இருமனைவியர் இருந்தும் முருகனுக்கு பிள்ளையொன்றும் பிறக்கவில்லை ஏன் தெரியுமா
உங்கள் அனைவருக்கும் நாரதர் மாங்கனி ஒன்று கொண்டுவந்து அதை சிவபெருமானிடம் கொடுத்து இது ஞானப்பழம், முழுவதையும் ஒருவரே அருந்தவேண்டும்மேன்றும் சொன்னது தான் தெரியுமே.
அவரது இருபிள்ளைகளும் அந்தப்பழம் தனக்கே வேண்டுமென்று அடம்பிடிக்க, சிவபெருமான் அவர்களிருவரிடமும், எவரொருவர் முதன் முதலில் இவ்வுலகை சுற்றிவருகிரானோ அவனுக்கே இப்பழம் உரியது என்று கூறவும், மயில்வாகனன் அங்கிருந்து உடன் கிளம்பி உலகை வலம்வரும் பொழுது, பிரம்ம லோகத்திற்குள் நுழைகிறான்.
கார்த்திகேயன் வந்திருப்பது கூடத் தெரியாமல் பிரம்மதேவன் தன் படைப்புத் தொழிலில் மிகவும் சிரத்தையாக ஈடுபட்டிருந்தார். முருகனுக்கு மனதில் சங்கடம் தோன்ற, பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று கேட்க, பிரம்மன் பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.
இதையறிந்த சிவபெருமானே நேரில் வந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்" என்றார் முருகன்.
அதன்படி சிவபெருமான் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இப்படியாக, சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் பெயர்பெற்றான்.
ஆண்டுகள் பல உருண்டோட முருகனுக்கு திருமணம் ஆகிவிடுகிறது. இருமனைவியர் இருந்தும் அவர்க்கொரு பிள்ளை ஏனில்லை என்றொரு கேள்வி என் மனதில் எழவும், அதை ஒரு கவிதை மூலம் அறுமுகனிடம் கேட்டேன்.
இதோ அந்தக் கவிதையை ஒருமுறை நீங்களும் படியுங்கள்.
வஞ்சித்துறை ..
உனக்கிரு மனைவியர்
வள்ளி தெய்வானை
வலமும் இடமும்
இருப்பதைக் கண்டேன்
உன்னை நான்
வணங்கின வேளை
வேலும் மயிலும்
இருப்பதைக் கண்டேன்
வள்ளி தெய்வானை
இருவர் இருந்தும்
உனக்கொரு பிள்ளை
பிறந்திட வில்லை
ஏன் எனக் கேட்பின்
ஏளனம் செய்வார்
என்றே எண்ணி
உன்னிடம் கேட்டேன்
உண்மையை சொல்ல
கனவில் வாருவாய்
கந்தா நீயே
கடம்பா நீயே
கவிதையில் கேட்டபடி முருகன் என் கனவில் வந்து காரணம் சொன்னார்.
வெண்டுறை ..
இரவின் அமைதியில் உறங்கிய நேரம்
முருகன் வந்தான் கனவில் வந்தான்
வினவிய கேள்விக்கு விடையும் தந்தான்
பிள்ளைப் பருவத்தில் பிரம்மனை சிறையில்
அடைத்த பொழுது ஆத்திரம் கொண்ட
பிரம்மன் சபித்தான் மனைவியர் இருந்தும்
பிள்ளையொன்றும் பிறக்கா தென்று
பிரம்மாவை சிறுபிள்ளையாய் இருந்த சமயம் சிறையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக, பிரம்ம தேவன் அவருக்கு பிள்ளைபெறும் பாக்யத்தைக் கொடுக்கவில்லை என்று கூறவும், நான் விழித்துக்கொண்டேன்.