கம்பரைக் காப்பி அடித்தேன்

தனிப்பாடல் திரட்டினைப் படித்துக் கொண்டிருந்த பொழுது அதிலிருந்த கீழ்க்கண்ட கம்பனின் பாடல் என் கவனத்தைக் கவர்ந்தது.

மேழி பிடிக்கும்கை; வேல்வேந்தர் நோக்கும்,கை;
ஆழி தரித்தே அருளும்,கை; - சூழ்வினையை
நீக்கும் கை; என்றும் நிலைக்கும் கை; நீடுழி
காக்கும் கை காராளர் கை.--------------------------------- [கம்பர்.]

மேழி= கலப்பை; ஆழி=மோதிரம்; காராளர்=உழவர்;

இதனைப் படித்ததும் இன்றைய உழவர்களின் நிலைபற்றிய எண்ணம் மேலோங்கவே
இதிலுள்ள முன்னிரண்டு அடிகளிலுள்ள, உழவு பற்றிய உயர்ந்த எண்ணத்தை அப்படியே வைத்துக் கொண்டு பின் வந்த இரண்டு அடிகளையும் மாற்றி இவ்வாறு எழுதத் தோன்றியது :

'மேழி பிடிக்கும்கை; வேல்வேந்தர் நோக்கும்,கை;
ஆழி தரித்தே அருளும்,கை; - சூழ்வினை'யால்
தூக்குக் கயிற்றினில் தொங்கிடவே செய்தவர்கள்
ஊக்கா தளியுந்தன் ஓட்டு!----------------------------------------[காளியப்பன்]

கலப்பை பிடிக்கும் கையும், காக்கும் வேந்தர்களும் எதிர் நோக்குகின்ற கையும், மோதிரம் முதலிய ஆபரணங்களை அணிந்து பிறருக்கான உணவுக்கான பயிர்செய்து காப்பாற்றி அருளும் கையும் கொண்டவர்களாகிய உழவர்களை, இன்று அவர்களுக்கு எதிரான சூழ் நிலைகளைத் தோற்றுவித்து.
தூக்குக் கயிற்றினில் தொங்கி உயிர்விடும்படியான நிலைக்குத் தள்ளியவர்களை நினைத்துப் பார்த்து, அப்படிப்பட்ட பாதகர்களை/அவர்களைச் சார்ந்தவர்களை ஊக்கமளித்து ஆதரிக்காமல் உங்கள் ஓட்டுக்களை மற்ற நல்லவர்களுக்கு அளியுங்கள் என்று சொல்வதாக அமைத்து எழுதியது.
===== =======

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (20-Apr-16, 11:30 am)
பார்வை : 1325

மேலே