சமயோசித புத்தி சிறுகதை

சமயோசித புத்தி..! (சிறுகதை)

வித்யா அவசர அவசரமாக அந்த பீரோவைத் துழாவிக் கொண்டிருந்தாள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு திருமணதிற்கு அணிந்து சென்ற நெக்லசைக் காணவில்லை. சிறு காகிதம் கீழே விழவும் பதட்டத்துடன் குனிந்து எடுத்து பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது...

"அடப்பாவி மனுஷா.. எனக்குன்னு இந்த ஒரு நகைதான் இருந்திச்சி. இதைக்கூட விட்டு வைக்கலையா நீ.." அவள் புலம்பி அழுதபோது அந்த அடமான சீட்டை அவள் கண்ணீர் நனைத்திருந்தது.. குடிகார கணவன் சிநேகிதர்களை சேர்த்துக்கொண்டு இந்நேரம் அடமானத்தில் கிடைத்த பணத்தை குடித்தே அழித்திருப்பான்.

ஒன்றாக கல்லூரியில் படித்த தோழியின் திருமண வரவேற்பிற்கு மகிழ்ச்சியுடன் கிளம்ப ஆரம்பித்தவள் அருகிலிருந்த சோபாவில் சரிந்து அழுதாள். நகை போனது போனதுதான். எப்படி மீட்டு எடுப்பது. அவளின் ஒற்றை சம்பாத்தியம் வீட்டு வாடகைக்கும் வயிற்றைக் கழுவ மட்டும்தான் சரியாக இருக்கிறது.

அந்த கணத்தில் மின்னலடித்த யோசனையில் விருட்டென்று கிளம்பி அடுத்த 5 நிமிடங்களில் இரண்டு தெரு தள்ளி இருக்கும் மாமியார் இல்லம் வந்து நடந்ததைக் கூறி மாமியார் மரகதம்மாளில் இரட்டை வடம் சங்கிலியை வாங்கி அணிந்துகொண்டு தோழியின் திருமண வரவேற்பிற்கு சென்று திரும்பியவள் இரவு கணவனிடம் நகை பற்றி ஒன்றும் கேட்கவில்லை.

மறுதினம் அலுவலகத்திற்கு வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என்று அலைபேசியில் கூறி பெர்மிஷன் பெற்றவள் நேராக மாமியார் இல்லம் சென்றாள்.

"அத்தை உங்க நகையை அடமானம் வெச்சி என் நகையை மீட்டு எடுத்துட்டேன். உங்க பிள்ளை கிட்ட சொல்லி உங்க நகைய மீட்டு எடுத்துகோங்க" என்று மரகதம்மாளின் கையில் இரட்டைவட சங்கிலியை அடமானம் வைத்த ரசீதை திணித்துவிட்டு விருட்டென்று வெளியேறியவளை வாயடைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மரகதம்மாள்.

- நிறைவு -
=======================================================================================================================================
(குறிப்பு: நீண்ட நாட்களாக இந்த கதை என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அமுதசுரபியில் 100 வார்த்தைகளில் கதை பதிவிட கேட்டிருந்தார்கள். 35 நிமிடங்களில் இதனை தட்டச்சு செய்து பதிவு செய்துவிட்டேன். கதையை சுருக்கி எழுதிவிட்டதால் அவளின் உணர்வுகளை முழுவதுமாய் எழுத இயலாது போய்விட்டது அப்போது வருத்தமாக இருந்தது. புத்தகத்தில் என் கதை இருப்பது கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன்.
சகோதரி ஞானி அவர்களுக்கு என் நன்றிகள். ஞானி மிகவும் அன்பானவர். அவரை காணச் சென்றபோது என்னை இழுத்து தன் தோளோடு சாய்த்துக் கொண்டதில் அந்த அன்பு தெரிந்தது. "உங்களின் கவிதை நன்றாக இருக்கிறது" என்று கூறுகையில் மிக மகிழ்ந்தேன். 09-04-2016 தினத்தை எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைத்துக் கொடுத்த அந்த இறைவனுக்கும் எனது நன்றிகள்.)

எழுதியவர் : சொ. சாந்தி (14-Apr-16, 2:55 pm)
பார்வை : 415

மேலே