நம் உரத்த சிந்தனை - வெல்லும் தமிழை விளம்பு - நேரிசை வெண்பா

– ‘நம் உரத்த சிந்தனை’க்கு ஏப்ரல் 2016 போட்டியில் ஏப்ரல் மாத இதழில் வெளியான 10 வெண்பாக்களில் மூன்றை மட்டும் தருகிறேன்.

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

கேட்ட செவிமணக்கும்; கேள்என்ற நாமணக்கும்;
காட்டாத புத்துலகைக் காட்டிமனம் – கூட்டுவிக்கும்
கல்லைக் கனியவைக்கும்; கற்கண்டுச் சொற்சுரங்கம்
வெல்லும் தமிழை விளம்பு! 1 (பரிசு பெற்றது)

சு.பொன்னியின் செல்வன்

பொங்கிக் கடலழித்தும் பொல்லாக் கரையானும்
தங்கி வடமொழி தானழித்தும் – செங்கதிராய்
அல்லோட்டி என்றும் அகிலத்தை ஆட்சிசெய்யும்
வெல்லும் தமிழை விளம்பு! 2

கருமலைத் தமிழாழன்

எம்மொழி எவ்வழியில் வந்தெதிர் நின்றாலும்
தம்மெழில் குன்றாத தன்மையதாய்ச் – செம்மைசேர்
சொல்லமைவு சொற்பொருளால் சோர்விலாது காலமெல்லாம்
வெல்லும் தமிழை விளம்பு! 3

பழ.அரங்கப்பன்

ஏப்ரல் மாத இதழில் பதிவான வெண்பா பாவலர்க்கும், பரிசு பெற்ற பாவலர்க்கும் என் பாராட்டுகள்.

‘நம் உரத்த சிந்தனை’க்கு ஏப்ரல் 2016 போட்டிக்கு நான் அனுப்பிய வெண்பா.

அந்நியன் போலவே ஆங்கிலக்க லப்புடன்
எந்நாளும் பேசிடும் எத்தர்காள் – சுந்தரமாம்
நல்ல தமிழிலே நாவினிக்கப் பேசியே
வெல்லும் தமிழை விளம்பு!

வ.க.கன்னியப்பன்

மே 2016 இதழுக்கான வெண்பாவிற்கு ஈற்றடி 'தலைமைத் தொழிலுழவைத் தாங்கு!'

ஒருவர் ஒரு வெண்பா மட்டுமே அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அட்டையில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
பெயர், விலாசம், அலைபேசி எண் குறிப்பிட வேண்டும்.
நேரிசை வெண்பா மட்டுமே ஏற்கப்படும்.
எழுத்து தளத்திலுள்ள நண்பர்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பதிவிடுகிறேன்.

திரு.கருமலைத் தமிழாழன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

திரு.எசேக்கியல், க.அர.இராசேந்திரன், மெய்யன் நடராஜ், கவின் சாரலன், சியாமளா இராஜசேகர், சரஸ்வதி பாஸ்கரன் சு.அய்யப்பன், விவேக் பாரதி, மதிபாலன் மற்றும் நண்பர்கள் எழுதி அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
நம் உரத்த சிந்தனை,
6, வீரசவார்கர் தெரு, இரமணா நகர், பெரம்பூர், சென்னை 600011

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-16, 11:50 am)
பார்வை : 137
மேலே