மார்பரிந்த மங்கை

மார்பரிந்த மங்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

வீரத்தைச் சொல்லுகின்ற புறநா னூற்றில்
-----வியக்கின்ற பலசெய்தி பெண்கள் பற்றி
தீரமுடன் புலிதன்னை முறத்தால் ஓட்டும்
-----திகழ்வீரப் பெண்மணியின் காட்சி காட்டும்
ஆரத்தான் தழுவிட்ட கணவன் ; அண்ணன்
-----ஆர்த்தபெரும் போரினிலே விழுப்புண் பெற்றே
வீரமுடன் மாண்டபின்பு பெற்றெ டுத்த
-----விளங்குமொரு மகனையுமே அனுப்பி வைத்தாள் !

போர்க்களத்தில் மகனிறந்தான் முதுகைக் காட்டிப்
-----போய்பார்ப்பாய் எனும்செய்தி கேட்ட தாயோ
ஆர்த்தெழுந்தாள் புறமுதுகு காட்டி ருந்தால்
-----அவனுக்குப் பால்தந்த மார்ப றுப்பேன்
சீர்த்தமறக் குலப்பெண்நான் என்று ரைத்தே
-----சீறிவந்தே போர்க்களத்தில் மகனைக் கண்டாள்
கூர்வாளால் தைத்தமார்பு காட்சி கண்டே
-----குதூகளித்தாள் பெற்றநாளின் பெரிது வந்தாள் !

அத்தாயின் மரபினிலே வந்த பெண்ணாம்
-----அந்நாளில் தமிழகத்தின் சேர நாடாய்
தித்திக்கும் தமிழ்ப்பண்பில் திளைத்தி ருந்த
-----திருவாங்கூர் என்கின்ற நாடு தன்னில்
வித்தாகத் தாழ்ந்தகுலம் தனிலு தித்த
-----வீரப்பெண் நாஞ்செலியாம் அழகுப் பெண்ணாள்
முத்தாகத் திருவாங்கூர் அரசு தம்மை
-----முன்நின்றே எதிர்த்திட்டாள் மானம் காக்க !

மார்புதனைத் துணியாலே மறைப்ப தற்கு
-----மார்புவரி செலுத்தவேண்டும் என்ற ஆணை
ஊர்தன்னில் விதித்தபோது வெகுண்டெ ழுந்தே
-----உனக்கெதற்குத் தரவேண்டும் என்றே கேட்டாள்
தார்வேந்தன் ஆணையிது என்ற போதும்
----தன்னுடலின் உறுப்புதனை மறைப்ப தற்கு
யார்வந்து கேட்டாலும் வரியைத் தாரேன்
-----யாருக்கும் அஞ்சிநானும் பணியேன் என்றாள் !

பலமுறைதான் அரசாங்கம் கேட்ட போதும்
-----பாவையவள் பணியவில்லை எதிர்த்தே நின்றாள்
நிலமாளும் அரசனவன் ஆணை தாங்கி
-----நிர்ணயித்த வரிதண்ட அலுவ லர்தாம்
குலவிளக்காம் நாஞ்செலியின் வீட்டைத் தேடிக்
----குதிரையிலே வந்திறங்கித் தட்டிக் கேட்கப்
புலப்பண்பாம் தமிழ்வீரம் கொப்ப ளிக்கப்
----புரிந்திட்டாள் ஒருசெயலை வியக்கும் வண்ணம் !

வரிகேட்டு வந்தவனின் கண்கள் முன்பு
----வாழையிலை உள்ளிருந்தே எடுத்து வந்து
அரிவாளால் தன்னிரண்டு மார்ப ரிந்தே
-----அவன்கையில் கொடுத்துயிரை மாய்த்துக் கொண்டாள்
அரிவையவள் செயல்கண்டு மன்னன் வெட்கி
-----அவ்வரியை நீக்கிட்டான் ! புறநா னூற்றுத்
தெரிவையர்தம் வீரமின்றும் வாழ்வ தாலே
-----தெள்ளுதமிழ் மறத்தியர்தாம் சாவ தில்லை !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (20-Apr-16, 6:53 pm)
பார்வை : 413

மேலே