்றையும்
ஆனால்
உன் சிரிப்பினை
என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிடாதே !

அந்த ரோஜாவை எடுத்துச் சென்றுவிடாதே
நீ பறித்திடும் மலரில்
துள்ளித் தெறித்திடும் நீரின் மகிழ்ச்சியில்
உன்னில் பிறந்து வரும்
வெள்ளி அலையினை ....

எனது போராட்டம் கொடுமையானது
நான் திரும்பி வரும்போது
கண்கள் சோர்ந்து விடும்
சில சமயம் இன்னும் மாறாத
இந்த பூமியை பார்க்கும் போது
ஆனால் உன் சிரிப்பு என்னுள் நுழையும் வேளையில்
அது வானத்திற்கு உயர்ந்துவிடும்
என் விருபத்திற்காக...
அது என்னுள்ளே ஆயிரம் வாசல்களைத் திறந்துவிடும்

என் அன்பே ! இருள் படிந்த நேரங்களில்
உனது சிரிப்பு மலர்ந்திடும் ..அப்போது
திடீரென்று தெருவீதிக் கற்களில்
என் இரத்தக் கறைகள் படிந்திருக்கும்
நீ சிரிப்பாய்
ஏனெனில் உனது சிரிப்பு
எனது கரங்களில்
புதியதோர் வாள் !

இலையுதிர் காலங்களில்
உனது சிரிப்பு
கடலின் நுரையாய் பொங்கட்டும் !
இளவேனிலில் என் காதலியே
உன் சிரிப்பு நான் விரும்பிக் காத்திருக்கும்
மலரினைப் போல் இருக்க வேண்டும்
நீல மலரென்றும் ரோஜா என்றும்
எனது நாட்டினை எதிரொலிக்கும் மலராக ..

சிரித்திடுவாய் இரவினில்
நாளினில் அந்த நிலவினில்
சிரித்திடு
வளைந்து நெளிந்து கிடக்கும்
இந்தத் தீவின் தெருக்களைப் பார்த்து
சிரித்திடுவாய்
உன்னை நேசிக்கும்
இந்தக் காம சோமா பையனைப் பார்த்து
நான் கண்களைத் திறந்தால்
நீ என் இமைகளை மூடிவிடு
எனது கால்கள் போகும் திரும்ப வரும்
எனது ரொட்டியை மறுத்துவிடு
காற்றினை ஒளியினை
இந்த இளவேனிலை
ஆனால் ஒருபோதும் மறுத்து விடாதே
உன் சிரிப்பினை ..
நான் இறந்துவிடுவேன் !

-------பாப்லோ நெருடா
நெருடாவின் இத்தாலிய கவிதை
ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து
தமிழில் ---கவின் சாரலன்

எழுதியவர் : பாப்லோ நெருடா (5-Apr-16, 6:25 pm)
பார்வை : 1104

மேலே