தமிழ் அவமானமல்ல-அடையாளம்

தமிழகத்தில் தமிழின் நிலை பார்க்கையிலே
என் மனம் வேதனை கொள்கிறது.
பிறநாட்டு மக்களெல்லாம் மதிக்கையிலே
என் மனம் நிம்மதி கொள்கிறது.

தமிழுக்கென்று அரசாங்கம் சட்டங்களை வகுக்கிறது.
ஓட்டுக்காக அழகு பார்க்க, அது தேர்தலோடு மறைகிறது.
தமிழுக்கென்று ஆணைகளை தடபுடலாய் தருகிறது
காகிததில் மட்டும் அது கச்சிதமாய் வாழ்கிறது.

மும்மொழியை கொள்கைக்குள் வைத்தோர்க்கு
மூத்த தமிழ் மொழிக்குப் பெயர் துருப்புச்சீட்டாம்.
செந்தமிழை ஒதுக்கி அதை மண்ணுக்குள் புதைப்போர்க்கு
அதை சாய்த்ததுபோல் ஒரு வெ(ற்)றிக் களிப்பாம்.

எங்கள் தமிழ் சேற்றினிலும் செந்தாமரைதான்.
அது இறப்பதில்லை மேதினியில் இறப்பதில்லை.
பார் அழிந்தும் பிள்ளைத்தமிழ் தவழ்ந்து வரும்.
அது வேர் அழிந்தும் வீரியமாய் விளைந்து வரும்.

தமிழ் மதியா மாந்தரெலாம் மாபுவியில்
தமிழராகப் பிறப்பெடுத்து என்ன பயன்? நானறியேன்.
தமிழ்த்தாய்க்குப் பிறந்திருந்தும் தமிழ் தவிர்ப்போர்
தாய்ப்பாலை குடித்திலரோ நானறியேன்.

எழுதிஎழுதிக் கிழித்தாலும், எழுத்துகளில் பிழையிருந்தால்
அது தமிழ்த்தாய்க்கு நாம் செய்யும் பெரும் பிழையே.
தமிழ் எழுத்தை பிழையின்றி எழுதிடத் தெரியாதோர்
தமிழர் என்று சொல்வதிங்கே வெட்கக்கேடே.

எழுதியவர் : க.அர. இராசேந்திரன் (19-Apr-16, 9:00 am)
பார்வை : 556

மேலே